அண்ணாமலை, நயினார் நாகேந்திரனுக்கு சிக்கல்.. மாநில தலைவர் தேர்தலை அறிவித்த பாஜக!
BJP Announced Election for State Leader | பாஜக மாநில தலைவர் பதவியில் இருந்து அண்ணாமலை மாற்றம் செய்யப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி வந்த நிலையில், ஏப்ரல் 12, 2025 அன்று பாஜக மாநில தலைவர் மற்றும் தேசிய செயற்குழு உறுப்பினருக்கான தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மாதிரி புகைப்படம்
சென்னை, ஏப்ரல் 10 : தமிழ்நாடு பாரதிய ஜனதா கட்சி (BJP – Bharatiya Janata Party) தலைவர் தேர்தலுக்காக நாளை (ஏப்ரல் 11, 2025) முதல் வேட்பு மனு (Nomination) தாக்கல் தொடங்குகிறது என்றும் அதனை தொடர்ந்து ஏப்ரல் 12, 2025 அன்று தேர்தல் நடைபெற உள்ளது என்றும் பாரதிய ஜனதா கட்சி அறிவித்துள்ளது. மேலும், இந்த தேர்தலில் போட்டியிட போட்டியாளர்கள் குறைந்தபட்சம் 10 ஆண்டுகள் பாஜகவில் அடிப்படை உறுப்பினராக இருக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், பாரதிய ஜனதா கட்சி தமிழ்நாடு தலைவர் தேர்தல் குறித்தும் அதில் போட்டியிடுவதற்கான தகுதிகள் என்ன என்பது குறித்தும் விரிவாக பார்க்கலாம்.
தமிழ்நாடு பாஜக தலைவர் மாற்றம் – தீவிர ஏற்பாடு
தமிழகத்தில் வரும் 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் (Assembly Election) நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் போட்டியிடுவதற்காக திமுக, அதிமுக, பாஜக உள்ளிட்ட கட்சிகள் தீவிர முனைப்பு காட்டி வருகின்றன. இந்த தேரதலில் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகமும் களம் காண உள்ள நிலையில், தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. தற்போதை நிலவரத்தின் படி, தமிழகத்தில் 2026 சட்டமன்ற தேர்தல் 5 முதல் 6 முணை போட்டியாக இருக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
கட்சிகள் இன்னும் தங்களது கூட்டணி நிலைபாடுகள் குறித்து அறிவிக்காத நிலையில், போட்டிக் களம் உறுதி செய்யப்படாமல் உள்ளது. இந்த நிலையில், 2026 சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெறுவோம் என அறிவித்துள்ள பாஜக அதற்கான தீவிர நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது. இந்த நிலையில், தமிழ்நாடு பாஜக தலைவரை மாற்றும் முடிவை எடுத்துள்ளது. இதன் காரணமாக தமிழ்நாடு பாஜக தலைவர் மற்றும் தேசிய பொதுக்குழு உறுப்பினர்கள் பதவிக்கு தேர்தலை அறிவித்துள்ளது.
பாஜக தேர்தல் அறிவிப்பு
அறிவிக்கை
அமைப்பு பருவம் 2024மாநில தலைவர் / தேசிய பொதுக்குழு உறுப்பினர்கள் பதவிக்கு போட்டியிடுவதற்கான விருப்பமனு தாக்கல் pic.twitter.com/YEyftGcEPA
— BJP Tamilnadu (@BJP4TamilNadu) April 10, 2025
இரண்டு பதவிகளுக்கு தேர்தலை அறிவித்த பாஜக
பாஜக மாநில துணை தலைவரும், மாநில தேர்தல் அதிகாரியுமான சக்கரவர்த்தி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் மாநில தலைவர் மற்றும் தேசிய பொதுக்குழு உறுப்பினர்கள் தேர்தலுக்கான விருப்ப மனுக்கள் வரவேற்கப்படுவதாக கூறியுள்ளார். தேர்தலுக்கான விருப்ப மனுக்களை நாளை (ஏப்ரல் 10, 2025) மதியம் 2 மணி முதல் மாலை 4 மணி வரை மாநில தலைமை அலுவலகத்தில் சமர்பிக்கலாம் என்று தெரிவித்துள்ளார்.
மாநில தலைவர் தேர்தலில் போட்டியிடும் நபர் குறைந்தது 10 ஆண்டுகள் அடிப்படை உறுப்பினராக இருக்க வேண்டும் என்றும், மூன்று பருவம் தீவிர உறுப்பினராகவும் இருக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.