பாஜக உடன் கூட்டணி அமைக்கும் தேமுதிக? பிரேமலதா விஜயகாந்த் சொன்னது என்ன?

DMDK Alliance: சட்டமன்ற தேர்தல் இன்னும் ஓராண்டில் நடைபெற இருக்கும் நிலையில், தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தனது எக்ஸ் தள பக்கத்தில் வீடியோ ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில் பிரதமர் மோடி கேப்டன் விஜயகாந்தை எப்போதும் தமிழ்நாட்டின் சிங்கம் என அழைப்பார் என குறிப்பிட்டுள்ளர்.

பாஜக உடன் கூட்டணி அமைக்கும் தேமுதிக? பிரேமலதா விஜயகாந்த் சொன்னது என்ன?

கோப்பு புகைப்படம்

Updated On: 

14 Apr 2025 15:12 PM

சென்னை, ஏப்ரல் 14: பாரதிய ஜனதா கட்சியின் தேசிய ஜனநாயக கூட்டணியில் தேசிய முற்போக்கு திராவிட கழகம் இடம்பெறும் என அரசியல் வட்டாரங்களில் தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பாக தேமுதிகவின் பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தனது எக்ஸ் தள பக்கத்தில் ஒரு வீடியோ பகிர்ந்துள்ளார். அதில், பிரதமர் மோடி விஜயகாந்தை தமிழ்நாட்டின் சிங்கம் என அழைப்பார் என்றும், பிரதமர் மோடி சகோதரர் போன்றவர் என்றும் குறிப்பிட்டுள்ளார். இந்த பதிவு தற்போது அரசியல் வட்டாரங்களில் பேசும் பொருளாக மாறியுள்ளது.

2026 சட்டமன்ற தேர்தல்:

அடுத்த ஆண்டு (2026) சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான பணிகளை அனைத்து கட்சிகளும் மிகவும் மும்மரமாக மேற்கொண்டு வருகிறது. முக்கியமாக கட்சி நடவடிக்கைகள் பலப்படுத்துவது, கூட்டணிகளை உறுதி செய்வது, மாவட்டம் தோறும் பூத் கமிட்டிகளுக்கு ஏஜெண்டுகளை நியமிப்பது போன்ற நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. குறிப்பாக தற்போது தமிழ்நாட்டில் அட்சியில் இருக்கும் திராவிட முன்னேற்ற கழகம் ஆட்சியை தக்க வைத்து கொள்வது எப்படி, மக்களின் மனநிலை எப்படி உள்ளது போன்ற விஷயங்களில் கவனம் செலுத்தி வருகிறது.

இந்நிலையில் தமிழ்நாட்டில் எதிர்க்கட்சியாக இருக்கும் அதிமுக கடந்த சில தினங்களுக்கு மத்திய உள்துறை அமைச்சரை சந்தித்து கூட்டணியை உறுதி செய்தது. அதாவது பாரதிய ஜனதா கட்சியின் தேசிய ஜனநாயக கூட்டணியில் அதிமுக இடம்பெறும் என்றும் வரும் சட்டமன்ற தேர்தலை அதிமுக, பாஜக உடன் இணைந்து சந்திக்கும் எனவும் குறிப்பிடப்பட்டது.

பாஜக உடன் கூட்டணி அமைக்கும் தேமுதிக?


இது போன்ற சூழலில் தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், பிரதமர் மோடி விஜயகாந்த் குறித்து பேசினது தொடர்பாக தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். அதில், “ கேப்டன் விஜயகாந்த் அவர்கள் திரையுலகத்திலும், அரசியலிலும் உயர்ந்த ஒரு ஆளுமை மட்டுமல்ல, பலருடைய அன்பையும் மரியாதையையும் பெற்ற ஒரு மனிதர். பிரதமர் நரேந்திர மோடி அவர்களுக்கும் அவருக்கு இடையில் இருந்த உறவு, அரசியலைத் தாண்டிய ஒன்று. ‘தமிழகத்தின் சிங்கம்’ என்று அன்பாக அழைப்பதோடு, அவரது உடல்நலக் குறைபாடுகள் போது ஒரு சகோதரரைப் போல கவலைப்பட்டு, அடிக்கடி தொடர்புகொள்வார். அவர்களுடைய நட்பு பரஸ்பர மரியாதையிலும் அன்பிலும் கட்டப்பட்ட, மிகவும் அரிதான ஒன்று” என குறிப்பிட்டுள்ளார்.

சட்டமன்ற தேர்தல் இன்னும் ஓராண்டில் நடைபெற இருக்கும் நிலையில், இந்த வீடியோவை பகிர்ந்து கொண்டது அரசியல் வட்டாரங்களில் பேசும் பொருளாக மாறியுள்ளது. ஏற்கனவே மக்களவை தேர்தலை தேமுதிக அதிமுகவுடன் கூட்டணி வைத்து களம் கண்டது. ஆனால் தற்போது எந்த கூட்டணியிலும் இல்லை என பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்திருந்தார். ஆனால் இன்று பகிர்ந்துள்ள வீடியோவில் பிரதமர் மோடி சசோதரர் போன்றவர் என்றும், கேப்டன் விஜயகாந்த தமிழ்நாட்டின் சிங்கம் என அவர் அழைப்பார் என்றும் கூறியுள்ளார்.

பிரேமலதா விஜயகாந்தின் இந்த பேச்சு வரும் சட்டமன்ற தேர்தலில் பாஜக உடன் கூட்டணி வைக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பிற கட்சிகளும் கூட்டணி குறித்து முடிவெடுத்து வரும் நிலையில் பாஜகவின் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு பச்சைக்கொடி காட்டுகிறாரா பிரேமலதா என்ற கேள்வி எழுந்துள்ளது.