தமிழ்நாடு அமைச்சரவை மாற்றம்.. அரசியல் அழுத்தமா? தேர்தல் வியூகமா? என்ன காரணம் ?

Tamil Nadu Cabinet Reshuffle: தமிழ்நாடு அமைச்சரவையில் மீண்டும் மாற்றம் கொண்டுவரப்பட்டுள்ளது. இதில் முக்கியமாக அமைச்சர்களாக இருந்த பொன்முடி மற்றும் செந்தில் பாலாஜி ராஜினாமா செய்துள்ளனர். அதேபோல், மீண்டும் மனோ தங்கராஜிற்கு அமைச்சரவையில் இடம் கொடுக்கப்பட்டுள்ளது. இன்று மாலை ஆளுநர் மாளிகையில் அவர் பதவி ஏற்க உள்ளார்.

தமிழ்நாடு அமைச்சரவை மாற்றம்.. அரசியல் அழுத்தமா? தேர்தல் வியூகமா? என்ன காரணம் ?

அமைச்சரவை மாற்றம்

Updated On: 

28 Apr 2025 12:00 PM

தமிழ்நாடு அமைச்சரவையில் மீண்டும் மாற்றம் கொண்டுவரப்பட்டுள்ளது. கடந்த சில நாட்களாக தமிழ்நாடு அமைச்சரவையில் மாற்றம் செய்யப்படும் எனக் கூறப்பட்டு வந்த நிலையில் நேற்று அதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது. இதில் முக்கியமாக பார்த்தோம் என்றால் அமைச்சர்களாக இருந்த செந்தில் பாலாஜி மற்றும் பொன்முடி (Senthil Balaji And Ponmudi) பதவியில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர். அவர்களது இலாகாக்கள் ஏற்கனவே இருக்கும் அமைச்சர்களுக்கு பிரித்துக் கொடுக்கப்பட்டுள்ளது. அதேபோல் மனோ தங்கராஜ் மீண்டும் அமைச்சராக பதவி ஏற்க உள்ளார். இந்த அமைச்சரவை மாற்றத்திற்கு பல்வேறு காரணங்கள் கூறப்படுகிறது

பதவியா? ஜாமீனா? செந்தில் பாலாஜிக்கு ஏற்பட்ட நெருக்கடி:

முக்கியமாக அதிமுக ஆட்சியில் இருந்தபோது போக்குவரத்து துறையில் வேலை வாங்கி தருவதாக கூறி பணமோசடியில் ஈடுபட்டதாக செந்தில் பாலாஜி மீது வழக்கு தொடரப்பட்டது. அதனைத் தொடர்ந்து திமுக ஆட்சியில் 2023 ஆம் ஆண்டு அமலாக்க துறையினர் சோதனை மேற்கொண்டு அவரை கைது செய்தனர். இந்த வழக்கில் அவர் ஓராண்டு காலத்திற்கும் மேல் சிறையில் அடைக்கப்பட்டார். ஒன்பது மாதங்கள் கிட்டத்தட்ட இலாகா இல்லாத அமைச்சராக தொடர்ந்த வந்த நிலையில் அவர் அமைச்சர் பதவியில் இருந்து விடுவிக்கப்பட்டார். அதனைத் தொடர்ந்து அவருக்கு உச்சநீதிமன்றம் ஜாமீன் வழங்கியது. ஜாமீன் வழங்கிய மூன்று நாட்களிலேயே அவர் மீண்டும் அமைச்சராக பதவியேற்றுக்கொண்டார்

மீண்டும் அமைச்சரான செந்தில் பாலாஜிக்கு எதிராக கடுமையான எதிர்ப்புகள் கிளம்பி வந்தது. அவருக்கு வழங்கிய ஜாமீனை ரத்து செய்ய வேண்டும் என வித்திய குமார் என்பவர் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனு மீது விசாரணை நடத்திய நீதிமன்றம் வெளியில் வந்த 3 நாட்களிலேயே அமைச்சரானதை ஏற்க முடியாது. மேலும் ஜாமின் வேண்டுமா அமைச்சராக நீடிக்க வேண்டுமா என்பது குறித்து 2025, ஏப்ரல் 28ஆம் தேதி அதாவது இன்றைக்குள் அவரே முடிவெடுக்கும்படி உச்சநீதிமன்றம் தெரிவித்திருந்தது. இந்த சூழலில் தான் அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி தனது பதவியை ராஜினாமா செய்ததாகவும், அதனை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் ஏற்றுக்கொண்டதாகவும் நேற்று அதிகாரப்பூர்வமாக ஆளுநர் மாளிகை தரப்பில் அறிவிப்பு வெளியானது.

