TVK Vijay: மக்களுக்காக எந்த எல்லைக்கும் போவோம்.. த.வெ.க. தலைவர் விஜய் உறுதி!
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், கோயம்புத்தூரில் நடைபெற்ற பூத் கமிட்டி மாநாட்டில், தனது கட்சி அரசியல் ஆதாயத்திற்காக இல்லாமல், மக்கள் நலனுக்காக செயல்படுவதாகவும், சமரசம் செய்ய மாட்டோம் என்றும் உறுதி அளித்தார். வாக்காளர்களை உற்சாகப்படுத்தி வாக்குப்பதிவை விழாவாகக் கொண்டாடும் மனநிலையை உருவாக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

த.வெ.க. தலைவர் விஜய்
கோவை, ஏப்ரல் 27: தமிழக வெற்றிக் கழகத்தின் (Tamilaga vettri kazhagam) செயல்பாடுகளில் சமரசம் என்ற பேச்சுக்கே இடமில்லை என்றும், மக்களுக்காக எந்த எல்லைக்கு வேண்டுமானாலும் செல்வோம் எனவும் அக்கட்சியின் தலைவர் விஜய் (Thalapathy Vijay) கூறியுள்ளார். கோயம்புத்தூரில் இரண்டு நாட்கள் நடைபெறும் பூத் கமிட்டி மாநாட்டில் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரான விஜய் மற்றும் கட்சியின் மூத்த நிர்வாகிகள் அனைவரும் கலந்து கொண்டனர். இன்று (ஏப்ரல் 27,2025) இரண்டாவது நாள் நிகழ்ச்சி நடைபெற்ற நிலையில் வழியெங்கும் விஜய்க்கு மிகப்பெரிய வரவேற்பை ரசிகர்களும், தொண்டர்களும் பொதுமக்களும் அளித்தனர். தொடர்ந்து நிகழ்ச்சியில் பேசிய விஜய் தன்னுடைய கருத்தை மிக தெளிவாக எடுத்துரைத்தார்.
அதாவது, “நேற்று மீட்டிங்கில் பேசும்போது இந்த சந்திப்பு வெறும் ஓட்டுக்காக மட்டுமே நடப்பது அல்ல என கூறினேன். நம்முடைய தமிழக வெற்றிக் கழகம் அரசியல் ஆதாயத்திற்காக தொடங்கப்பட்ட கட்சி கிடையாது. சமரசம் என்ற பேச்சுக்கு இடமில்லை. அதே சமயம் இதனால் மக்களுக்கு ஒரு நல்லது நடக்கும் என்றால் எந்த ஒரு எல்லைக்கும் சென்று அதை செய்வதற்கு நாங்கள் தயங்க மாட்டோம்.
அண்ணாவை நினைவில் கொள்ளுங்கள்
நம்முடைய ஆட்சி அமைந்ததும் ஒரு சுத்தமான தெளிவான அரசாக இருக்கும். நம்முடைய அரசில் ஊழல் குற்றவாளிகள் இருக்க மாட்டார்கள். அதனால் எந்த ஒரு தயக்கமும் இல்லாமல் தைரியமாக தமிழக வெற்றி கழகத்தின் பூத் ஏஜெண்டுகள் மக்களை அணுகுங்கள். நீங்கள் மக்களை சந்திக்கும்போது அறிஞர் அண்ணா சொன்னதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.
‘மக்களிடம் செல். மக்களிடமிருந்து கற்றுக்கொள். மக்களுடன் வாழ். மக்களுடன் சேர்ந்து திட்டமிடு. மக்களை நேசி. மக்களுக்காக சேவை செய்’ என்பதை தெரிந்து கொள்ளுங்கள். இதை புரிந்து கொண்டு செயல்பட்டால் உங்கள் ஊர் சிறுவாணி தண்ணீர் போல் சுத்தமான ஆட்சி அமையும். தமிழக வெற்றிக் கழகத்தின் இந்த ஆட்சி ஒரு தெளிவான, உண்மையான வெளிப்படையான நிர்வாகத்தை கொண்டிருக்கும். அதனால் இதனை ஒவ்வொருவரும் மக்களிடம் சென்று எடுத்துச் சொல்ல வேண்டும்.
மக்கள் சந்தோஷமாக ஓட்டு போட வேண்டும்
இன்னொரு முக்கியமான விஷயம் என்னவென்றால் வாக்குச்சாவடிக்கை வந்து ஓட்டு போடும் மக்களுக்கு உதவியாக இருக்க வேண்டியது நம்முடைய கடமை. குடும்பம் குடும்பமாக கோயிலுக்கு போவது போல, குடும்பம் குடும்பமாக பண்டிகை கொண்டாடுவது போல, நமக்காக குடும்பம் குடும்பமாக வந்து ஓட்டு போடும் மக்களும் அதை கொண்டாட்டமாக செய்ய வேண்டும். அப்படி ஒரு எண்ணத்தை மக்களுக்கு ஏற்படுத்த வேண்டும். இந்த வெற்றியை நாம் அடைவதற்கு உங்களுடைய செயல்பாடுகள் தான் மிக மிக முக்கியம். நீங்கள்தான் இதற்கு முதுகெலும்பு அதை மனதில் வைத்து செயல்படுங்கள்