Minister Senthil Balaji: திமுக ஆட்சியில் மின் கட்டணம் உயர்வு! அதிமுக குற்றசாட்டுக்கு அமைச்சர் செந்தில் பாலாஜி பதில்!
Tamil Nadu Electricity Price Hike: தமிழ்நாட்டில் கோடை கால மின் தேவையை பூர்த்தி செய்ய அரசு நடவடிக்கை எடுத்து வருவதாகவும், அதிமுக ஆட்சிக் காலத்தில் 56.9% மின் கட்டண உயர்வு ஏற்பட்டதாகவும், தற்போதைய திமுக ஆட்சியில் 30% மட்டுமே உயர்ந்துள்ளதாகவும் மின் அமைச்சர் செந்தில் பாலாஜி சட்டமன்றத்தில் தெரிவித்தார். 'மின்னகம்' போன்ற திட்டங்கள் மூலம் மின்சாரம் தொடர்பான புகார்களுக்கு தீர்வு காணப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார். வட சென்னை அனல் மின் நிலையத்தின் மூன்றாம் கட்டம் திறக்கப்பட்டதையும் அவர் எடுத்துரைத்தார்.

சென்னை, ஏப்ரல் 22: கோடைக்காலம் (Summer) என்பதால் தமிழ்நாட்டில் மின் தேவை என்பது நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டு இருக்கிறது. கோடைக்காலத்தின் மின் தொடர்பான பிரச்சனைகளை எதிர்கொள்ளவும், சரிசெய்யவும் தமிழ்நாடு அரசு தேவையான அனைத்து விஷயங்களை மேற்கொள்ளும் என மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி (Minister Senthil Balaji) தெரிவித்திருந்தார். இப்படியான சூழ்நிலையில், தமிழ்நாட்டில் மின்சாரக் கட்டணம் உயர்த்தப்பட்டது தொடர்பாக அதிமுக கட்சியினர் இன்று அதாவது 2025 ஏப்ரல் 22ம் தேதி சட்டமன்றத்தில் விவாதத்தை கிளப்பியது. இதற்கு பதிலளித்த மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, கடந்த 10 ஆண்டுகால அதிமுக (AIADMK) ஆட்சியில் 52 சதவீத மின் கட்டணம் உயர்த்தப்பட்டதாகவும், ஆனால் திமுக ஆட்சியில் 30 சதவீதம் மட்டுமே உயர்ந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
என்ன சொன்னார் செந்தில் பாலாஜி..?
சட்டமன்றத்தில் மின்சாரத் துறைக்கான மானியக் கோரிக்கை மீதான விவாதத்தின்போது அதிமுக எம்.எல்.ஏக்கள் தமிழ்நாட்டில் மின் கட்டணம் உயர்த்தப்பட்டதாக குற்றச்சாட்டுகளை வைத்தனர். அப்போது குறுக்கிட்ட செந்தில் பாலாஜி, “ தமிழ்நாட்டில் முந்தைய அதிமுக ஆட்சி காலத்தில் மின் கட்டணம் உயரத்தப்படவில்லை என்றும், தற்போதைய திமுக ஆட்சியில்தான் மின் கட்டணம் உயர்த்தப்பட்டது போன்ற தோற்றத்தை அதிமுகவினர் ஏற்படுத்த முயற்சிக்கிறார்கள். ஆனால், அது தவறு.
கடந்த 10 ஆண்டுகால அதிமுக ஆட்சியில் அதாவது 2012ம் ஆண்டு 37 சதவீதமும், 2013ம் ஆண்டு 3.57 சதவீதமும், 2014ம் ஆண்டு 16.33 சதவீதம் என மின் கட்டணம் தொடர்ந்து உயர்த்தப்பட்டது. அதன்படி, ஒட்டுமொத்தமாக அதிமுகவின் 10 ஆண்டுகால ஆட்சியில் 56.9 சதவீத மின் கட்டணம் உயர்த்தப்பட்டது. இருப்பினும், 2016 தேர்தலுக்கு முன்பு, இவை 4 சதவீதமாக குறைத்து உத்தரவிடப்பட்டது.” என்றார்.
மின்சாரம் தொடர்பான புகார்:
தொடர்ந்து மின்சாரம் தொடர்பான புகார் குறித்த கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் செந்தில் பாலாஜி, “ ஒட்டுமொத்தமாக தமிழ்நாடு முழுவதும் மின்சாரம் தொடர்பான பிரச்சனை என்றால், சம்பந்தப்பட்ட பகுதிகளில் உள்ள மின்துறை அலுவலகத்திற்கு நேரடியாகவோ அல்லது தொலைபேசி மூலமாகவோ புகார் அளிக்க வேண்டிய சூழ்நிலை இருந்தது. தற்போது இந்த நிலைமையை மாற்றி தமிழ்நாடு முழுவதும் ஒரே எண்ணுக்கு புகார் அளிக்கும் வகையில் ’மின்னகம்’ தொலைபேசி எண்ணை கடந்த 2021ம் ஆண்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கிவைத்தார். தற்போது ‘மின்னகம்’ தொலைபேசி எண்ணில் அளிக்கப்பட்ட புகார்களில் 99.89% புகார்களுக்கு தீர்வுகாணப்பட்டுள்ளது.
முந்தைய திமுக ஆட்சியில் 2010 ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்ட வட சென்னை அனல் மின் நிலையத் திட்டத்தின் மூன்றாம் கட்டம் 2019ம் ஆண்டிலேயே முடிக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால் முந்தைய அதிமுக ஆட்சியில் ஏற்பட்ட தாமதம் காரணமாக அது நடக்கவில்லை. இருப்பினும், இது 2025 ஏப்ரல் 17ம் தேதி தமிழ்நாடு அரசால் முடிக்கப்பட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினால் திறந்து வைக்கப்பட்டது, இதன் மூலம் 1,283 மில்லியன் யூனிட் மின்சாரம் உற்பத்தி செய்ய முடிந்தது” என்றார்.