சர்ச்சை பேச்சால் சிக்கிய பொன்முடி:

இது ஒரு பக்கம் இருக்க தமிழ்நாடு அமைச்சரவையில் மூத்த அமைச்சராக இருந்த பொன்முடி மீது தொடர்ந்து பல சர்ச்சைகள் எழந்த வண்ணம் உள்ளது. 2021 ஆம் ஆண்டு திமுக ஆட்சி பொறுப்பேற்ற பின்பு அவர் மீது தொடர்ந்து சர்ச்சைகள் எழுத வண்ணம் உள்ளது. குறிப்பாக மகளிர் கட்டணம் இல்லா பேருந்து பயணத்தை விமர்சித்தது முதல் அண்மையில் சைவம் வைணவம் பற்றி சர்ச்சையான கருத்துக்கள் தெரிவித்தது வரை லிஸ்ட் நீண்டு கொண்டே உள்ளது. சமீபத்தில் மதரீதியான கருத்துக்கள் தெரிவித்த அமைச்சர் பொன்முடி மீது கடுமையான விமர்சனங்கள் எழுந்த நிலையில் அவர் கட்சியில் வகித்து வந்த துணைப் பொதுச் செயலாளர் பதவியில் இருந்து நீக்கப்பட்டார். ஆனால் அமைச்சராக நீடித்து வந்தார்

இதையடுத்து 2025, ஏப்ரல் 17ஆம் தேதி சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் அமைச்சர் பொன்முடி மீது வழக்கு பதிவு செய்யாதது ஏன் என்றும், இந்த வழக்கில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யவில்லை என்றால் தாமாக முன்வந்து நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் குறிப்பிட்டிருந்தார். அதேபோல் மீண்டும் 2025, ஏப்ரல் 22 ஆம் தேதி இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது காவல்துறை ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என்ற கேள்வியை எழுப்பி தலைமை நீதிபதிக்கு பரிந்துரை செய்வதற்காக பதிவு துறைக்கு உத்தரவிடுவதாகவும் குறிப்பிட்டிருந்தார்.

இதை தவிர அவர் மீது ஏற்கனவே சொத்து குவிப்பு வழக்கும் உள்ளது. அது தொடர்பான விசாரணையும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இப்படி செந்தில் பாலாஜி மற்றும் பொன்முடி மீது வழக்குகள் விசாரணையில் இருக்கும் நிலையில் அவர்கள் அமைச்சராக நீடித்து வந்தது, தமிழக அரசுக்கு அழுத்தம் கொடுக்கும் வகையில் நீதிமன்றங்கள் கேள்வி எழுப்பியதும் அவர்கள் ராஜினாமா செய்வதற்கான முக்கிய காரணம் என கூறப்படுகிறது.

தமிழக சட்டமன்ற தேர்தல்:

மேலும் அடுத்த ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் இந்த சர்ச்சைகள் இடம்பெறாமல் இருக்க இந்த மாற்றங்கள் கொண்டுவரப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இவர்கள் அமைச்சராக தொடர்ந்தால் மக்கள் திராவிட முன்னேற்றக் கழக கட்சியின் மீது இருக்கக்கூடிய நம்பிக்கை குறையும் என்றும் சட்டமன்றத் தேர்தலில் அது சிக்கலை உருவாக்கும் என்றும் அரசியல் வல்லுனர்கள் கூறுகின்றனர். தற்போது செந்தில் பாலாஜி வகித்து வந்த மின்சாரத்துறை போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கருக்கு கூடுதலாக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அமைச்சர் முத்துசாமிக்கு மதுவிலக்கு மற்றும் ஆயத்துறையும் கூடுதலாக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதேபோல், அமைச்சர் பொன்முடி வகித்து வந்த வனத்துறை, அமைச்சர் ஆர்.எஸ் ராஜகண்ணப்பனுக்கு கூடுதலாக ஒதுக்கீடு செய்யட்டுள்ளது.

