தொடர் விடுமுறை.. ஊருக்கு போறீங்களா? போக்குவரத்து துறை முக்கிய அறிவிப்பு!

Tamil Nadu Special Buses : மகாவீர் ஜெயந்தி, தமிழ் புத்தாண்டு பண்டிகையை முன்னிட்டு சென்னையில் இருந்து பல்வேறு மாவட்டங்களுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது. 2025 ஏப்ரல் 9ஆம் தேதி முதல் ஏப்ரல் 12ஆம் தேதி வரை தினசரி இயக்கக்கூடிய பேருந்துகளுடன், 1380 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுவதாக போக்குவரத்து துறை அறிவித்துள்ளது.

தொடர் விடுமுறை.. ஊருக்கு போறீங்களா? போக்குவரத்து துறை முக்கிய அறிவிப்பு!

சிறப்பு பேருந்துகள்

Updated On: 

09 Apr 2025 07:03 AM

சென்னை, ஏப்ரல் 09: தொடர் விடுமுறையையொட்டி, பல்வேறு மாவட்டங்களுக்கு சிறப்பு பேருந்துகள் (TNSTC Special Buses) இயக்கப்படும் என்று தமிழக போக்குவரத்து துறை அறிவித்துள்ளது. மகாவீர் ஜெயந்தி, தமிழ்புத்தாண்டு மற்றும் வார இறுதி நாட்களை முனனிட்டு தினசரி இயக்கக்கூடிய பேருந்துகளுடன் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தொடர் விடுமுறை, பண்டிகை நாட்களில் பேருந்து நிலையங்களில் பயணிகள் கூட்டம் அலைமோதும்.  இந்த நிலையில், 2025 ஏப்ரல் 10ஆம் தேதி மகாவீர் ஜெயந்தியும்,  2025 ஏப்ரல் 14ஆம் தேதியும் தமிழ் புத்தாண்டும் கொண்டாடப்படுகிறது.

தொடர் விடுமுறை

இதனால், பலரும் தங்களது சொந்த ஊர்களுக்கு படையெடுப்பார்கள். பண்டிகை நாட்களுடன்,  வார இறுதி நாட்கள்  வருவதால் வழக்கமாக இல்லாமல், பேருந்து நிலையங்களில் பயணிகள் கூட்டம் அதிமாக இருக்கும். இதனால், தமிழக போக்குவரத்து துறை சிறப்பு பேருந்துகள்  இயக்கப்படும் என்று அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

அதன்படி, 2025 ஏப்ரல் 9ஆம் தேதி முதல் 2025 ஏப்ரல் 13ஆம் தேதி வரை தினசரி இயக்கக்கூடிய பேருந்துகளுடன் கூடுதலாக 1,380 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும் என்று தமிழக போக்குவரத்து துறை அறிவித்துள்ளது.

அதாவது, 2025 ஏப்ரல் 9ஆம் தேதி 190 சிறப்பு பேருந்துகளும், 2025 ஏப்ரல் 11ஆம் தேதி 525 பேருந்துகளும், 2025 ஏப்ரல் 12ஆம் தேதி 380 பேருந்துகளும் இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

கிளாம்பாக்கத்திலிருந்து திருவண்ணாமலை, திருச்சி, கும்பகோணம், மதுரை, திருநெல்வேலி, நாகர்கோவில், கன்னியாகுமரி, தூத்துக்குடி, கோயம்புத்தூர் மற்றும் சேலம் ஆகிய இடங்களுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

 1,380 சிறப்பு பேருந்துகள் இயக்கம்

கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து 2025 ஏப்ரல் 9ஆம் தேதி 50 சிறப்பு பேருந்துகளும், 2025 ஏப்ரல் 11ஆம் தேதி 100 சிறப்பு பேருந்துகளும், 2025 ஏப்ரல் 12ஆம் தேதி 95 சிறப்பு பேருந்துகளும் இயக்கப்படும்.

திருவண்ணாமலை, நாகப்பட்டினம், வேளாங்கண்ணி, ஓசூர் மற்றும் பெங்களூருக்கு இயக்கப்படுகிறது. மாதவரம் பேருந்து நிலையத்தில் இருந்து 2025 ஏப்ரல் 9,11,12ஆம் தேதிகளில் பல்வேறு இடங்களுக்கு தலா 20 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பயணிகள் சொந்த ஊர்களில் இருந்து திரும்பி வர வசதியாக பெங்களூரு, திருப்பூர், ஈரோடு மற்றும் கோயம்புத்தூரில் இருந்து 2025 ஏப்ரல் 9,11,12ஆம் தேதிகளில் தலா 300 பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. மேலும், 2025 ஏப்ரல் 13ஆம் தேதி சென்னை மற்றும் பெங்களூருவுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

2025 ஏப்ரல் 9ஆம் தேதியான இன்று 10,065 பயணிகளும், 2025 ஏப்ரல் 12ஆம் தேதி 8,278 பயணிகளும், 2025 ஏப்ரல் 13ஆம் தேதி 12,399 பயணிகளும் டிக்கெட் முன்பதிவு செய்துள்ளனர். எனவே, பயணிகள் https://www.tnstc.in/OTRSOnline/ என்ற இணையதளம் அல்லது TNSTC செயலி வாயிலாக தங்களது டிக்கெட்டுகளை முன்பதிவு செய்து கொள்ளுங்கள் என்பது குறிப்பிடத்தக்கது.