ஆலங்கட்டி மழைக்கு வாய்ப்பு – வெதர்மேனின் அறிவிப்பால் மக்கள் மகிழ்ச்சி !

Tamil Nadu Weatherman: தமிழ்நாட்டில் வெயில் வாட்டி வதைத்து வரும் நிலையில் ஒரு சில இடங்களில் ஏப்ரல் 11, 12, 2025 ஆகிய இரு தினங்களுக்கு மழை இருப்பதாக தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் அறிவித்துள்ளார். குறிப்பாக ஆலங்கட்டி மழை பெய்யும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஆலங்கட்டி மழைக்கு வாய்ப்பு - வெதர்மேனின் அறிவிப்பால் மக்கள் மகிழ்ச்சி !

மாதிரி புகைப்படம்

Published: 

11 Apr 2025 22:24 PM

கோடைகாலம் துவங்கியுள்ளதால் தமிழ்நாட்டில் (Tamil Nadu) வெயில் வாட்டி வதைத்து வருகிறது. தமிழ்நாட்டில் பெரும்பாலான இடங்களில் இயல்பை விட 2 டிகிரி செல்சியஸ் அதிகமாக பதிவாகிவருவதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் ஏப்ரல் 11, 2025 அன்று முதல் 17, 2025 அன்று வரை மிதமான மழை பெய்யக் கூடும் என வானிலை ஆய்வு மையம் (Regional Meteorological Centre)  அறிவித்துள்ளது மக்களிடையே மகிழ்ச்சி ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக வங்கக் கடல் பகுதியில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி ஏப்ரல் 11, 2025 அன்று வலுவலந்த நிலையில் அடுத்த இரண்டு நாட்களுக்கு தமிழ்நாட்டில் ஒரு சில இடங்களிலும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யக்கூடும் என வானிலை மையம் அறிவித்திருக்கிறது.

இந்த நிலையில் தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தனது பேஸ்புக் பக்கத்தில் மழை குறித்து அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், நீண்ட இடைவேளைக்கு பிறகு டெல்டா பகுதிகளில் மழை பெய்யக் கூடும் எனவும் திருச்சியிலும் மழை பெய்ய வாய்ப்பிருப்பதாகவும் அவர் தெரிவித்தார். சில இடங்களில் பலத்த காற்று மற்றும் ஆலங்கட்டி மழை பெய்யும் எனவும் தெரிவித்தார். மேலும் பெரம்பலூர் பகுதியில் ஆலங்கட்டி மழை பெய்யும எனவும் அவர் குறிப்பிட்டிருக்கிறார். கடந்த சில நாட்களாக வெயில் வாட்டி வதைத்து வந்த நிலையில் வெதர்மேன் பிரதீப் ஜானின் அறிவிப்பு மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

வெதர்மேனின் அறிவிப்பால் மக்கள் மகிழ்ச்சி

முன்னதாக திருப்பத்தூர், சேலம், கள்ளக்குறிச்சி, அரியலூர், பெரம்பலூர் போன்ற மாவட்டங்களில் கடுமையான இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என்றும் வேலூர் மற்றும் சென்னையின் சில பகுதிகளில் சிறிய அளவிலான மழை பெய்திருக்கிறது, நாளை மீண்டும் வழக்கம் போல வெப்பம் அதிகரிக்கும் எனவும் அவர் குறிப்பிட்டிருக்கிறார்.

கடந்த சில நாட்களாக தமிழ்நாட்டில் வெயில் கடுமையாக வாட்டி வதைத்து வருகிறது. குறிப்பாக வெயிலின் தாக்கம் காரணமாக 1 ஆம் வகுபபு முதல் 8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு முன் கூட்டியே தேர்வுகள் நடத்தி விடுமுறை விட வேண்டும் என பள்ளிக் கல்வித்துறை அறிவித்திருந்தது. ​இந்த நிலையில் தமிழ்நாட்டில் வெதர்மேன் மற்றும் வானிலை ஆய்வு மையத்தின் அறிவிப்பு மக்களிடையே பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. 

கடந்த சில நாட்களுக்கு முன் மதுரை, விருதுநகர் மாவட்டங்களில் நல்ல மழை பெய்து வெயிலின் தாக்கத்தை தணித்தது. ஆனால் ஒரு சில நாட்களிலேயே வெயில் மீண்டும் தனது ஆட்டத்தை காட்டியது குறிப்பிடத்தக்கது. மேலும் கோடைகாலங்களில் இடி மின்னல் பாதிப்புகள் அதிகம் இருப்பதால் மழை பெய்யும்போது வெளியில் செல்லாமல் இருப்பது நல்லது. எலக்ட்ரானிக் பொருட்களை பாதுகாப்பாக பயன்படுத்துவதும் அவசியம்.