சர்ரென உயரப்போகும் மீன் விலை? நாளை நள்ளிரவு முதல் மீன்பிடி தடைக்காலம்.. முழு விவரம்!
Fishing Ban Tamil Nadu: தமிழகத்தில் 2025 ஏப்ரல் 14ஆம் தேதியான நாளை நள்ளிரவு முதல் மீன்பிடி தடைக்காலம் தொடங்குகிறது. நாளை நள்ளிரவு முதல் 61 நாட்களுக்கு மீன்பிடி தடைக்காலம் அமலில் இருக்கும். இந்த இரண்டு மாதங்களுக்கு மீன் விலை அதிகமாக இருக்கும்.

சென்னை, ஏப்ரல் 13: 2025 ஏப்ரல் 14ஆம் தேதி (நாளை) நள்ளிரவு முதல் மீன்பிடி தடைக்காலம் (Tamil Nadu Fishing Ban Period) தொடங்குகிறது. இதனால், மீன்களை வாங்க அசைவ பிரியங்கள் குவிந்துள்ளனர். கடைசி ஞாயிற்றுக்கிழமை என்பதால் சென்னை உள்ளிட்ட இடங்களில் மீன்களை வாங்க வியாபாரிகள் என பலரும் குவிந்துள்ளனர். மீன்பிடி தடைக்காதல் தொடங்கினால், மீன்களின் விலை உயரலாம் என்று கூறப்படுகிறது. தமிழ்நாடு கடல் மீன்பிடி ஒழுங்குமுறைச் சட்டம், 1983-ன் கீழ், திருவள்ளூர் முதல் கன்னியாகுமரி வரையிலான கிழக்கு கடற்கரையில் மீன்களின் இனப்பெருக்க காலத்தை கருதி, ஆண்டுதோறும் 61 நாட்கள் மீன்பிடி தடைக்காலம் அமல்படுத்தப்பட்டு வருகிறது.
நாளை தொடங்கும் மீன் பிடி தடைக்காலம்
ஏப்ரல் 15 முதல் ஜூன் 14 வரை வரை ஆண்டுதோறும் மீன்பிடி தடைக்காலம் அமல்படுத்தப்படுகிறது. இதனால், 61 நாட்களும் விசைப்படகுகள், இழுவைப் படங்குகளை பயன்படுத்தி கடலுக்குள் மீன்படிக்க செல்லக் கூடாது.
இந்த கட்டுப்பாடு மீன் இனப்பெருக்க சுழற்சிகளைப் பாதுகாக்கவும், கடல் வாழ்வின் நீண்டகால நிலைத்தன்மையை உறுதி செய்கிறது. அந்த வகையில், 2025ஆம் ஆண்டு ஏப்ரல் 14ஆம் தேதி (நாளை) நள்ளிரவு முதல் மீன்பிடி தடைக்காலம் அமலுக்கு வர உள்ளது.
இந்த ஜூன் 14ஆம் தேதி வரை அமலில் இருக்கும். இரண்டு மாதங்களும் மீனவர்கள் விசைப்படகுகள், இழுவைப் படங்குகளை பயன்படுத்தி மீன்களை பிடிக்க கூடாது என அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர். இதனால், சென்னை, கடலூர், நாகப்பட்டினம், மயிலாதுறை, ராமநாதபுரம், திருவள்ளூர், காஞ்சிபுரம், கன்னியாகுமரி, தூத்துக்குடி உள்ளிட்ட 14 கடற்கரை மாவட்டங்களைச் சேர்ந்த மீனவர்கள் கடலுக்குள் செல்லாமல் இருப்பார்கள்.
உயரப்போகும் மீன் விலை?
மேலும், மீன்பிடித் துறைமுகன், மீன்பிடி இறங்கு தளங்களில் விசைப்படகுகள் நிறுத்தி வைக்கப்படும். மீன்பிடி தடைக்காலத்தில் மீன்பிடித் தொழில் தடைப்பட்டு, மீன்வர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது. இதனால், தமிழக அரசு சார்பில் இரண்டு மாதங்களுக்கு ஒவ்வொரு மீன்வர்களின் குடும்பத்தினருக்கு ரூ.8,000 நிவாரணமாக வழங்கப்பட்டு வருகிறது.
இது அவர்களது அன்றாட வாழ்க்கைக்கு பெரிதும் உதவி வருகிறது. அதே நேரத்தில், இந்த 61 நாட்களுக்கும மீன்களின் விலையும் கடுமையாக உயரும். மீன்களின் வரத்து குறைவால், மீன்களின் விலை உயரும் அபாயம் உள்ளது. இதற்கிடையில், மீன்வர்கள் மீன்பிடி தடைக்காலத்தில் கொடுக்கப்படும் நிவாரண தொகையை உயர்த்த வேண்டும் என்றும் அரசுக்கு கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
அதாவது, தற்போது, மீனவர்களுக்கு நிவாரணமாக ரூ.8,000 வழங்கப்பட்டு வரும் நிலையில், அதனை ரூ.15,000 ஆக உயர்த்த வேண்டும் என கோரிக்கை விடுத்து வருகின்றனர். அதே நேரத்தில், பருவமழை தொடங்கும் நேரத்தில், அதாவது நவம்பர், டிசம்பர் மாதங்களில் மீன்பிடி தடைக்காலம் அமல்படுத்த வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.