காங்கிரஸ் மூத்த தலைவர் குமரி அனந்தனின் உடலுக்கு அரசு மரியாதை.. முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு
Kumari Ananthan Passes Away : மறைந்த காங்கிரஸ் மூத்த தலைவர் குமரி அனந்தன் உடல் அரசு மரியாதை உடன் அடக்கம் செய்யப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். மேலும், சாலிகிராமத்தில் வைக்கப்பட்ட குமரி அனந்தனின் உடலுக்கு முதல்வர் ஸ்டாலின் நேரில் சென்று அஞ்சலி செலுத்தனார்.

சென்னை, ஏப்ரல் 09: மறைந்த காங்கிரஸ் மூத்த தலைவர் குமரி அனந்தன் (Kumari Ananthan) உடல் அரசு மரியாதை உடன் அடக்கம் செய்யப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் (MK Stalin) அறிவித்துள்ளார். காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், தமிழிசை சௌந்தரராஜனின் தந்தையுமான குமரி அனந்தன் உடல்நலக்குறைவால் காலமானார். சென்னை விருங்கம்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் வயது மூப்பு மற்றும் சிறுநீரக பிரச்னை தொடர்பாக குமரி அனந்தன் சிகிச்சை பெற்று வந்தார்.
குமரி அனந்தனின் உடலுக்கு அரசு மரியாதை
இந்த நிலையில், 2025 ஏப்ரல் 9ஆம் தேதி அதிகாலையில் குமரி அனந்தன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். குமரி அனந்த மறைந்தது தமிழக அரசியலில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அவரது மறைவுக்கு அரசியல் தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
மேலும், அவரது உடல் பொதுமக்களின் அஞ்சலிக்காக சென்னை சாலிகிராமத்தில் உள்ள தமிழிசை வீட்டில் வைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், மறைந்த காங்கிரஸ் மூத்த தலைவர் குமரி அனந்தன் உடல் அரசு மரியாதை உடன் அடக்கம் செய்யப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
அவர் கூறுகையில், “அய்யா குமரி அனந்தன் அவர்களின் பெருவாழ்வைப் போற்றிடும் வகையில், அவரது திருவுடலுக்கு அரசு மரியாதையுடன் பிரியாவிடை அளிக்கப்படும்” என்று கூறியுள்ளார். மேலும், சாலிகிராமத்தில் வைக்கப்பட்ட குமரி அனந்தனின் உடலுக்கு முதல்வர் ஸ்டாலின் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். தமிழிசை சௌந்தரராஜன் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு நேரில் ஆறுதல் கூறினார் முதல்வர் ஸ்டாலின்.
முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு
“காங்கிரஸ் பேரியக்கத்தின் மூத்த தலைவரும் தமிழின்பால் பெரும்பற்று கொண்டவருமான இலக்கியச் செல்வர் அய்யா குமரி அனந்தன் அவர்கள் மறைவுற்றார் என்ற செய்தியறிந்து மிகுந்த துயருற்றேன்.
‘தகைசால் தமிழர்’ அய்யா குமரி அனந்தன் அவர்களது மறைவால் வாடும் அருமை சகோதரி தமிழிசை சௌந்தரராஜன் உள்ளிட்ட… pic.twitter.com/omP9MwhG5x
— CMOTamilNadu (@CMOTamilnadu) April 9, 2025
முன்னதாக, குமரிஅனந்தனின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்த முதல்வர் ஸ்டாலின், “காங்கிரஸ் பேரியக்கத்தின் மூத்த தலைவரும் தமிழின்பால் பெரும்பற்று கொண்டவருமான இலக்கியச் செல்வர் அய்யா குமரி அனந்தன் அவர்கள் மறைவுற்றார் என்ற செய்தியறிந்து மிகுந்த துயருற்றேன்.
தமிழே தன் மூச்செனத் தமிழ்த் திருப்பணிக்கு வாழந்திட்ட அவரது பெருவாழ்வைப் போற்றி, அவருக்கு நமது அரசின் சார்பில் கடந்த ஆண்டு 2024 தகைசால் விருது வழங்கப்பட்டது.
அந்த விருதை நான் வழங்கியபோது, அவரது நினைவு என் கண்களில் கண்ணீரைப் பெருக்குகிறது. மரி அனந்தன் அவர்களது மறைவால் வாடும் அருமை சகோதரி தமிழிசை சௌந்தரராஜன் உள்ளிட்ட அவரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கல்” என்று கூறியிருந்தார்.
மேலும், இவரது மறைவுக்கு எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய், உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.