வறுத்தெடுக்கும் வெயில்…. 3 டிகிரி வரை வெப்பநிலை உயரும்.. வானிலை மையம் அலர்ட்!

Tamil Nadu Weather Update : தமிழகத்தில் வெயில் கடுமையாக இருக்கும் நிலையில், அடுத்த 3 நாட்களுக்கு 2 முதல் 3 டிகிரி வரை வெப்பநிலை உயரும் என வானிலை மையம் கணித்துள்ளது. அதே நேரத்தில் தமிழகத்தில் ஒருசில மாவட்டங்களில் லேசான முதல் மிதமான மழை பெய்யக் கூடும் எனவும் கூறியுள்ளது.

வறுத்தெடுக்கும் வெயில்.... 3 டிகிரி வரை வெப்பநிலை உயரும்.. வானிலை மையம் அலர்ட்!

தமிழகத்தில் வெயில்

Updated On: 

11 Apr 2025 06:22 AM

சென்னை, ஏப்ரல் 11: தமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு (Tamil Nadu Heatwave Alert) வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் வரை உயரக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. அதே நேரத்தில் ஒருசில மாவட்டங்களில் மிதமான மழையும் பெய்யம் என வானிலை மையம் கூறியுள்ளது. தமிழகத்தில் கோடை வெயில் வாட்டி வதைத்து வருகிறது. பல்வேறு மாவட்டங்களில் 100 டிகிரி வெப்பநிலை பதிவாகி வருகிறது. இதனால், வெயில் தாங்க முடியாமல் மக்கள் சிரமமடைந்துள்ளனர்.

வறுத்தெடுக்கும் வெயில்

இன்னும் வரும் நாட்களில் வெப்பநிலை கடுமையாக இருக்கும் என வானிலை மையம் எச்சரித்து வருகிறது. சென்னையை பொறுத்தவரை வெப்பநிலை கடுமையாக உள்ளது. இதனால், பகல் நேரங்களில் அத்தியாவசிய தேவையின்றி வெளியே வருவதை தவிர்த்து வருகின்றனர்.

இந்த நிலையில், தமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் வரை உயரக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, 2025 ஏப்ரல் 11அம் தேதி முதல் 14ஆம் தேதி வரை தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை ஓரிரு இடங்களில் 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை அதிகமாக உயரக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையை பொருத்தவரை, 2025 ஏப்ரல் 11ஆம் தேதி வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் அதிகபட்ச வெப்பநிலை 36 முதல் 37 டிகிரி செல்சியஸ் ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 26 முதல் 27 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக் கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

3 டிகிரி வரை வெப்பநிலை உயரும்


அதே நேரத்தில், 2025 ஏப்ரல் 11ஆம் தேதி முதல் 16ஆம் தேதி வரை தமிழகத்தில் ஒருசில மாவட்டங்களில் மிதமான மழை பெய்யக் கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதாவது, மத்திய மேற்கு மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக் கடல் பகுதியில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, தற்போத மத்திய மேற்கு வங்கக் கடல் பகுதியில் வலுகுறைந்து, காற்றழுத்த தாழ்வு பகுதியாக உள்ளது.

இது அடுத்த 12 மணி நேரத்தில் படிப்படியாக வலுவிழக்கக்கூடும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதனால் தமிழகத்தில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. தமிழகத்தில் 2025 ஏப்ரல் 10ஆம் தேதி 9 இடங்களில் வெயில் சதமடித்துள்ளது.

அதிகபட்சமாக வேலூரில் 105 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகி உள்ளது. மேலும், ஈரோட்டில் 104 டிகிரி செல்சியஸ், திருச்சியில் 102 டிகிரி செல்சியஸ், சென்னையில் 101 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகி உள்ளதாக வானிலை மையம் கூறியுள்ளது. இதற்கிடையில், அடுத்த 5 நாட்களுக்கு தமிழகத்தில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும் என தமிழ்நாடு வெதர்மேன் கூறியுள்ளார். குறிப்பாக, வட தமிழகத்தில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும் என எச்சரித்துள்ளார்.