இது ஒரு பக்கம் இருக்க மனோ தங்கராஜ் மீண்டும் அமைச்சரவையில் இடம்பெற்றுள்ளார். கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் மனோ தங்கராஜ் அமைச்சரவையில் இருந்து நீக்கப்பட்ட நிலையில் மீண்டும் அமைச்சராக இன்று மாலை ஆளுநர் மாளிகையில் தமிழ்நாடு முதலமைச்சர் முன்பு பதவி ஏற்க உள்ளார். அடுத்த ஆண்டு வரும் சட்டமன்றத் தேர்தலை கருத்தில் கொண்டு கன்னியாகுமரி மாவட்டத்தில் எந்த அமைச்சரும் இல்லை என்ற கருத்துக்கள் நலவி வந்த நிலையில் அவருக்கு மீண்டும் அமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளது. அவர் ஏற்கனவே வகித்து வந்த பால்வளத்துறை இவருக்கு மீண்டும் ஒதுக்கீடு செய்யப்படலாம் எனவும் தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது

அமைச்சர்களாக இருந்த செந்தில் பாலாஜி மற்றும் பொன்முடி அமைச்சரவையில் நீடித்தால் அது சரிப்பட்டு வராது என்றும் கட்சியினருக்குள்ளையே கருத்து வேறுபாடுகள் இது தொடர்பாக நிலவி வந்ததாகவும் தகவல்கள் வெளியானது. ஏற்கனவே திமுக கூட்டணியில் இருக்கும் கட்சிகளுக்கிடையே கருத்து வேறுபாடுகள் இருக்கும் நிலையில் தற்போது கட்சியினருக்குள்ளேயே ஒருமித்த கருத்து இல்லை என்ற நிலையும் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. அடுத்த ஆண்டு வரும் சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்வதற்காக அனைத்து கட்சிகள் தரப்பிலும் அதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. குறிப்பாக எதிர்கட்சியாக இருக்கும் அதிமுக பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம் பெற்றுள்ளது.

எப்படியாவது தமிழகத்தில் ஆளும் கட்சியான திமுகவை கவிழ்க்க வேண்டும் என்பதற்காக ஆயத்தமான பணிகளை மேற்கொண்டு வருகிறது. அதேபோல் தமிழக வெற்றி கழகம் தரப்பிலும் பூத் கமிட்டி அமைப்பது போன்ற பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் தொடர்ந்து அடுத்த ஆண்டு தேர்தலை சந்திப்பதற்காக மக்களை கவரும் வகையில் மேடைப் பேச்சுக்கள் கொடுத்து வருகிறார். இப்படி அரசியல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ள நிலையில் தான் தற்போது மீண்டும் அமைச்சரவை மாற்றம் கொண்டுவரப்பட்டுள்ளது. 2021 ஆம் ஆண்டு திமுக அரசு பொறுப்பேற்ற பின்னர் பலமுறை அமைச்சரவை மாற்றம் செய்யப்பட்டு இருந்தாலும் இம்முறை மூத்த அமைச்சராக இருந்த பொன்முடி மற்றும் செந்தில் பாலாஜி ராஜினாமா அரசியல் வட்டாரங்களில் பேசும் பொருளாக மாறி உள்ளது.

Related Stories
நெருங்கும் தேர்தல்.. சொத்து குவிப்பு வழக்கில் சிக்கும் 6 அமைச்சர்கள்.. விசாரணையை தொடங்க நீதிமன்றம் உத்தரவு..
Tamil Nadu Cabinet Reshuffle: மீண்டும் அதே இலாகா..! அமைச்சராக பொறுப்பேற்ற மனோ தங்கராஜ்.. பால்வளத்துறை ஒதுக்கீடு!
Pollachi Case Verdict: பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கு.. வருகின்ற மே 13ம் தேதி தீர்ப்பு என அறிவிப்பு!
அமைச்சர் ஐ.பெரியசாமி விடுதலை ரத்து.. மீண்டும் சிக்கலில் அமைச்சரவை.. சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி!
காஷ்மீர் போன்ற ஒரு சம்பவம் தமிழ்நாட்டில் நடைபெறாது.. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதி!
தமிழகத்தில் கத்திரி வெயில் எப்போது முதல் தொடக்கம்..? வெப்பநிலை 4 டிகிரி வரை அதிகரிக்க வாய்ப்பு