TASMAC : டாஸ்மாக் வழக்கில் தலையிட மறுத்த உச்ச நீதிமன்றம்.. வாபஸ் பெற்ற தமிழ்நாடு அரசு!
TASMAC Scam Case in Supreme Court | டாஸ்மாக் விவகாரம் தொடர்பாக தொடரப்பட்ட வழக்கில் தலையிட மறுப்பு தெரிவித்துள்ள உச்ச நீதிமன்றம், மாநில உயர் நீதிமன்றமே முடிவு செய்யட்டும் என்றும் கூறியுள்ளது. நீதிமன்றத்தின் இந்த முடிவை அடுத்து வழக்கை வாபஸ் பெறுவதாக தமிழ்நாடு அரசு நீதிமந்த்தில் தெரிவித்தது.

உச்ச நீதிமன்றம்
டெல்லி, ஏப்ரல் 08 : டாஸ்மாக் (TASMAC) விவகாரம் தொடர்பாக தொடரப்பட்ட வழக்கில் மாநில உயர் நீதிமன்றமே (High Court) முடிவு செய்யட்டும் என்றும் உச்ச நீதிமன்றம் (Supreme Court) உத்தரவிட்டுள்ளது. டாஸ்மாக் சோதனைக்கு எதிராக சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை மாற்றக்கோரிய வழக்கில் உச்ச நீதிமன்றம் இவ்வாறு தெரிவித்துள்ளது. இந்த நிலையில், டாஸ்மாக் விவகாரம் தொடர்பாக உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது என்ன என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
டாஸ்மாக் வழக்கில் உச்ச நீதிமன்றம் கருத்து
தமிழ்நாட்டில் டாஸ்மாக் அலுவலகங்களில் அமலாக்கத்துறை நடத்திய சோதனைக்கு எதிராக சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை மாற்றக்கோரி தமிழ்நாடு அரசு மற்றும் டாஸ்மாக் நிர்வாகம் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுக்கள் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீவ் கண்ணா தலைமையிலான அமர்வில் இன்று (ஏப்ரல் 08, 2025) விசாரணைக்கு வந்தது.
இந்த விவாகாரத்தில் முதலில் உயர் நீதிமன்றம் முடிவு செய்யட்டும். அதன் பின்னர், உயர் நீதிமன்ற முடிவின் அடிப்படையில் விசாரனை மேற்கொள்ளலாம் என உச்ச நீதிமன்றம் கூறியது. நீதிமன்றத்தின் இந்த முடிவை அடுத்து தமிழ்நாடு அரசு உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுக்களை திரும்ப பெறுவதாக கூறியது. இந்த நிலையில், இந்த விவகாரத்தில் மனுவை திரும்ப பெற வேண்டும் என்ற தமிழக அரசு தரப்பு கோரியதை ஏற்று வழக்கை திரும்ப பெற அனுமதிக்கிறோம் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.
தமிழ்நாடு டாஸ்மாக் முறைகேடு விவகாரம்
தமிழ்நாட்டில் TASMAC (Tamil Nadu State Marketing Corporation Ltd) நிறுவனம் மது விற்பனையை மேற்கொண்டு வருகிறது. இந்த நிறுவனத்தின் கீழ் மாநிலம் முழுவதும் சுமார் 4,800-க்கும் மேற்பட்ட சில்லறை மதுபான விற்பனை கடைகள் செயல்பட்டு வருகின்றன. இதேபோல, 200-க்கும் மேற்பட்ட எலைட் எனப்படும் உயர் ரக மதுபான கடைகளும் இயங்கி வருகின்றன. இந்த கடைகளுக்கு தேவையான மதுபானங்களை டாஸ்மாக் நிறுவனம் கொள்முதல் செய்து விற்பனைக்காக வழங்கி வருகிறது.
இந்த நிலையில், மார்ச் 6, 2025 அன்று தமிழ்நாட்டில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியது. அதாவது, கரூர் சென்னை உள்ளிட்ட டாஸ்மாக் நிறுவனத்திற்கு தொடர்புடைய சுமார் 25 இடங்களில் சோதனை நடத்தியது. இந்த சோதனையில் டாஸ்மாக் மூலம் சுமார் 1,000 கோடி ரூபாய் அளவுக்கு முறைகேடு நடந்துள்ளதாக அமலாக்கத்துறை தெரிவித்தது. அமலாக்கத்துறையின் இந்த அறிக்கை கடும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், பாஜக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தமிழக அரசு மீது கடும் குற்றச்சாட்டுக்களை முன்வைத்தனர்.
இந்த நிலையில், அமலாக்கத்துறை சோதனைக்கு எதிராக சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை மாற்றக்கோரி தமிழ்நாடு அரசு தாக்கல் செய்த மனுவில் உச்ச நீதிமன்றம் இவ்வாறு கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.