மெல்ல குறையும் மழை.. வரும் நாட்களில் கொளுத்தப்போகும் வெயில்.. வானிலை மையம் கொடுத்த அலர்ட்

Tamil Nadu Heatwave Alert : தமிழகத்தில் வரும் நாட்களில் வெப்பிநலை 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை உயரும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும், சென்னையில் அதிகபட்ச வெப்பநிலை 37 முதல் 38 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக் கூடும் என்று கூறப்பட்டுள்ளது.

மெல்ல குறையும் மழை.. வரும் நாட்களில் கொளுத்தப்போகும் வெயில்.. வானிலை மையம் கொடுத்த அலர்ட்

வெயில்

Published: 

12 Apr 2025 06:31 AM

சென்னை, ஏப்ரல் 12:  சென்னையில் மழை குறைந்து வெயில் தாக்கம் வரும் நாட்களில் அதிகமாக இருக்கும் என்று வானிலை மையம் (Tamil Nadu Weather Update) கூறியுள்ளது.  அதாவது, அடுத்த 2 நாட்கள் வெப்பநிலை 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை உயரக்கூடும் என வானிலை  மையம் கணித்துள்ளது. தமிழகத்தில் 20225 மார்ச் மாதத்தில் இருந்தே வெயில் படுத்தி எடுத்து வருகிறது. பல மாவட்டங்களில் வெப்பநிலை 100 டிகிரி கடந்து பதிவாகி வருகிறது. இதனால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். மதிய நேரங்களில் வெளியே செல்ல முடியாத அளவுக்கு சூழல் உள்ளது.

வரும் நாட்களில் கொளுத்தப்போகும் வெயில்

அதே நேரத்தில், கடந்த சில தினங்களாகவே பல்வேறு மாவட்டங்களில் மிதமான மழை பெய்து வந்தது. இந்த நிலையில், தமிழகத்தில் வெப்பநிலை 2 முதல் 3 டிகிரி வரை அதிகரிக்கும் என வானிலை மையம் கூறியுள்ளது.  இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பை வெளியிட்டிருக்கிறது.

அதன்படி,  2025 ஏப்ரல் 12ஆம் தேதி முதல் 14ஆம் தேதி வரை தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலையில் பெரிய மாற்றம் எதுவுமில்லை. இருப்பினும் ஓரிரு இடங்களில் வெப்பநிலை உயரக்கூடும் என வானிலை மையம் தெரிவித்திருக்கிறது.

அதே நேரத்தில், மேலும், அதிக வெப்பநிலையும், அதிக ஈரப்பதமும் இருக்கும் நிலையில், ஒருசில இடங்களில் அசௌகரியம் ஏற்படலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.  அதே நேரத்தில் தமிழகத்தில்  ஒருசில இடங்களில் மிதமான மழை பெய்யக் கூடும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.

வானிலை மையம் கொடுத்த அலர்ட்


அதாவது, 2025 ஏப்ரல் 12ஆம் தேதி முதல் 17ஆம் தேதி தமிழகத்தில் மிதமான மழை பெய்யக்கூடும் என்று கூறப்பட்டுள்ளது. இதனால், தமிழக கடலோரப்பகுதிகள், மன்னார் வளைகுடா, குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கி.மீ வேகத்தில் இடையிடையே 55 கி.மீ வேகத்தில் காற்று வீசக்கூடும். இதனால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறது.

கடந்த 24 மணி நேரத்தில் தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 2–4 டிகிரி செல்சியஸ் உயர்ந்துள்ளது என்றும் தமிழகத்தில் வேலூரில் 40.6 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவாகி உள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் இடி, மின்னலுடன் மழை பெய்யலாம் என்று தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் கூறியுள்ளார். அதாவது, திருப்பத்தூர், சேலம், கள்ளக்குறிச்சி, அரியலூர், பெரம்பலூர் பகுதிகளில் மழை பெய்யும் என்றும் மேற்கு மற்றும் தெற்கு தமிழ்நாட்டின் உள்மாவட்டங்களில் ஆலங்கட்டி மழை பெய்யும் என்று கூறியுள்ளார்.