மயோனைஸுக்கு தடை.. தமிழக அரசு அதிரடி.. காரணம் என்ன?
Tamil Nadu bans mayonnaise : தமிழகத்தில் ஹோட்டல்கள், சாலையோர கடைகளில் மயோனைஸ் விற்பனை செய்ய தடை என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்த உத்தரவு ஒரு வருடம் அமலில் இருக்கும். இந்த உத்தரவை மீறும் கடைகளின் உரிமம் ரத்து செய்யப்பட்டு சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தமிழக அரசு எச்சரிச்சை விடுத்துள்ளது.

சென்னை, ஏப்ரல் 24: பச்சை முட்டையால் தயாரிக்கப்படும் மயோனைஸுக்கு தமிழக அரசு தடை (Tamil Nadu bans mayonnaise) விதித்துள்ளது. மயோனைஸ விற்பனை செய்ய முழு தடை விதிக்கப்பட்டுள்ளளது. மயோனைஸ் உடல் நலனுக்கு அதிக ஆபத்தை ஏற்படுத்தக்கூடும் என்பதற்காக இந்த தடை விதிக்கப்பட்டுள்ளதாக உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாக ஆணையர் லால்வேனா தெரிவித்துள்ளது. மயோனைஸ் என்பது பச்சை முட்டை, எலுமிச்சை சாறு, எண்ணெய் போன்றவற்றால் தயாரிக்கப்படுகிறது.
தமிழகத்தில் மயோனைஸ் விற்பனைக்கு தடை
இந்த மயோனைஸ் பெரிய கடைகள் முதல் சாலையோர கடைகள் வரை தயாரிக்கப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது. இந்த மயோனைஸ் உடன் தான் சிக்கன், சான்ட்விட்ச் போன்றவற்றை மக்கள் சாப்பிட்டு வருகின்றனர்.
ஆனால், இந்த மயோனைஸால் அதிகப்படியான ஆபத்துகள் இருப்பதாக மருத்துவர்கள் கூறி வருகின்றனர். மயோனைஸ் சாப்பிட்டதால் உயிரிழப்பு நடந்துள்ளது. இதனால், பல்வேறு மாநிலங்களில் மயோனைஸுக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது.
அண்மையில் கூட, தெலங்கானாவில் மயோனைஸ் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில், தற்போது தமிழகத்தில் மயோனைஸ் விற்பனை செய்ய தடை விதிக்கப்படுகிறது. இந்த உத்தரவு 2025 ஏப்ரல் 8ஆம் தேதி முதலே அமலுக்கு வந்துள்ளதாக தெரிகிறது.
இதுகுறித்து உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாக ஆணையர் ஆர். லால்வேனா அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதில், “முட்டையின் மஞ்சள் கரு, எண்ணெய், வினிகர் போன்றவற்றால் மயோனைஸ் தயாரிக்கப்படுகிறது. இந்த மயோனைஸை ஷவர்மா போன்ற உணவுப் பொருட்களுடன் சாப்பிடுகின்றனர்.
காரணம் என்ன?
ஆனால், இந்த மயோனைஸ் சாப்பிடுவதால் அதிக ஆபத்து உள்ளது. பல உணவு கடைகளில் மயோனைஸை தயாரிப்பதற்கு பச்சை முட்டையைப் பயன்படுத்துகிறார்கள். முறையற்ற தயாரிப்பு, சேமிப்பு வசதிகள், நுண்ணுயிரிகளால் மாசுபடுதலால் நோய்கள் பரவுவதற்கான அபாயம் உள்ளது.
மயோனைஸில் சால்மோனெல்லா டைபிமுரியம், சால்மோனெல்லா என்டெரிடிடிஸ், எஸ்கெரிச்சியா கோலி மற்றும் லிஸ்டீரியா மோனோசைட்டோஜென்ஸ் போன்ற தீங்கு விளைவிக்கும் பாக்டீரியாக்கள் உள்ளன. இது உடல் நலனுக்கு அதிக ஆபத்தை ஏற்படுத்தும். உணவு மூலம் பரவும் நோய்களுக்கு வழிவகுக்கும்.
உணவு கடைகளில் ஆய்வு மேற்கொண்டதில் முறையாக தயாரிக்கப்படுவதில்லை என்பது தெரியவந்துள்ளது. இதனை அடுத்து, சில்லறை விற்பனை கடைகள், ஹோட்டல்களில் மயோனைஸ் விற்பனைக்கு தடை செய்யப்படுகிறது. உணவுப் பாதுகாப்பு மற்றும் தரநிலைகள் சட்டம், 2006 (மத்திய சட்டம் 34/2006) பிரிவு 30(2)(a) இன் கீழ் ஒரு வருடத்திற்கு இந்த உத்தரவு அமலில் இருக்கும். மீறும் கடைகள் மீது அபராதமும், உரிமம் ரத்து செய்யப்படும் எனவும் சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு, தண்டனைகளை எதிர்கொள்ள நேரிடும்” என்று தனது அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.