எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணனுக்கு பாரத பாஷா விருது!

Bharatiya Basha Award: தமிழின் மிக முக்கிய எழுத்தாளர்களில் ஒருவரான எஸ்.ராமகிருஷ்ணனுக்கு பாரதிய பாஷா விருது கிடைத்திருப்பது தமிழ் இலக்கிய உலகிற்கு கிடைத்த பெருமையாக பார்க்கப்படுகிறது. அவரது நவீன கதை சொல்லும் பாணிக்கு கிடைத்த அங்கீகாரம் என வாசகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணனுக்கு பாரத பாஷா விருது!

எஸ்.ராமகிருஷ்ணன்

Published: 

10 Apr 2025 18:48 PM

இந்தியாவில் சிறந்த எழுத்தாளர்களுக்கு வழங்கப்படும் பெருமைக்குரிய விருதுகளில் ஒன்றாகக் கருதப்படும் பாரதிய பாஷா விருது (Bharatiya Basha Award), இந்த ஆண்டு தமிழின் முக்கிய எழுத்தாளர்களில் ஒருவரான எஸ். ராமகிருஷ்ணனுக்கு (S.Ramakrishnan) வழங்கப்பட்டுள்ளது. இந்தியாவின் பெருமைக்குரிய விருதுகளில் ஒன்றான இந்த பாரதிய பாஷா விருது எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணனுக்கு கிடைத்த உயரிய கௌரவமாக பார்க்கப்படுகிறது. மேலும் அவருக்கு விருதுடன் ரூ.1 லட்சம் பரிசுத்தொகையும், பாராட்டுப் பதக்கமும் வழங்கப்பட்டுள்ளது. இலக்கியம், மொழி வளர்ச்சி மற்றும் கலை வளர்ச்சிக்காக பணியாற்றி வரும் எஸ். ராமகிருஷ்ணனின் பங்களிப்புக்கு சிறப்பு செய்யும் விதமாக இந்த விருது வழங்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அவருக்கு முன்பாக தமிழில் பாடலாசிரியரும் எழுத்தாளருமான வைரமுத்துவிற்கு இந்த விருது அளிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

விருதுநகர் மாவட்டம் மல்லாங்கிணறு பகுதியை சேர்ந்த எஸ்.ராமகிருஷ்ணன், விருதுநகரின் வெயிலையும் அம்மக்களின் வாழ்க்கையையும் உண்மைக்கு நெருக்கமாக தன் படைப்புகளில் பதிவு செய்திருக்கிறார். அவரது சிறுகதை தொகுப்பான வெயிலைக் கொண்டு வாருங்கள் முழுவதும் விருதுநகர் மாவட்ட மக்களின் வாழ்க்கை இயல்பாக பதிவு செய்யப்பட்டிருக்கும். இவர் சினிமாவுக்கு ஆற்றிய பங்கு அளப்பரியது. பதேர் பாஞ்சாலி, அயல் சினிமா, உலக சினிமா, பேசத்தெரிந்த நிழல்கள், சாப்ளினோடு பேசுங்கள், பறவை கோணம், நான்காவது சினிமா, இருள் இனிது ஒளி இனிது ஆகிய பெயர்களில் சினிமா கட்டுரைகளை எழுதியிருக்கிறார்.

சஞ்சாரம் நாவலுக்கு சாகித்ய அகாடமி விருது

இவரது வாசகர்களால் எஸ்.ரா என அழைக்கப்படும் எஸ்.ராமகிருஷ்ணன் இலக்கிய உலகில் மிகவும் பிரபலமானவர். 27 ஆண்டுகளாக பல்வேறு நாவல்கள், சிறுகதைகள், கட்டுரைத் தொகுப்புகள் என தமிழ் இலக்கியத்திற்கு அவர் ஆற்றியிருக்கும் தொண்டு அளப்பரியது . கடந்த 2018 ஆம் ஆண்டு இவர் எழுதிய சஞ்சாரம் என்ற நாவலுக்கு சாகித்ய அகாடமி விருதை பெற்றார். தேசாந்திரி என்ற பெயரில் பதிப்பகத்தையும் நடத்தி வருகிறார்.

இவர் தனது சிறுகதைகள் வாயிலாக தமிழில் ஒரு நவீன கதை சொல்லும் முறையைக் கொண்டு வந்தார். அவரது கதைகளில் மேற்கத்திய இலக்கியங்களின் தாக்கம் அதிகம் இருக்கும். மனிதர்களை கூர்ந்து கவனிப்பதும் நிகழ் கால சம்பவங்களை கூர்ந்து கவனிப்பதும் எழுத்தாளருக்கு மிக அவசியமான ஒன்று என அவர் தெரிவிக்கிறார்.

திரைப்படங்களில் எஸ்.ராவின் பங்கு

தமிழ் திரையுலகில் நேரடியாகவும் மறைமுகமாகவும் அவர் ஆற்றிய பங்கு அளப்பரியது. ரஜினிகாந்த்தின் பாபா, வசந்தபாலனின் ஆல்பம், லிங்குசாமியின் சண்டகோழி, பீமா, இயக்குநர் ஜீவாவின் உன்னாலே உன்னாலே, தாம் தூம், பாலாவின் அவன் இவன் போன்ற படங்களுக்கு கதை வசனம் எழதியிருக்கிறார். இரு குமிழிகள், க்ளீன் போல்டு, திங்கள், பிடாரன் போன்ற குறும்படங்களையும் இவர் இயக்கியிருக்கிறார். தமிழ் இலங்கியத்திற்கு இவர் ஆற்றிய பங்கிற்கு பாரதிய பாஷா விருது உயரிய கௌரவமாக பார்க்கப்படுகிறது.