Tamil Nadu Cabinet Reshuffle: மீண்டும் அதே இலாகா..! அமைச்சராக பொறுப்பேற்ற மனோ தங்கராஜ்.. பால்வளத்துறை ஒதுக்கீடு!
Mano Thangaraj Re-appointed Tamil Nadu Minister: பொன்முடி, செந்தில் பாலாஜி ஆகியோர் ராஜினாமா செய்ததை தொடர்ந்து, மனோ தங்கராஜ் தமிழ்நாடு அமைச்சரவையில் மீண்டும் இணைந்தார். அவருக்கு பால்வள மேம்பாட்டுத் துறை ஒதுக்கப்பட்டது. இந்த நியமனம், உச்சநீதிமன்ற தீர்ப்புக்குப் பின்னர் முதலமைச்சர் ஸ்டாலினும் ஆளுநர் ரவியும் இணைந்து நடத்திய நிகழ்ச்சியில் நடைபெற்றது. இது திமுக அரசின் முக்கியமான மாற்றமாகும்.

சென்னை, ஏப்ரல் 28: கன்னியாகுமரி பத்மநாபுரம் திமுக எம்.எல்.ஏ-வும், முன்னாள் பால்வளத்துறை அமைச்சராக இருந்த மனோ தங்கராஜ் (Mano Thangaraj) இன்று அதாவது 2025 ஏப்ரல் 28ம் தேதி மீண்டும் அமைச்சராக பதவியேற்றார். தமிழ்நாடு அமைச்சரவையில் முக்கிய அமைச்சர்களாக இருந்த பொன்முடி மற்றும் செந்தில் பாலாஜி ஆகியோர் ராஜினாமா செய்ததை தொடர்ந்து, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் (Tamil Nadu CM MK Stalin) தலைமையிலான தமிழ்நாடு அமைச்சரவையில் மனோ தங்கராஜ் மீண்டும் அமைச்சராக சேர்ந்தார். கடந்த 2021 சட்டமன்ற தேர்தலில் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள பத்மநாபபுரம் சட்டமன்றத் தொகுதியில் வெற்றி பெற்ற மனோ தங்கராஜ், திமுக ஆட்சி அமைத்தபோது தகவல் தொழில்நுட்ப அமைச்சராக இருந்தார்.
மனோ தங்கராஜூக்கு என்ன இலாகா ஒதுக்கீடு..?
மு.க.ஸ்டாலின் தலைமையிலான அமைச்சரவை கடைசியாக மாற்றம் செய்தபோது பால் மற்றும் பால்வள மேம்பாட்டு அமைச்சராக இருந்த மனோ தங்கராஜ் நீக்கப்பட்டார். இப்போது, அதே பால் மற்றும் பால்வள மேம்பாட்டு அமைச்சராக மனோ தங்கராஜூக்கு தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். அதன்படி, மீண்டும் அதே இலாகாவின் அமைச்சராக மனோ தங்கராஜ் பதவி ஏற்றார்.
அதன் தொடர்ச்சியாக மனோ தங்கராஜூக்கு பால் மற்றும் பால்வள மேம்பாட்டு துறை ஒதுக்கப்பட்டுள்ளதாக ஆளுநர் மாளிகையான ராஜ் பவன் அதிகாரப்பூர்வமாக தெரிவித்தது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பரிந்துரையின் பேரில் ஆளுநர் ஆர்.என்.ரவி, மனோ தங்கராஜூக்கு இந்த இலாகா ஒதுக்கீட்டிற்கு ஒப்புதல் அளித்ததாக அதிகாரப்பூர்வ செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒரே நிகழ்ச்சியில் முதலமைச்சர், ஆளுநர்:
தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட பல்வேறு மசோதாக்களுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளிக்காமல் தாமதப்படுத்தியதற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் ஆளும் திமுக அரசு வழக்கு பதிவு செய்தது. இந்த வழக்கில் உச்ச நீதிமன்றம் ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிராகவும், தமிழ்நாடு அரசுக்கு ஆதரவாகவும் தீர்ப்பை வழங்கியது. இந்த உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு பிறகு, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும், ஆளுநர் ரவியும் முதல் முறையாக இந்த நிகழ்வில் சந்தித்தனர்.
தொடர்ந்து, முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும், ஆளுநர் ஆர்.என்.ரவியும் கைலுக்கி மகிழ்ச்சியாக வாழ்த்துகளை பரிமாறி கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சரும், திமுக பொதுச்செயலாளருமான துரைமுருகன் உள்ளிட்டோர் பதவியேற்பு விழாவில் கலந்து கொண்டனர்.
முக்கிய அமைச்சர்கள் பதவி விலக காரணம் என்ன..?
2011ம் ஆண்டு அதிமுக ஆட்சியில் வேலைக்காக பணம் கொடுத்ததாக எழுந்த ஊழல் வழக்கில் செந்தில் பாலாஜி மீது அமலாக்கத்துறை விசாரணை நடத்தி வருகிறது. இந்த வழக்கில் செந்தில் பாலாஜி கைதாகி ஓராண்டுக்கு மேல் சிறையில் இருந்ததும் குறிப்பிடத்தக்கது. இந்தநிலையில், செந்தில் பாலாஜி அமைச்சர் பதவியில் இருந்து விலகாவிட்டால் ஜாமீனை ரத்து செய்வதாக உச்சநீதிமன்றம் எச்சரித்த நிலையில் பதவி விலகினார்.
அதேநேரத்தில், திமுகவின் மூத்த நிர்வாகிகளில் ஒருவரான பொன்முடி, பாலியல் தொழிலாளி குறித்து சைவ-வைணவ மதத்துடன் சம்படுத்தப்படுத்தி பேசியது சமீபத்தில் சர்ச்சையானது. இதன் தொடர்பாக உச்சநீதிமன்றம் விசாரித்த நிலையில், பொன்முடியும் பதவி விலகினார்.
முன்னாள் அமைச்சர் பொன்முடி வசம் இருந்த வனம் மற்றும் காதி இலாகாக்கள் ஆர்.எஸ்.ராஜகண்ணப்பனுக்கும், செந்தில் பாலாஜி வகித்து வந்த மின்சாரம், கலால் மற்றும் மதுவிலக்கு எஸ்.எஸ்.சிவசங்கர் மற்றும் எஸ்.முத்துசாமி ஆகியோருக்கும் ஒதுக்கப்பட்டது.