கோடை விடுமுறை நீட்டிப்பு? அமைச்சர் அன்பில் மகேஷ் சொன்ன முக்கிய தகவல்!
Tamil Nadu Summer Holiday : தமிழகத்தில் கோடை விடுமுறை நீட்டிக்கப்படுவது ஆலோசனை நடந்து வருவதாக அமைச்சர் அன்பில் மகேஷ் கூறியுள்ளார். இன்னும் சில தினங்களில் கோடை விடுமுறை தொடங்க உள்ள நிலையில், அன்பில் மகேஷ் கூறியுள்ளார். எனவே, பள்ளிகள் திறப்பு 2025 ஜூன் 2 அல்லது 3வது வாரத்திற்கு தள்ளிப்போகலாம் என்று கூறப்படுகிறது.

கோடை விடுமுறை
சென்னை, ஏப்ரல் 08: தமிழகத்தில் கோடை விடுமுறை (Summer Holidays In Tamil Nadu) நீட்டிப்பு குறித்து ஆலோசனை நடத்தப்பட்டு வருவதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் (Minister Anbil Mahesh) கூறியுள்ளார். தமிழகம் முழுவதும் இன்னும் சில நாட்களில் பள்ளி மாணவர்களுக்கு கோடை விடுமுறை தொடங்குகிறது. தற்போது கோடை வெயில் கொளுத்துவதால் மாணவர்களுக்கு அளிக்கப்பட்ட விடுமுறை நாட்கள் நீட்டிக்கப்படலாம் என்று தகவல் வெளியாக உள்ளது. இதுகுறித்து ஆலோசித்து முடிவு எடுக்கப்படும் என்று அமைச்சர் அன்பில் மகேஷ் கூறியுள்ளார்.
கோடை விடுமுறை நீட்டிப்பு?
தமிழகத்தில் கல்வியாண்டுக்கான இறுதி தேர்வுகள் நடந்து வருகிறது. இதில், 11,12ஆம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வு 2025 மார்ச் மாதம் தொடங்கி முடிவடைந்தது. இவர்களுக்கு கோடை விடுமுறையும் தொடங்கிவிட்டது. அதாவது, 12ஆம் வகுப்புக்கு 2025 மார்ச் 1ஆம் தேதி முதல் 19 ஆம் தேதி வரை பொதுத் தேர்வு நடந்தது.
11ஆம் வகுப்புக்கு 2025 மார்ச் 4ஆம் தேதி முதல் 21ஆம் தேதி வரை பொதுத் தேர்வு நடந்தது. இதனை அடுத்து, 11,12ஆம் வகுப்புகளுக்கு கோடை விடுமுறை துவங்கிவிட்டது. 10ஆம் வகுப்புக்கு தேர்வு நடந்து வருகிறது. 2025 மார்ச் 26ஆம் தேதி 10ஆம் வகுப்புக்கு தேர்வு தொடங்கிய நிலையில், 2025 ஏப்ரல் 8ஆம் தேதியான இன்றுடன் முடிவடைய உள்ளது.
இதனால், 2025 ஏப்ரல் 9ஆம் தேதி முதல் 10ஆம் வகுப்புகளுக்கு கோடை விடுமுறை துவங்குகிறது. அதே நேரத்தில், 1 முதல் 5ஆம் வகுப்பு மாணவர்களுக்கு 2025 ஏப்ரல் 7ஆம் தேதி ஆண்டு இறுதி தேர்வு தொடங்கியது. இந்த தேர்வு 2025 ஏப்ரல் 17ஆம் தேதி முடிவடைகிறது.
2025 ஏப்ரல் 21ஆம் தேதி வரை தேர்வு நடைபெறுவதாக இருந்த நிலையில், வெயில் காரணமாக பள்ளிக்கல்வித்துறை முன்கூட்டியே முடிக்க முடிவு செய்தது. அதன்படி, 2025 ஏப்ரல் 17ஆம் தேதி முடிவடையும், 2025 ஏப்ரல் 18ஆம் தேதி கோடை விடுமுறை துவங்குகிறது.
அமைச்சர் அன்பில் மகேஷ் சொன்ன முக்கிய தகவல்
மேலும், 6 முதல் 9ஆம் வகுப்பு மாணவர்களுக்கு 2025 ஏப்ரல் 8ஆம் தேதியான இன்று தேர்வு தொடங்கிய, 2025 ஏப்ரல் 24ஆம் தேதி வரை நடைபெறுகிறது. 2025 ஏப்ரல் 25ஆம் தேதி கோடை விடுமுறை தொடங்குகிறது. கோடை விடுமுறை முடிந்து ஜூன் முதல் வாரத்தில் பள்ளிகள் திறக்கப்படும் என்று கூறப்படுகிறது.
ஆனால், கோடை வெயிலில் தாக்கம் அதிகமாக இருப்பதால் பள்ளிகள் திறப்பு தள்ளிப்போகலாம் என்று தெரிகிறது. ஒவ்வொரு ஆண்டும் வெயிலின் தாக்கம் கடுமையாக இருப்பதால் பள்ளிகள் திறப்பை ஜூன் 2 அல்லது 3 வது வாரத்தில் தள்ளிப்போகிறது. அதே போல, 2025ஆம் ஆண்டும் கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் திறக்கப்படும் தேதி தள்ளிப்போகலாம் என்று தகவல் வெளியாகி உள்ளது.
இதுதொடர்பாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பேசுகையில், “பள்ளிகள் திறப்பு தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் ஆலோசனைப்படி முடிவுகள் எடுக்கப்படும். காலநிலை மேலாண்மை குழு இதுகுறித்து பரிந்துரை அளிக்கும். அதன் அடிப்படையில், பள்ளிகள் திறப்பு குறித்து முடிவு எடுக்கப்படும். கோடை விடுமுறை நீட்டிப்பு குறித்தும் முடிவு எடுக்கப்படும்” என்று கூறியுள்ளார்.