தமிழகத்தில் ஏப்ரல் 15 முதல் மீன்பிடி தடைக்காலம்.. மாவட்ட ஆட்சியர் அதிரடி உத்தரவு!
Fishing Ban In Tamil Nadu | தமிழகத்தில் மீன் பெருக்கத்தை அதிகரிக்கவும், மீன்களின் இனப்பெருக்க காலத்தை பாதுகாக்கவும் இரண்டு மாதங்களுக்கு மீன்பிடி தடைக்காலம் அமலுக்கு வர உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, ஏப்ரல் 15, 2025 முதல் ஜூன் 14, 2025 வரை மீன்பிடி தடைக்காலம் அமலில் இருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ராமேஸ்வரம், ஏப்ரல் 10 : தமிழகத்தில் இரண்டு மாத கால மீன்பிடி தடைக்காலம் (Fishing Ban In Tamil Nadu) அமலுக்கு வர உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது, ஏப்ரல் 15, 2025 முதல் அடுத்த இரண்டு மாதங்களுக்கு இந்த மீன்பிடி தடைக்காலம் அமலில் இருக்கும். இந்த குறிப்பிட்ட காலக்கட்டத்தில் எந்த வித மீன்பிடி படகும் கடலுக்கு செல்ல தடை விதிக்கப்படுகிறது. குறிப்பாக ராமநாதபுரம் மாவட்டத்தில் மட்டும் சுமார் 2,000 விசைப்படகுகள் கடலுக்கு செல்லாது என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், தமிழகத்தில் விரைவில் அமலாக உள்ளாக மீன்பிடி தடைக்காலம் குறித்து விரிவாக பார்க்கலாம்.
இரண்டு மாதங்களுக்கு அமலுக்கு வர உள்ள மீன்பிடி தடைக்காலம்
தமிழகத்தில் சென்னை, புதுச்சேரி, ராமேஸ்வரம் உள்ளிட்ட பகுதிகளில் கடல்கள் உள்ளன. இந்த பகுதிகளில் துறைமுகங்கள் அமைக்கப்பட்டு மீன்பிடிக்கும் தொழிலும் நடைபெற்று வருகின்றன. இந்த துறைமுகங்கள் மூலம் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு மீன்கள் விநியோகம் செய்யப்படுகின்றன. தமிழகம் மட்டுமன்றி இந்தியா அளவிலும், உலக நாடுகளுக்கும் மீன்கள் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகின்றன.
தமிழகத்தில் ஆண்டு முழுவதும் மீனவர்கள் விசைப்படகுகளின் உதவியுடன் கடலுக்கு மீன்பிடிக்க செல்கின்றனர். இந்த நலையில், மீன்களின் இனப்பெருக்கத்தை பாதுகாக்கும் வகையில் ஆண்டுக்கு ஒரு சில குறிப்பிட்ட நாட்கள் மீனவர்களுக்குன் கடலுக்கு செல்ல அனுமதி மறுக்கப்படுகிறது. மீன்களின் இனப்பெருக்க காலம் முடிந்த பிறகு, மீனவர்களுக்கு மீன் பிடிக்க அனுமதி வழங்கப்படுகிறது. இந்த நிலையில், 2025 ஆம் ஆண்டுக்கான மீன்பிடி தடைக்காலம் அறிவிக்கப்பட்டுள்ளது.
மீன்பிடி தடைக்காலம் – மீனவர்களுக்கு பறந்த உத்தரவு
தமிழகத்தில் வங்காள விரிகுடா, மன்னார் வளைகுடா மற்றும் பாக்ஜலசந்தி கடற்பகுதிகளில் ஏப்ரல், மே, ஜூன் ஆகிய மாதங்கள் மீன்கள் உள்ளிட்ட கடல்வாழ் உயிரினங்களின் இனப்பெருக்க காலமாக கண்டறியப்பட்டுள்ளது. எனவே, இந்த காலக்கட்டத்தில் மீன்களின் இனப்பெருக்கத்தை பாதுகாக்கும் வகையிலும், மீன் பெருக்கத்தை அதிகரிக்கும் நோக்கிலும் இந்த குறிப்பிட்ட காலக்கட்டத்தில் விசைப்படகுகள் மற்றும் இழுவைப்படகுகள் மூலம் மீன்பிடிக்க மீனவர்களுக்கு தடை விதிக்கப்படுகிறது. அதன்படி, தமிழகத்தில் மீன்பிடி தடைக்காலம் ஏப்ரல் 15, 2025 முதல் ஜுன் 14, 2025 வரை அமலுக்கு வர உள்ளது. அதாவது ஏப்ரல் மற்றும் ஜூன் இடையிலான சுமார் 61 நாட்களுக்கு இந்த தடை அமலில் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
இது குறித்து அறிக்கை வெளியிட்டுள்ள மாவட்ட ஆட்சியர் சிம்ரன்ஜீத் சிங் கலோன், ராமநாதபுரம் மாவட்டத்தில் பாம்பன், மண்டபம், கீழக்கரை, ஏர்வாடி, வாலிநோக்கம், தொண்டி, எஸ்.பி.பட்டிணம் உள்ளிட்ட கடலோர பகுதிகளில் 2,000 விசைப்படகுகள் மீன்பிடி இறங்குதளத்தில் நிறுத்தி வைக்கப்பட்டு இருக்கும் என கூறியுள்ளார். இந்த நிலையில், மீனவ குடும்பங்களுக்கு தடைக்கால நிவாரண தொகையாக ரூ.8,000 வழங்கப்படும் என்று அவர் கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.