தனியார் பள்ளி மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் – அமைச்சர் அன்பில் மகேஷ்
Coimbatore School Issue: கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே செங்குட்டைபாளையத்தில் பூப்பெய்திய மாணவியை வகுப்பறைக்கு வெளியே அமர வைத்து தேர்வெழுத வைத்த பள்ளி மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மாணவர்கள் மீதான ஒடுக்குமுறை எவ்வகையாயினும் அதனை பொறுத்துக்கொள்ள முடியாது என்றும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.

கோவை மாவட்டத்தில் தனியார் பள்ளியில் பூப்பெய்த மாணவியை வகுப்பறைக்குள் அமர வைக்காமல் வெளியே தரையில் அமர வைத்து தேர்வு எழுத வைத்த சம்பவம் தொடர்பாக பள்ளி மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார். ஏற்கனவே பள்ளி முதல்வர் இடை நீக்கம் செய்யப்பட்டுள்ளதாகவும் மேலும் பள்ளி மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார். பள்ளி மாணவியை வகுப்பறைக்கு வெளியே அமர வைத்து தேர்வெழுத வைத்த சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
தனியார் பள்ளியில் நடந்தது என்ன?
கோவை மாவட்டம் பொள்ளாச்சி அடுத்து கிணத்துக்கடவு அருகே செங்குட்டைபாளையத்தில் இயங்கி வரும் தனியார் பள்ளியில் 8 ஆம் வகுப்பு படிக்கும் மாணவி கடந்த 5 ஆம் தேதி பூப்பெய்தி உள்ளார். தற்போது தமிழ்நாட்டில் இருக்கும் அனைத்து பள்ளி மாணவ மாணவிகளுக்கும் முழு ஆண்டு தேர்வு நடைபெற்று வருவதால், அந்த மாணவி பள்ளிக்கு விடுமுறை எடுக்காமல் தேர்வெழுத வந்துள்ளார். அப்போது அவரது தாய் அங்குள்ள ஆசிரியரிடம் மாணவி பூப்பெய்தி உள்ளார் அதனால் தனியாக அமர வைத்து தேர்வெழுத அனுமதிக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளார்.
ஆனால் பள்ளி நிர்வாகம் அந்த மாணவியை வகுப்பறைக்கு வெளியே தரையில் அமர வைத்து தேர்வெழுத வைத்துள்ளனர். 7 ஆம் தேதி மற்றும் 9 ஆம் தேதி நடைபெற்ற தேர்வை மாணவி வெளியே அமர்ந்து எழுதியுள்ளார். இதனை கண்ட மாணவியின் தாய் வீடியோ எடுத்து வெளியிட்டுள்ளார். இந்த காட்சிகள் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில், மாணவியை தனியாக அமர வைக்க சொன்னேனே தவிர தரையில் அமர வைக்க வேண்டும் என்று சொல்லவில்லை என தெரிவித்துள்ளார்.
அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி உறுதி:
தனியார் பள்ளி மீது துறை ரீதியான விசாரணை மேற்கொள்ளப்பட்டது. பள்ளி முதல்வர் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
குழந்தைகள் மீதான ஒடுக்குமுறை எவ்வகையாயினும் பொறுத்துக்கொள்ள முடியாது. அன்பு மாணவி தனியாக அமரவில்லை! நாங்கள் இருக்கிறோம். இருப்போம்.
— Anbil Mahesh (@Anbil_Mahesh) April 10, 2025
இந்த சம்பவத்தை தொடர்ந்து பள்ளி முதல்வர் ஆனந்தியை பணி இடைநீக்கம் செய்து பள்ளி தாளாளர் நடவடிக்கை எடுத்துள்ளார். மேலும், பள்ளி மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், மாணவி தனியாக இல்லை, நாங்கள் இருக்கிறோம் என்றும் பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறியுள்ளார். இது தொடர்பான அவரது எக்ஸ் தள பதிவில், “ தனியார் பள்ளி மீது துறை ரீதியான விசாரணை மேற்கொள்ளப்பட்டது. பள்ளி முதல்வர் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். குழந்தைகள் மீதான ஒடுக்குமுறை எவ்வகையாயினும் பொறுத்துக்கொள்ள முடியாது. அன்பு மாணவி தனியாக அமரவில்லை! நாங்கள் இருக்கிறோம். இருப்போம்” என தெரிவித்துள்ளார்.