Supreme Court Verdict: ஆளுநருக்கு எதிராக உச்சநீதிமன்றம் அதிரடி.. வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பு என முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்..!
Tamil Nadu Chief Minister MK Stalin: தமிழ்நாடு அரசின் வாதத்தில் இருந்த நியாயத்தை ஏற்று, ஆளுநர் நிறுத்தி வைத்திருந்தது சட்டவிரோதமானது என்றும், அந்த சட்ட முன்வடிவுகளுக்கு ஆளுநர் ஒப்புதல் அளித்ததாக கருதப்பட வேண்டும் என்றும் வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பை உச்சநீதிமன்றம் வழங்கியது என்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

சென்னை, ஏப்ரல் 8: ஒரு மாநில சட்டமன்றத்தால் அனுப்பப்படும் மசோதாக்களை நிறுத்தி வைக்கும் அதிகாரம் ஆளுநருக்கு இல்லை என உச்சநீதிமன்றம் (Supreme Court) இன்று (08.04.2025) தீர்ப்பளித்தது. நீதிபதிகள் ஜே.பி.பர்திவாலா மற்றும் ஆர்.மகாதேவன் ஆகியோர் அடங்கிய அமர்வு, மாநில சட்டமன்றத்தால் சமர்ப்பிக்கப்பட்ட 10 மசோதாக்கள் தொடர்பான தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி (Tamil nadu Governor R.N.Ravi) ஒப்புதல் அளிக்காமல் நிறுத்தி வைத்திருப்பது சட்டவிரோதமானது என்று அறிவித்தது. மேலும், ஒருவேளை முன்னெப்போது இல்லாத ஒரு நடவடிக்கையாக 10 மசோதாக்கள் சட்டமன்றத்தால் மறுபரிசீலனை செய்யப்பட்ட பின்னர், ஆளுநரிடம் மீண்டும் சமர்ப்பிக்கப்பட்ட தேதியிலிருந்து அவை அங்கீகரிக்கப்பட்டதாக கருதப்படும். அதேநேரத்தில், மாநில சட்டமன்றத்தால் மறுபரிசீலனை செய்யப்பட்ட பின்னர், ஒரு மசோதாவை ஆளுநர் சமர்ப்பிக்கும்போது, அவர் அதற்கு ஒப்புதல் அளிக்க வேண்டும் என்றும், மசோதா வேறுபட்டதாக இருக்கும்போது மட்டுமே ஆளுநர் ஒப்புதலை மறுக்க முடியும் என்றும் தெளிவுபடுத்தியது.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரை:
ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிரான உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு குறித்து சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார். அப்போது பேசிய அவர், “அவைக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தியை தெரிவிக்க விரும்புகிறேன். சற்று முன்பு, வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பை நமது தமிழ்நாடு அரசு பெற்றுள்ளது. நமது சட்டமன்றத்தில் நிறைவேற்றி, ஆளுநரின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்ட பல முக்கிய சட்ட முன்வடிவுகள் திரும்ப அனுப்பப்பட்டது. அந்த நிலையில், அவற்றை மீண்டும் நிறைவேற்றி மீண்டும் அனுப்பினோம். ஆனால், ஆளுநர் இதற்கெல்லாம் ஒப்புதல் அளிக்காமல் காலம் தாழ்த்தி வந்ததோடு, தனது அதற்கு அதிகாரம் இருப்பதாகவும் தெரிவித்து வந்தார்.
சட்டப்பேரவையில் முதல்வர் ஸ்டாலின் பேசிய காட்சிகள்:
தமிழ்நாடு அரசின் மசோதாக்களை மாண்புமிகு ஆளுநர் அவர்கள் நிறுத்தி வைத்திருந்தது சட்டவிரோதமானது என்றும், அந்த சட்ட முன்வடிவுகளுக்கும் ஆளுநர் அவர்கள் ஒப்புதல் அளிக்கப்பட்டதாக கருதப்பட வேண்டும் எனவும் தெரிவித்து வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பினை இன்றைக்கு மாண்பமை உச்சநீதிமன்றம்… pic.twitter.com/EwcbNbt75q
— DMK (@arivalayam) April 8, 2025
இதனை எதிர்த்து தமிழ்நாடு அரசு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இதில், தமிழ்நாடு அரசின் வாதத்தில் இருந்த நியாயத்தை ஏற்று, ஆளுநர் நிறுத்தி வைத்திருந்தது சட்டவிரோதமானது என்றும், அந்த சட்ட முன்வடிவுகளுக்கு ஆளுநர் ஒப்புதல் அளித்ததாக கருதப்பட வேண்டும் என்றும் வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பை உச்சநீதிமன்றம் வழங்கியது. இந்த தீர்ப்பு தமிழ்நாட்டுக்கு மட்டுமின்றி, இந்தியாவில் உள்ள அனைத்து மாநில அரசுகளுக்கும் கிடைத்த மாபெரும் வெற்றியாகும். திராவிட முன்னேற்ற கழகத்தின் முதன்மை கொள்கையான மாநில சுயாட்சி மத்திய கூட்டாட்சி தத்துவத்தை நிலைநாட்டிட, தமிழ்நாடு போராடும்! தமிழ்நாடு வெல்லும்!” என்று தெரிவித்தார்.