அடுத்த 5 நாட்கள்.. பலத்த காற்றுடன் கொட்டப்போகும் மழை.. லேட்டஸ்ட் வானிலை அப்டேட்!
Chennai Weather Update : சென்னையில் 2025 ஏப்ரல் 18ஆம் தேதியான இன்று ஒருசில பகுதிகளில் லேசான முதல் மிதமான மழை பெய்யக் கூடும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது. அதே நேரத்தில் 28 டிகிரி செல்சியஸை ஒட்டியும் வெப்பநிலை இருக்கக் கூடும் என்று கூறப்பட்டுள்ளது.

சென்னை, ஏப்ரல் 18: தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு பல்வேறு இடங்களில் மிதமான மழை பெய்யக் கூடும் (Tamil Nadu Weather Forecast) எனவும் குறிப்பாக, சென்னையிலும் மிதமான மழை பெய்யக் கூடும் எனவும் வானிலை மையம் கூறியுள்ளது. தமிழகத்தில் 2025 பிப்ரவரி மாதத்தில் இருந்தே கோடை வெயில் கொளுத்தி எடுத்து வருகிறது. பிப்ரவரி மாத இறுதிலேயே வெப்பநிலை 100 டிகிரியை கடந்து பதிவானது. அதன்பிறகு, மார்ச் முதல் தற்போது வரை வெயிலின் தாக்கம் கடுமையாக இருக்கிறது. இதனால், மக்கள் சிரமத்தை எதிர்கொண்டு வருகின்றனர்.
அடுத்த 5 நாட்கள்…
ஆனால், அவ்வப்போது மழையும் பெய்து வருகிறது. இதனால், வெப்ப அனல் கொஞ்சம் தணிகிறது. கடந்த ஒரு வாரமாக தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் லேசான முதல் மிதமான மழை பெய்து வருகிறது. தலைநகர் சென்னையில் கூட சமீபத்தில் மழை கொட்டியது.
10 ஆண்டுகளுக்கு பிறகு ஏப்ரல் மாதத்தில் இவ்வளவு மழை கொட்டி இருக்கிறது. அந்த ஒரே நாளில் மட்டுமே 10 செ.மீ மழை பெய்திருக்கிறது. இந்த நிலையில், 2025 ஏப்ரல் 18ஆம் தேதியான இன்றும் சென்னையில் மழைக்கு வாய்ப்புள்ளதாகவும், தமிழகத்தில் பல்வேறு மாவட்டத்தில் 2025 ஏப்ரல் 23ஆம் தேதி வரை மழைக்கு வாய்ப்புள்ளது என்றும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.
தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி நிலவுகிறது. இதன் காரணமாக, 2025 ஏப்ரல் 18ஆம் தேதி முதல் 23ஆம் தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் மணிக்கு 30 முதல் 40 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த காற்றுடன் மழை பெய்யும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பலத்த காற்றுடன் கொட்டப்போகும் மழை
FISHERMEN WARNINGhttps://t.co/cAHkWzTg4J pic.twitter.com/wBLraifhLM
— IMD-Tamilnadu Weather (@ChennaiRmc) April 17, 2025
சென்னையை பொறுத்தவரை, 2025 ஏப்ரல் 18ஆம் தேதியான இன்று வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், நகரின் ஒருசில பகுதிகளில் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் வானிலை மையம் கூறியுள்ளது. அதே நேரத்தில், சென்னையில் அதிகபட்ச வெப்பநிலை 36 முதல் 37 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 27 முதல் 28 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், 2025 ஏப்ரல் 18ஆம் தேதி முதல் 21ஆம் தேதி வரை தமிழகத்தில் ஒருசில இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் இயல்பை விட அதிகமாக இருக்கக்கூடும் என்று வானிலை மையம் கணித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்ச வெப்பநிலை மதுரை விமான நிலையத்தில் 38.8 டிகிரி செல்சியஸ், குறைந்தபட்ச வெப்பநிலை கரூர் பரமத்தியில் 21 டிகிரி செல்சியஸ் பதிவாகி உள்ளது என்று கூறப்பட்டுள்ளது.