Nainar Nagenthran: தமிழ் புத்தாண்டு வாழ்த்து கூறாதது ஏன்..? முதல்வருக்கு நயினார் நாகேந்திரன் கேள்வி!
Tamil New Year 2025: தமிழ் புத்தாண்டு 2025 ஐ உலகெங்கிலும் உள்ள தமிழ் சமூகங்கள் கொண்டாடி வரும் நிலையில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழ் புத்தாண்டு வாழ்த்து தெரிவிக்காதது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், ஸ்டாலினின் இந்த மௌனத்தை கண்டித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். ஆங்கில புத்தாண்டு வாழ்த்து தெரிவித்த ஸ்டாலின், தமிழ் புத்தாண்டை புறக்கணிப்பது தமிழர்களை அவமதிப்பதாக நயினார் நாகேந்திரன் குற்றம் சாட்டியுள்ளார்.

சென்னை, ஏப்ரல் 14: உலகம் முழுவதும் உள்ள தமிழ் சமூகங்களும், தமிழ்நாடும் (Tamil Nadu) இன்று அதாவது 2025 ஏப்ரல் 14ம் தேதி தமிழ் புத்தாண்டை கொண்டாடி வருகிறது. தமிழ் மாதமான சித்திரையின் முதல் நாளை குறிக்கும் தமிழ் புத்தாண்டு (Tamil New Year). ஒரு நாட்காட்டி சுழற்சியின் தொடக்கமாக மட்டுமல்லாமல், வாழ்க்கையை புதிதாக தொடங்குவதாகவும், புத்துணர்ச்சியை தருவதாகவும் நம்பப்படுகிறது. கோயில்கள் மலர்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளன, வீடுகள் கோலங்களால் ஒளிர்கின்றன. இதையடுத்து, உலகெங்கிலும் உள்ள தமிழ் சமூகங்கள் கொண்டாட்டங்கள் மற்றும் மனமார்ந்த வாழ்த்துக்களுடன், தமிழ் புத்தாண்டை கொண்டாடி வருகின்றன. இந்தநிலையில், ஆங்கில புத்தாண்டுக்கு (New Year) வாழ்த்து தெரிவிக்கும் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தமிழ் புத்தாண்டுக்கு ஏன் வாழ்த்து தெரிவிக்கவில்லை என்று தமிழ்நாடு பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கேள்வி எழுப்பியுள்ளார்.
நயினார் நாகேந்திரன் அறிக்கை:
இதுகுறித்து தமிழ்நாடு பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் வெளியிட்ட அறிக்கையில், “ ஆண்டுதோறும் ஜனவரி 1ம் தேதி ஆங்கில புத்தாண்டுக்கு உற்சாகமாக வாழ்த்துகளை பகிரும் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், சித்திரை 1ம் தேதி மௌன விரதம் இருப்பது தமிழர்களை அவமதிக்கும் கீழ்த்தரமான செயல். தமிழர் வாழ்வியல் பண்டிகையை புறக்கணிக்கும் முதலமைச்சரை, தமிழ்நாடு புறக்கணிக்கும்!
நயினார் நாகேந்திரன் ட்விட்டர் போஸ்ட்:
ஜனவரி 1 அன்று உற்சாகமாக வாழ்த்துகளை பகிரும் முதல்வர் @mkstalin அவர்கள், சித்திரை 1 அன்று மௌன விரதம் இருப்பது தமிழர்களை அவமதிக்கும் கீழ்த்தரமான செயல்! தமிழர் வாழ்வியல் பண்டிகையை புறக்கணிக்கும் முதல்வரை, தமிழகம் புறக்கணிக்கும்! pic.twitter.com/CqgdekxVoh
— Nainar Nagenthiran (@NainarBJP) April 14, 2025
ஒட்டுமொத்த உலகமும் தமிழர்களுக்கு புத்தாண்டு வாழ்த்துகளை கூறி வரும் நிலையில், தமிழ் மொழியின் காவலன் நான் என வீராபாக சொல்லும் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் நண்பகல் கடந்தும் நமது தமிழ்நாடு மக்களுக்கு தமிழ் புத்தாண்டு வாழ்த்துகளை தெரிவிக்காமல் புறக்கணித்து வருகிறார். மேலும், இந்த ஆண்டும் தமிழ்நாடு அரசின் பொதுத்துறை கூட்டுறவு நிறுவனத்தை சார்ந்த ஆவின் பால் பாக்கெட்டுகளில் தமிழ் புத்தாண்டு வாழ்த்துகளை கூட பதிவிடப்படவில்லை. ஆங்கில புத்தாண்டிற்கு அகிலம் முழுவதும் வாழ்த்துமடல் எழுதும் முதலமைச்சர் ஸ்டாலின், பல ஆண்டு காலமாக தமிழர்களின் கலாச்சார கொண்டாட்டமான தமிழ் புத்தாண்டிற்கு வாழ்த்துகளை கூற மனமில்லையா..?
தமிழ் மொழிக்காக உயிரை கொடுக்கும் கழகம் திமுக என விளம்பர வசனம் பேசிக்கொண்டு, நமது தாய் மொழியான தமிழை வெறும் அரசியல் பிழைப்பு மொழியாக மட்டுமே திமுக பயன்படுத்துகிறது என்பதற்கு இதைவிட வேறு என்ன சான்று வேண்டும். தொடர்ந்து, தமிழர்களின் மத-கலாச்சார நம்பிக்கைகளின் மீது சேற்றை வாரி இறைக்கும் திராவிட முன்னேற்ற கழகத்திற்கு வாக்குச்சாவடிகளில் சவுக்கடி கிடைக்கப்போவது நிச்சயம்” என்று பதிவிட்டிருந்தார்.