புதிய பாஜக மாநில தலைவர் யார்? டெல்லியில் நயினார் நாகேந்திரன்..மேலிடம் எடுக்கும் முடிவு!
Tamil Nadu New BJP Leader : தமிழக பாஜகவின் நயினோர் நாகேந்திரன் திடீரென டெல்லி சென்றிருக்கிறார். அங்கு அமித் ஷா, ஜெ.பி.நட்டாவுடன் ஆலோசனை நடத்த உள்ளதாக தெரிகிறது. புதிய பாஜக மாநில தலைவர் இன்னும் ஓரிரு நாட்களில் அறிவிக்கப்பட உள்ள நிலையில், நயினார் நாகேந்திரன் டெல்லி சென்றிருப்பது முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.

சென்னை, ஏப்ரல் 08: பாரதிய ஜனதா கட்சியின் (Tamil Nadu Bjp Leader) நயினார் நாகேந்திரன் (Nainar Nagendran) 2025 ஏப்ரல் 7ஆம் தேதி இரவு திடீரென டெல்லி புறப்பட்டு சென்றிருக்கிறார். பாஜக மாநில தலைவர் மாற்றப்படுவதாக கூறப்படும் நிலையில், நயினார் நாகேந்திரன் டெல்லி சென்றுள்ளார். எனவே, பாரதிய ஜனதா கட்சி மாநில தலைவரை தேர்ந்தெடுப்பது தொடர்பாக மேலிடம் ஆலோசனை நடத்த உள்ளதாக தெரிகிறது. தமிழகத்தில் 2026ஆம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது.
புதிய பாஜக மாநில தலைவர் யார்?
இன்னும் தேர்தலுக்கு ஓராண்டு இருக்கும் நிலையில், இப்போதே கூட்டணி பேச்சுகள் நடந்து வருகிறது. குறிப்பாக, அதிமுக பாஜக கூட்டணி அமைத்து போட்டியிடும் சூழல் உள்ளது. இதனால், அதிமுக பாஜக இடையே கூட்டணி பேச்சுவார்த்தை சில தினங்களாகவே தீவிரமாக நடந்து வருகிறது.
ஆனால், இதில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கும், பாஜக மாநில தலைவர் அண்ணாமலைக்கு சுமுகமான உறவு இல்லை என்று கூறப்படுகிறது. அதே நேரத்தில் இருவரும் ஒரே சமூகத்தை சேர்ந்தவர்களாக இருப்பதால், இது கூட்டணிக்கு பின்னடைவை ஏற்படுத்தும் என்று பாஜக கருதுகிறது.
இதனால், பாஜக மாநில தலைவரை மாற்ற மேலிடம் முடிவு எடுத்துள்ளது. அதற்கான பேச்சுவார்த்தையும் தீவிரமாக நடத்தி வருகிறது. இதில், அண்ணாமலை தலைவர் பதவியில் இருந்து நீக்கப்படலாம் என்று தகவல் வெளியாகி உள்ளது. அதே நேரத்தில், நான் பாஜக மாநில தலைவர் பதவிக்கான ரேஸில் இல்லை என்றும் அண்ணாமலை சமீபத்தில் கூறி இருக்கிறார்.
டெல்லி பறந்த நயினார் நாகேந்திரன்
இதன் மூலம், பாஜக மாநில தலைவராக அண்ணாமலை தொடரவில்லை என்பது கிட்டதட்ட உறுதியாகவிட்டது. ஆனால், இதுகுறித்து பாஜக மேலிடம் எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை. ஆனால், தொடர்ந்து ஆலோசனை நடத்தி வருகிறது. பாஜக மாநில தலைவர் ரேஸில் முக்கிய தலைவர்கள் உள்ளனர்.
அதாவது, நயினார் நாகேந்திரன், வானதி சீனிவாசன், கருப்பு முருகானந்தம் ஆகியோர் புதிய தலைவர்களுக்கான ரேஸில் உள்ளதாக தெரிகிறது. அதில் நயினார் நாகேந்திரனுக்கு அதிக வாய்ப்புகள் உள்ளதாக பாஜக வட்டாரத்தில் பேசப்படுகிறது. ஏனென்றால், அதிமுக அதிமுகவில் நயினார் நாகேந்திரன் ஏற்கனவே இருந்ததால், அக்கட்சி தலைவர்களுடன் நெருக்கமான உறவவில் இருந்து வருகிறது.
மேலும், தென் தமிழகத்தில் செல்வாக்க மிக்க ஒருவராகவும் இருப்பதால், இது பாஜகவுக்கு பெரிதும் கைகொடுக்கும் என்று கூறப்படுகிறது. இதனால், பாஜக புதிய மாநில தலைவராக நயினார் நாகேந்திரனை பாஜக மேலிடம் இறுதி செய்துள்ளதாக தகவல்கள் வெளியான வண்ணம் உள்ளன.
இதற்கான அறிவிப்பு 2025 ஏப்ரல் 9ஆம் தேதி வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையில், நயினார் நாகேந்திரன் திடீரென டெல்லி சென்றுள்ளார். பாஜக மேலிடம் அழைப்பின்பேரில், அவர் டெல்லி சென்றிருக்கிறார். மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, ஜெ.பி.நட்டா உள்ளிட்டோர் அவரிடம் பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாக தெரிகிறது. புதிய பாஜக மாநில தலைவர் இன்னும் ஓரிரு நாட்களில் அறிவிக்கப்பட உள்ள நிலையில், நயினார் நாகேந்திரன் டெல்லி சென்றிருப்பது முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.