ஆளுநரின் அதிகாரம் பறிப்பு.. பல்கலைக்கழக வேந்தரானார் CM.. உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!
University Chancellor Mk Stalin : ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிரான உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை அடுத்து, பல்கலைக்கழகங்களின் வேந்தரானார் முதல்வர் ஸ்டாலின். அதே நேரத்தில் பல்கலைக்கழகங்களின் வேந்தர் பதவியில் இருந்து ஆளுநர் ரவி நீக்கப்பட்டார். இதன் மூலம், இனி துணை வேந்தர்களை முதல்வர் ஸ்டாலின் நியமிப்பார்.

ஆளுநர் ரவி - முதல்வர் ஸ்டாலின்
சென்னை, ஏப்ரல் 08: தமிழ்நாடு பல்கலைக்கழக சட்டத்திருத்த (2வது) மசோதா உட்பட 10 மாசோதாக்களுக்கு உச்ச நீதிமன்றம் (Supreme court) ஒப்புதல் அளித்திருப்பதால் ஆளுநருக்கு (Tamil Nadu Governor Ravi) பதிலாக மாநில முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இனி பல்கலைக்கழகங்களின் வேந்தராக செயல்படுவார். இதன் மூலம் முதல்வர் ஸ்டாலினை இனி பல்கலைக்கழகங்களில் துணை வேந்தர்களை நியமிப்பார். 2021ஆம் ஆண்டு திமுக அரசு பொறுப்பேற்றத்தில் இருந்தே தமிழக அரசுக்கும், ஆளுநர் ஆர்.என்.ரவிக்கும் மோதல் போக்கு நிலவுகிறது.
பல்கலைக்கழக வேந்தரானார் முதல்வர் ஸ்டாலின்
குறிப்பாக, மசோதா விவாகரத்தில் மோதல் நிலவுகிறது. சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்காமல் இருந்திருந்தார். இதற்கு ஆளுநர் ஆர்.என்.ரவி கடுமையான விமர்சனங்களை எதிர்கொண்டு வந்தார்.
அதாவது, ஆளுநர் ரவிக்கு அனுப்பிய 12 மசோதாக்களில் 2 மட்டுமே குடியரசுத் தலைவருக்கு அனுப்பி 10 மசோதாக்களை மாநில அரசுக்கே திருப்பி அனுப்பினார். இதனை மறுபரிசீலனை செய்து, மீண்டும் ஆளுநரின் ஒப்புதலுக்கு தமிழக அரசு அனுப்பியது.
ஆனாலும் அதற்கு ஆளுநர் ரவி ஒப்புதல் அளிக்காமல் காலம் தாழ்த்தினார். மசோதாக்களுக்கு ஆளுநர் ரவி ஒப்புதல் அளிக்காததை எதிர்த்து தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கை உச்ச நீதிமன்ற நீதிபதிகள் பர்திவாலா, ஆர்.மகாதேவன் அடங்கிய அமர்வு விசாரித்து 2025 ஏப்ரல் 8ஆம் தேதியான இன்று தீர்ப்பளித்தது.
உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
அதில், சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்காமல் இருப்பது சட்டவிரோதமானது என்று கூறியது. மேலும், 10 மசோதாக்களுக்கும் உச்ச நீதிமன்றமே ஒப்புதல் அளித்து தீர்ப்பு அளித்தது. அதன்படி, ஆளுநருக்கு பதில் முதலமைச்சரை பல்கலைக்கழக வேந்தாராக்குவதற்கான மசோதா, கால்நடை பல்கலைக்கழக திருத்த மசோதா, மீன்வள பல்கலைக்கழக திருத்த மசோதா, தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்துக்கு முதலமைச்சரை வேந்தராக்குவதற்கான மசோதாக்களுக்கு உச்ச நீதிமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது.
மேலும், தமிழ்நாடு எம்ஜிஆர் மருத்துவ பல்கலைக்கழகத்துக்கு முதலமைச்சரரை வேந்தராக்குவதற்கான மசோதா, தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழக சட்டத் திருத்த மசோதா, தமிழ் பல்கலைக்கழக சட்டத்திருத்த மசோதா, தமிழ்நாடு பல்கலைக்கழகங்கள் 2ம் திருத்த மசோதாக்களுக்கு உச்ச நீதிமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது.
இந்த 10 மசோதாக்களுக்கும் உச்ச நீதிமன்றம் ஒப்புதல் அளித்ததை அடுத்து, பல்கலைக்கழக வேந்தர் பதவியில் இருந்து ஆளுநர் ரவி நீக்கப்பட்டார். அதே நேரத்தில், பல்கலைக்கழக வேந்தரானார் முதல்வர் ஸ்டாலின். இதன் மூலம், முதல்வர் ஸ்டாலினே இனி பல்கலைக்கழகங்களில் துணை வேந்தர்களை நியமிப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதுகுறித்து பேசிய தமிழ்நாடு அரசு வழக்கறிஞர் வில்சன், “பல பல்கலைக்கழக வேந்தராக ஆளுநர் ஆர்.என்.ரவி உள்ளார். துணை வேந்தர் நியமனம் போன்ற அனைத்தும் அவர் வசமே உள்ளது. வேந்தராக மாநில அரசு நியமிப்பவரே இருக்க வேண்டுமென்ற மசோதாவும் நிலுவையில் இருப்பதால் வழக்கு தொடரப்பட்டது. 10 மசோதாக்களும் இன்று முதல் நடைமுறைக்கு வரும் வகையில் உச்ச நீதிமன்ற தீர்ப்பளித்துள்ளதால் மாநில அரசு பல்கலைக்கழங்களின் வேந்தர் பதவியில் இருந்து ஆளுநர் விடுவிப்பு” என்று கூறியுள்ளார்.