இனி தமிழில் தான் கையெழுத்து.. தமிழில் மட்டுமே அரசாணை.. அரசு அதிகாரிகளுக்கு பறந்த உத்தரவு!
Tamil Nadu Goverment : தமிழில் மட்டுமே இனி அரசாணைகளை வெளியிட வேண்டும் என்றும் அரசு அதிகாரிகளுக்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும், அரசு பணியாளர்கள் இனி தமிழில் மட்டுமே கையெழுத்திட வேண்டும் என்றும் தமிழக அரசு உத்தரவை பிறப்பித்துள்ளது. அனைத்து துறைச் செயலாளர்கள், மாவட்ட ஆட்சியர்கள், துறை அலுவலர்களுக்கு உத்தரவிட்டுள்ளது.

சென்னை, ஏப்ரல் 16: தமிழில் மட்டுமே இனி அரசாணைகளை வெளியிட வேண்டும் என அரசு அதிகாரிகளுக்கு தமிழக அரசு (Tamil Nadu Goverment) உத்தரவிட்டுள்ளது. மேலும், அரசு பணியாளர்கள் இனி தமிழில் மட்டுமே கையெழுத்திட வேண்டும் என்றும் பொதுமக்களிடம் இருந்து தமிழில் வரும் கடிதங்களுக்க்கு தமிழிலேயே பதில் அளிக்க வேண்டும் என்றும் தமிழக அரசு உத்தரவை பிறப்பித்துள்ளது. தமிழக அரசு சார்பில் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தான் அரசாணைகள் வெளியிடப்பட்டு வருகிறது.
இனி தமிழில் தான் கையெழுத்து
மாவட்ட ஆட்சியர்கள், செயலாளர்கள் உள்ளிட்டோர் அரசாணைகளை தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் வெளியிட்டு வருகின்றனர். இந்த நிலையில், தமிழக அரசு முக்கிய அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறது.
அதன்படி, தமிழில் மட்டுமே இனி அரசாணைகள் வெளியிட வேண்டும் என்று அரசு அதிகாரிகளுக்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழ் ஆட்சிமொழி சட்டத்தை முழுமையாக பின்பற்ற அனைத்து துறைகளுக்கு தமிழ்நாடு அரசு உத்தரவு, அரசாணை, சுற்றறிக்கைகள், அலுவலக உத்தரவுகள் உள்ளிட்டவை தமிழில் மட்டுமே இருப்பதை பின்பற்ற வேண்டும் என தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது.
இதுகுறித்து வெளியிட்ட அறிவிப்பில், “பொதுமக்களிடம் இருந்து தமிழில் வருகின்ற கடிதங்களுக்கு தமிழிலேயே பதில் அளிக்க வேண்டும். அரசுப் பணியாளர்கள் அனைத்து அறிவிப்பிலும் தமிழில் மட்டுமே கையொப்பமிட வேண்டும். மேலும், ஆங்கிலத்தில் வெளியிட விலக்களிக்கப்பட்டுள்ள இனங்களுக்கு நேர்வுக்கேற்ப தலைமைச் செயலகத் துறைகளால் ஆங்கிலத்தில் வெளியிடப்படும் அரசாணைகளை தமிழில் வெளியிட தமிழ் வளர்ச்சி, செய்தித்துறையின் மொழிபெயர்ப்பு பிரிவு மூலம் தமிழாக்கம் செய்வதற்கு அனுப்பி வைக்க வேண்டும்.
அரசு அதிகாரிகளுக்கு பறந்த உத்தரவு
அந்தந்த துறைகளாலேயே தமிழில் மொழி பெயர்க்கப்படும் அரசாணைகளை தேவைப்படி கூர்ந்தாய்வு செய்யும் பொருட்டு தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறையின் மொழி பெயர்ப்பு பிரிவுக்கு அனுப்பி வைக்க வேண்டும்” என்று தமிழக அரசு அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தமிகத்தில் மும்மொழிக் கொள்கை விவகாரம் தொடர்பாக தமிழக அரசுக்கும், மத்திய அரசுக்கும் மோதல் போக்கு நிலவுகிறது. மும்மொழிக் கொள்கையை ஏற்றால் தான் தமிழகத்திற்கான கல்வி நிதி வழங்கப்படும் என்று மத்திய அரசு திட்டவட்டமாக கூறி வருகிறது. அதே நேரத்தில், மத்திய அரசு மும்மொழிக் கொள்கை மூலம் இந்தியை திணிக்க முயற்சிப்பதாக முதல்வர் ஸ்டாலின் குற்றச்சாட்டி வருகிறார்.
இதற்கிடையில், தமிழக அரசு பட்ஜெட்டில் ரூபாய் குறியீட்டை மாற்றி ஸ்டாலின் அறிவிப்பை வெளியிட்டார். இது பெரும் சர்ச்சையாக வெடித்தது. இது தேசிய அளவில் விவாதப்பொருளாக மாறியது. இந்த சூழலில், தமிழில் மட்டுமே இனி அரசாணைகளை வெளியிட வேண்டும் எனவும் தமிழில் மட்டுமே கையெழுத்து இருக்க வேண்டும் எனவும் தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.