NEET Exemption: நீட் தேர்வு விலக்கு வேண்டுமா..? இதுதான் ஒரே வழி! வேல்முருகன் கொடுத்த ஐடியா..!
Tamizhaga Valvurimai Katchi Velmurugan: நீட் தேர்வு எழுதுவதற்கு எதற்கு பெண்களில் தாலியை அறுக்க வேண்டும். எதற்கு மூக்குத்தியை கழட்ட வேண்டும். எதற்கு தோடு, கொலுசுகளை கழட்ட வேண்டும்..? இது வட இந்தியாவில் உள்ள பீகாரில் நடக்கிறதா என தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் ஆவேசமாக பேசியுள்ளார்.

சென்னை, ஏப்ரல் 9: தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் (Tamil Nadu CM MK Stalin) தலைமையில் இன்று அதாவது 2025 ஏப்ரல் 9ம் தேதி நீட் விலக்கு (NEET Exemption) தொடர்பாக அனைத்துக்கட்சி (All Party Meeting) கூட்டம் நடைபெற்றது. இதில் அதிமுக, பாஜக போன்ற கட்சிகள் புறக்கணித்த நிலையில், காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள் கட்சி, தமிழக வாழ்வுரிமை கட்சி உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் கலந்து கொண்டனர். அப்போது இந்த கூட்டத்தில் பேசிய தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தமிழ்நாட்டில் உயர்கல்விக்கான நுழைவுத் தேர்வுகளை 2006ம் ஆண்டு கலைஞர், சட்டம் மூலம் ரத்து செய்தார் என்றும், இதனால், கல்லூரிகளில் ஏழை, எளிய மாணவர்கள் சேர்க்கை அதிகரித்தது. நீட் நுழைவுத் தேர்வை தொடக்கம் முதலே திமுக எதிர்ப்பு தெரிவித்துவருகிறது. மக்கள் மன்றத்தில் இதற்காக தொடர்ந்து போராடி வருகிறோம். என்றும் தெரிவித்தார்.
வேல்முருகன் ஆவேசமாக பேச்சு:
அனைத்துக்கட்சி கூட்டத்தில் பங்கேற்ற பிறகு தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் பேசுகையில், “சட்டத்துறை, கால்நடை என அனைத்து பாடங்களுக்கும் மத்திய அரசு நுழைவு தேர்வுகளை கொண்டு வந்து தமிழக மாணவர்களுக்கு கிடைக்க வேண்டிய நியாயமான இடங்களை தட்டி பறித்து, வட மாநில இளைஞர்களை தமிழ்நாடு முழுவதும் உள்ள கல்வி நிறுவனங்களில் புகுத்தி வருகிறது. இன்று தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய பல்கலைக்கழகங்களிலும், மருத்துவ கல்லூரிகளிலும் பெரும்பான்மையான இடங்களில் மேனேஜ்மெண்ட் கோட்டா, நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றோம் என்ற பெயரிலும் தமிழர் இல்லாத பிற மாநிலத்தை சேர்ந்த இளைஞர்களின் ஆதிக்கம் அதிகமாகி கொண்டு இருக்கிறது.
அதனால், இங்கு வன்முறை, பண்பாட்டு படையெடுப்பு, கஞ்சா, போதை வஸ்துகளின் கலாச்சாரம் போன்றவை அதிகமாகிறது. அதேமாதிரி இங்கு இருக்கக்கூடிய அரசு வேலைகளில் மத்திய அரசுக்கு பணி செய்யக்கூடிய அதிகார வர்க்கம் நம்முடைய அரசு பணிகளில் உட்கார்ந்துகொண்டு, அதிமுக ஆட்சியில் எப்படி எஸ்.ஐ பதவிக்கு நேரடி தமிழ் வழி படித்தவர்கள் நேரடியாக எடுக்கமுடியாது என்று சொன்னார்களோ..? குரூப் 1, குரூப் 2 போன்ற தேர்வுகளில் எப்படி தமிழ் படிக்க, எழுத தெரியாதவர்கள் அமரலாம் என்று சொன்னார்களோ..? இதெல்லாம் தமிழ்நாட்டின் கல்வி முறைய ஒழிக்கும் செயல்.
தொடர்ந்து, மத்திய அரசு புதிய கல்வித் தொகையை கொண்டு வந்திருக்கிறார்கள். இஸ்லாமியர்களுக்கு எதிராக சிஏஏ சட்டம் உள்ளிட்ட பல்வேறு சட்டங்களை புகுத்துகிறார்கள். அதனால், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழ்நாட்டின் உயர்ந்த பதவிகளில் தமிழ், தமிழ்நாடு, தமிழர் உரிமை, சமூக நீதி, சம நீதி கோட்பாடு உள்ளவர்களை தேர்வு செய்து அமர்த்த வேண்டும்.
கடந்த காலங்களில் அதிமுக ஆட்சியின் வீக்னெஸ்களை பயன்படுத்தி பணிக்கு வந்த அதிகாரிகள் தங்களது மாநில மக்களுக்கு பயன்பெறக்கூடிய வேலைகளை செய்கிறார்கள். நீட் தேர்வு எழுதுவதற்கு எதற்கு பெண்களில் தாலியை அறுக்க வேண்டும். எதற்கு மூக்குத்தியை கழட்ட வேண்டும். எதற்கு தோடு, கொலுசுகளை கழட்ட வேண்டும்..? இது வட இந்தியாவில் உள்ள பீகாரில் நடக்கிறதா..? உத்தரபிரதேசத்தில் நடக்கிறதா..? தமிழர்கள் பண்பாட்டுகுரியவரக்ள். தமிழர்களின் முன்னுரிமையை முன்னெடுக்க தமிழ்நாடு முதலமைச்சர் தலைமையிலான தமிழக அரசு செய்ய வேண்டும். இல்லையென்றால், அவர்களது சிந்தாந்தத்தில் செய்யக்கூடிய அனைத்து வேலைகளையும் பாஜக அரசு செய்து வருகிறது. நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்றால், மத்திய பட்டியலில் இருந்து மாநில பட்டியலுக்கு மாற்ற வேண்டும். ” என்று தெரிவித்தார்.