அரசு வேலை.. தமிழ் மொழியில் கல்வி பயின்றவர்களுக்கு 20% முன்னுரிமை!
Tamil Nadu Government Prioritizes Tamil Medium | தமிழ்நாடு அரசு தமிழ் மொழிக்கு முன்னுரிமை அளித்து வரும் நிலையில், தமிழ் மொழியில் கல்வி பயின்றவர்களுக்கு அரசு வேலையில் முன்னுரிமை அளித்து திருத்தபப்பட்ட அரசானை ஒன்றை அரசு வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளது என்ன என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

மாதிரி புகைப்படம்
சென்னை, ஏப்ரல் 18 : சென்னை உயர் நீதிமன்றத்தின் (Chennai High Court) உத்தரவின் அடிப்படையில், தமிழ் வழியில் கல்வி (Tamil Medium Education) பயின்றவர்களை அரசு பணிகளில் பணி அமர்த்த முன்னுரிமை அளிக்க வேண்டும் என்பதற்கான திருத்தப்பட்ட வழிகாட்டு நெறிமுறைகளுடன் தமிழ்நாடு அரசு (Tamil Nadu Government) அரசாணை வெளியிட்டுள்ளது. தமிழ் மொழியை முன்னிலை படுத்துவதற்காக அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வரும் நிலையில், தமிழ் வழி கல்வியை ஊக்குவிக்க இந்த முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த நிலையில், இது தொடர்பாக அரசு வெளியிட்டுள்ள ஆணையில் கூறப்பட்டுள்ளது என்ன என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
தமிழ் மொழியை முன்னிலை படுத்தும் அரசு
உலகின் மிக பழமையான மொழியாக தமிழ் உள்ளது. தமிழ் மொழியின் சிறப்புகளை உலகிற்கு தெரிய படுத்தும் வகையில், தமிழக அரசு சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அந்த வகையில் தான், தமிழ் மொழியில் கல்வி பயின்றவர்களுக்கு அரசு வேலையில் முன்னுரிமை வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், தமிழ் மொழியில் பயின்றவர்களுக்கு அரசு வேலையில் முன்னுரிமை வழங்குவது தொடர்பான திருத்தப்பட்ட அரசாணை ஒன்றை அரசு வெளியிட்டுள்ளது.
அரசாணை வெளியீடு
Human Resources Department, #TamilNadu issued G.O – regarding #guidelines for “Priority” to applicants/candidates for State Government jobs, who studied their entire education through out in #Tamilmedium
(1/2) pic.twitter.com/N5bf5Tv0nn— Hari Krishnan Pongilath (@h_pongilath) April 17, 2025
தமிழ் வழியில் கல்வி பயின்றவர்களுக்கு 20 சதவீத முன்னுரிமை
இது குறித்து வெளியிடப்பட்டுள்ள அரசாணையில், தமிழ் வழியில் கல்வி பயின்றவர்கள் மட்டுமே 2010 ஆம் ஆண்டு தமிழ்நாடு தமிழ் வழியில் கல்வி பயின்றவர்களை அரசு பணியில் முன்னுரிமை அடிப்படையில் பணி நியமனம் செய்தல் சட்டம் மற்றும் அந்த சட்டத்தின் 2020 ஆம் ஆண்டு திருத்த சட்டத்தின் கீழ் முன்னுரிமை வழங்க தகுதி உடையவர்கள் ஆவர் என கூறப்பட்டுள்ளது. இந்த நிலையில், பிற மொழிகளில் கல்வி பயின்று தேர்வுகளை மட்டும் தமிழில் எழுதியவர்களுக்கு இந்த முன்னுரிமை வழங்கப்படாது என கூறப்பட்டுள்ளது.
ஆனால், 1 ஆம் வகுப்பில் பள்ளியில் சேராமல், வயதின் அடிப்படையில் கல்வி உரிமை சட்டத்தின் கீழ் முதல் 8 வகுப்புகள் வரை நேரடியாக பள்ளிகளில் சேர்ந்து தமிழ் மொழியை பயிற்று மொழியாக கொண்டு படித்து தேர்ச்சி பெற்றவர்கள் மற்றும் பிற மாநிலங்களில் தமிழ் மொழியை பயிற்று மொழியாக கொண்டு படித்து தேர்ச்சி பெற்றவர்களும், பின்னர் தமிழ்நாட்டு கல்வி நிறுவனங்களில் சேர்ந்து தங்களது கல்வியை தமிழில் தொடர்ந்தவர்களுக்கும் முன்னுரிமை வழங்கப்படும் என கூறப்பட்டுள்ளது.
இந்த நிலையில், தமிழ் வழியில் கல்வி பயின்றவர்களுக்கு 20 சதவீதம் முன்னுரிமையின் அடிப்படையில் அரசு வேலை வழங்கப்படும் எனவும் அரசாணையில் கூறப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.