ஆண்களுக்கும் இலவச பயணம் வழங்கப்படுமா?.. அமைச்சர் சொன்ன பதில்!

Tamil Nadu Free Bus Scheme for Men | தமிழ்நாட்டில் பெண்களுக்கு இலவச விடியல் பயணம் வழங்கப்படுவதை போல ஆண்களுக்கும் வழங்கப்படுமா என்று சட்டமன்ற மானிய கோரிக்கை விவாதத்தில் காங்கிரஸ் எம்.எல்.ஏ கேள்வி எழுப்பியிருந்த நிலையில், அதற்கு தமிழ்நாடு போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் பதில் அளித்துள்ளார்.

ஆண்களுக்கும் இலவச பயணம் வழங்கப்படுமா?.. அமைச்சர் சொன்ன பதில்!

அமைச்சர் சிவசங்கர்

Published: 

08 Apr 2025 15:01 PM

சென்னை, ஏப்ரல் 08 : பெண்களை போலவே ஆண்களுக்கும் விடியல் பயணம் (Free Bus) கிடைக்குமா என  தமிழ்நாடு சட்டப்பேரவையில் (Tamil Nadu Assembly) கேள்வி எழுப்பப்பட்ட நிலையில், தமிழ்நாடு போக்குவரத்து துறை (Tamil Nadu Transport Department) அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் பதில் அளித்துள்ளார். இந்த நிலையில், ஆண்களுக்கான இலவச பயணம் குறித்து கேள்வி எழுப்பியது யார், அதற்கு அமைச்சர் என்ன பதில் அளித்தார் என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

சட்டப்பேரவையில் நடைபெற்று வரும் துறை ரீதியான மானிய கோரிக்கை

தமிழக சட்டப்பேரவையில் துறை ரீதியான மானிய கோரிக்கை  நடைபெற்று வருகிறது. தமிழ்நாடு நிதி நிலை அறிக்கை (Tamil Nadu Budget) தாக்கல் செய்யப்பட்டதை தொடர்ந்து மார்ச் 24, 2025 முதல் மானிய கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் இன்றைய விவாதத்தின் போது, பெண்களுக்கு விடியல் பயணம் இருப்பதை போல ஆண்களுக்கும் விடியல் பயணம் கொடுக்கப்படுமா என்று திருவாடனை தொகுதி காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் கருமாணிக்கம் கேள்வி எழுப்பினார்.

காங்கிரஸ் எம்.எல்.ஏவின் கேள்விக்கு பதி அளித்து பேசிய அமைச்சர்

காங்கிரஸ் எம்.எல்.ஏவின் கேள்விகு பதில் அளித்து பேசிய, தமிழ்நாடு போக்குவரத்து துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர், ஆண்கள் விடியல் பயணம் குறித்து உங்கள் ஆர்வம் வரவேற்கத்தக்கது. பெண்கள் முன்னேற்றம் பெற வேண்டும், வாழ்க்கையில் சமநிலை அடைய வேண்டும் என்பதற்காக கலைஞர் உரிமைத்தொகை, மகளிர் அணி விடியல் பயணம் உள்ளிட்ட திட்டங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் செயல்படுத்தி வருகிறார் என்று கூறியுள்ளார். தொடர்ந்து பேசிய அமைச்சர் சிவசங்கர், எதிர் காலத்தில் நிதி நிலை சீரான பிறகு ஆண்கள் விடியல் பயணம் குறித்து கருத்து எடுத்துக்கொள்ளப்படும் என்றும் பதில் அளித்துள்ளார்.

அரசின் விடியல் பயணம் மூலம் பயனடையும் பெண்கள்

2021, மே மாதம் தமிழ்நாடு அரசால் கொண்டுவரப்பட்டது தான் இந்த பெண்களுக்கான விடியல் பயணம். 2021 சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்ற மு.க.ஸ்டாலின், பதவியேற்றதும் 5 முக்கிய திட்டங்களில் கையெழுத்திட்டார். அதில் பிரதான திட்டம் தான் இந்த பெண்களுக்கான விடியல் பயண திட்டம். இதன் மூலம் பெண்கள் இலவசமாக பயணம் செய்ய அனுமதி வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தின் மூலம் தமிழகம் முழுவதும் உள்ள லட்சக்கணக்கான பெண்கள் பயனடைந்து வருகின்றனர்.

சென்னையை பொருத்தவரை டீலக்ஸ் மற்றும் குளிர்சாதன பேருந்துகளை தவிர மற்ற பேருந்துகளில் பெண்களுக்கு இலவச பயணம் மேற்கொள்ள அனுமதி வழங்கப்படுகிறது. இதன் காரணமாக, சென்னை உள்ளிட்ட முக்கிய நகரங்களில் மட்டுமன்றி, கிராமப்புரங்களில் வசிக்கும் பெண்களும் இலவச பயணம் மேற்கொண்டு வருகின்றனர். இது தங்களுக்கு மிகவும் பயனுள்ள திட்டமாக உள்ளதாகவும் அவர்கள் கூறுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.