”தமிழ்நாட்டுக்கு துரோகம்” அதிமுக பாஜக கூட்டணி.. கடுமையாக விமர்சித்த முதல்வர் ஸ்டாலின்!
AIADMK BJP Alliance : அதிமுக - பாஜக கூட்டணி குறித்து முதல்வர் ஸ்டாலின் கடுமையாக விமர்சித்துள்ளார். அதாவது, அதிமுக பாஜக கூட்டணியே ஒரு ஊழல் தான் என்றும் 2 ரெய்டுகள் நடந்தவுடன் அதிமுகவை அடமானம் வைத்திருப்பவர்கள், அடுத்து தமிழ்நாட்டை அடமானம் வைக்க துடிக்கிறார்கள் என்று கூறியிருக்கிறார்.

சென்னை, ஏப்ரல் 12: அதிமுக – பாஜக கூட்டணி (AIADMK BJP Alliance) குறித்து முதல்வர் ஸ்டாலின் கடுமையாக விமர்சித்துள்ளார். அதாவது, அதிமுக பாஜக கூட்டணியே ஒரு ஊழல் தான் என்றும் 2 ரெய்டுகள் நடந்தவுடன் அதிமுகவை அடமானம் வைத்திருப்பவர்கள், அடுத்து தமிழ்நாட்டை அடமானம் வைக்க துடிக்கிறார்கள் என்று கூறியிருக்கிறார். தமிழகத்தில் 2026 சட்டப்பேரவை தேர்தலில் அதிமுக பாஜக கூட்டணி அமைத்து போட்டியிடும் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.
அதிமுக பாஜக கூட்டணி
தேசிய அளவில் பிரதமர் மோடி தலைமையிலும், தமிழகத்தில் அதிமுக பொதுச் செயலளார் எடப்பாடி பழனிசாமி தலைமையிலும் கூட்டணி செயல்படும் என்று கூறினார். மேலும், திமுக தனது ஊழல்களை மறைக்க சனாதன சர்ச்சை, மும்மொழிக் கொள்கை, தொகுதி மறுவரையறை உள்ளிட்ட பிரச்னை எழுப்பி வருவதாகவும் விமர்சித்து இருந்தார்.
இந்த நிலையில், பாஜக அதிமுக கூட்டணி குறித்து தமிழக முதல்வர் ஸ்டாலின் கடுமையாக விமர்சித்துள்ளார். அதாவது, “அதிமுக பாஜக கூட்டணியே ஒரு ஊழல் தான். 2 ரெய்டுகள் நடந்தவுடன் அதிமுகவை அடமானம் வைத்திருப்பவர்கள் அடுத்து தமிழ்நாட்டை அடமானம் வைக்க துடிக்கிறார்கள்.
பழைய கொத்தடிமைக் கூடாராமான அதிமுகவின் தலைமையை மிரட்டிப் பணிய வைத்து தன்னுமடைய சதித் திட்டங்களை பாஜக நிறைவேற்றப் பார்க்கிறது. பாஜக தனியாக வந்தாலும், எவர் துணையோடு வந்தாலும் தமிழ்நாடு மக்கள் தக்க பாடம் புகட்டக் காத்திருக்கிறார்கள்.
கடுமையாக விமர்சித்த முதல்வர் ஸ்டாலின்
அதிமுகவுடன் கூட்டணி என்று அறிவித்த மேடையில் ஊழலைப் பற்றி உள்துறை அமைச்சர் பேசிய காட்சியைப் பார்த்து தமிழ்நாட்டு மக்கள் சிரிக்கவே செய்வார்கள். ஊழலுக்காக இரண்டு முறை முதலமைச்சர் பதவியை விட்டு விலக வைக்கப்பட்டவர் ஜெயலலிதா. அவரது கட்சியுடன் கூட்டணி வைக்கும் போது பேசத் தகுதியான வார்த்தையா ஊழல் என்பது” என்று கூறியுள்ளார்.
மேலும், ”மாநில உரிமை, மொழியுரிமை, தமிழ்ப் பண்பாடு ஆகியவற்றை காப்பதற்காக களத்தில் நிற்கும் இயக்கம் தான் திமுக. ஆனால், அதிகார வெறியோடு அமைக்கப்பட்டிருக்கும் பாஜக அதிமுக கூட்டணி என்பது அது அத்தனைக்கும் எதிரானது.
பதவி மோகத்தில், தமிழ்நாட்டின் சுயமரியாதையை தமிழ்நாட்டின் உரிமைகளை டெல்லியில் அடமானம் வைத்து, தமிழ்நாட்டை பாழாக்கியவர் தான் பழனிசமி என்பதை யாரும் மறக்கவில்லை. தமிழ்நாடு மக்கள் தக்க பாடம் புகட்டக் காத்திருக்கிறார்கள்” என்று கூறினார்.
முன்னதாக, கனிமொழி எம்.பி பேசுகையில், “அதிமுகவுக்கும் தமிழ்நாடு மக்களுக்கும் இழைக்கக் கூடிய மிகப் பெரிய துரோகமாக இந்த கூட்டணி அமைந்து இருக்கிறது. பாஜகவும், அதிமுகவும் தொடர்ந்து தொடர்பில் இருக்கிறார்கள் என பலமுறை தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் கூறி வந்தார்கள். இந்த கூட்டணி மீண்டும் உருவாகும் என்பதை பல முறை சுட்டிக் காட்டி இருந்தார்கள். அது இன்று உண்மை ஆகியிருக்கிறது. இது இன்று பட்டவர்த்தனமாக தெளிவாக தெரிய வந்திருக்கிறது” என்று கூறினார்.