ஈஸ்டர் பண்டிகை: உயிர்த்தெழுந்த இயேசுவை போற்றி சிறப்பு பிரார்த்தனை
Easter celebrations: ஈஸ்டர் பண்டிகையையொட்டி, தமிழகம் முழுவதும் தேவாலயங்களில் சிறப்பு திருப்பலிகள், பிரார்த்தனைகள் நடைபெற்றன. வேளாங்கண்ணி பேராலயத்தில் பாஸ்கா விழிப்பு திருப்பலி, வானவேடிக்கைகள், பவனிகள் பக்தர்களை ஈர்த்தன. வெளிநாடுகளிலிருந்தும் பல்லாயிரக்கணக்கானோர் கலந்து கொண்டு ஆன்மிக உற்சாகத்தில் ஈடுபட்டனர். தமிழகம் முழுவதும் உள்ள தேவாலயங்களில் ஈஸ்டர் பண்டிகையையொட்டி ஆன்மிக உற்சாகத்துடன் சிறப்பு ஆராதனைகள் நடைபெற்று வருகின்றன.

தமிழ்நாடு ஏப்ரல் 20: இயேசு கிறிஸ்துவின் உயிர்த்தெழுந்த தினமாகக் கருதப்படும் ஈஸ்டர் பண்டிகையை (Easter celebrations) 2025 ஏப்ரல் 20 இன்று கிறிஸ்தவர்கள் கொண்டாடுகின்றனர். 2025 ஏப்ரல் 18 நேற்று முன்தினம் புனித வெள்ளியாக (Good Friday) அனுசரிக்கப்பட்டு, தேவாலயங்களில் ஏசுவின் சிலுவைப்பாடுகள் நினைவு கூரப்பட்டன. வேளாங்கண்ணி பேராலயத்தில் 2025 ஏப்ரல் 19 ஆம் தேதி நேற்று இரவு 11:45 மணி முதல் பாஸ்கா திருப்பலி துவங்கி, உயிர்த்தெழுந்த இயேசுவின் நிகழ்வு தத்ரூபமாக காட்சிபடுத்தப்பட்டது. வானவேடிக்கைகள், புது நெருப்பு புனிதப்படுத்தல், பாஸ்கா பவனிகள் உள்ளிட்டவை பக்தர்களை ஈர்த்தன. தமிழகம் முழுவதும் தேவாலயங்களில் தமிழ், ஆங்கிலம், மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் சிறப்பு பிரார்த்தனைகள் (Special prayers) நடைபெற்று வருகின்றன. வெளிநாடுகளிலிருந்தும் வந்திருந்த பல்லாயிரக்கணக்கானோர் வேளாங்கண்ணி பேராலயத்தில் பிரார்த்தனையில் ஈடுபட்டனர்.
40 நாட்கள் தவக்காலமாக அனுசரிக்கப்படும்
கிறிஸ்தவர்கள் ஆண்டுதோறும் கொண்டாடும் முக்கியமான பண்டிகையாகும் ஈஸ்டர். இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்டு மூன்றாம் நாள் உயிர்ப்பெற்ற நினைவாக, இந்த பண்டிகையை உலகம் முழுவதும் கிறிஸ்தவர்கள் விமரிசையாகக் கொண்டாடுகின்றனர்.
இதற்கான முன்னோடியாக 40 நாட்கள் தவக்காலமாக அனுசரிக்கப்படும் இந்த காலம், புனித வெள்ளிக்கிழமையுடன் முடிவடைகிறது. 2025 ஏப்ரல் 18 நேற்று முன்தினம், ஏசுவின் சிலுவைப்பாடுகளை நினைவு கூரும் புனித வெள்ளி நாளாக அனைத்து தேவாலயங்களிலும் ஆராதனைகள் நடைபெற்றன.
வேளாங்கண்ணி பேராலயத்தில் ஈஸ்டர் வழிபாடு
இந்நிலையில், இன்று அதிகாலை முழுக்கவே இயேசுவின் உயிர்ப்பை சிறப்பிக்கும் வகையில் தமிழகத்தின் பல பகுதிகளில் உள்ள தேவாலயங்களில், சிறப்பு திருப்பலிகள் மற்றும் பிரார்த்தனைகள் நடந்தன. குறிப்பாக, நாகை மாவட்டம் வேளாங்கண்ணி பேராலயத்தில் நேற்று இரவு 11:45 மணிக்கு பாஸ்கா விழிப்பு திருப்பலி துவங்கியது.
மெழுகுவர்த்திகளை கையில் ஏந்தியபடி, பக்தர்கள் பிரார்த்தனை
மெழுகுவர்த்திகளை கையில் ஏந்தியபடி, பக்தர்கள் தீவிரமாக பிரார்த்தனை மேற்கொண்டனர். பின்னர் இரவு 12 மணி முதல் அதிகாலை 2 மணி வரை, இயேசு உயிர்த்தெழுந்த நிகழ்வை தத்ரூபமாக காட்சிப்படுத்தும் சிறப்பு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. உயிர்த்தெழுந்த இயேசுவின் வருகையின் போது வானவேடிக்கைகள் ஒளிர, பேராலயம் வண்ண விளக்குகளால் மின்னியது. தொடர்ந்து திவ்ய நற்கருணை ஆராதனை நடைபெற்றது.
பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு
பாஸ்கா திரி பவனி, புது நெருப்பு புனிதப்படுத்துதல், பாஸ்கா புகழ்கள் ஆகியவை இவ்விழாவின் முக்கிய அம்சங்களாகும். பேராலயத் தலைவர் இருதயராஜ் தலைமையில் திவ்ய நற்கருணை ஆசிர்வாதம் வழங்கப்பட்டது. தமிழகம் மட்டுமன்றி, வெளி மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளிலிருந்தும் வந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் இதில் கலந்துகொண்டனர். 2025 ஏப்ரல் 20 இன்று காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை தமிழ், மலையாளம், கொங்கனி, தெலுங்கு, ஆங்கிலம், இந்தி உள்ளிட்ட மொழிகளில் தொடர்ந்து சிறப்பு பிரார்த்தனைகள் நடைபெற்று வருகின்றன.
புனித லூர்து அன்னை ஆலயத்திலும் சிறப்பு பிரார்த்தனை
அதேபோல், திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி புனித லூர்து அன்னை ஆலயத்திலும் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது. தமிழகம் முழுவதும் உள்ள தேவாலயங்களில் ஈஸ்டர் பண்டிகையையொட்டி ஆன்மிக உற்சாகத்துடன் சிறப்பு ஆராதனைகள் நடைபெற்று வருகின்றன.