நாகை மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல்: ரூ.3 லட்சம் பொருட்கள் கொள்ளை!

Nagai fishermen: நாகப்பட்டினம் மாவட்டம், வேளாங்கண்ணி அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த நாகை மாவட்ட மீனவர்களை இலங்கை கடற்கொள்ளையர்கள் கத்தி முனையில் மிரட்டி சுமார் ரூ.3 லட்சம் மதிப்பிலான மீன்பிடிப் பொருட்கள் மற்றும் டீசல் ஆகியவற்றை கொள்ளையடித்துச் சென்ற சம்பவம் மீனவர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நாகை மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல்: ரூ.3 லட்சம் பொருட்கள் கொள்ளை!

மீனவர்களை தாக்கி இலங்கை கடற்கொள்ளையர்கள்

Published: 

17 Apr 2025 20:10 PM

நாகப்பட்டினம் ஏப்ரல் 17: நாகப்பட்டினம் மாவட்டம் (Nagapattinam District) வேளாங்கண்ணி (Velankanni) அருகே மீன்பிடித்த நான்கு நாகை மீனவர்களை இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்கினர். இந்த தாக்குதலில் ரூ.3 லட்சம் மதிப்பிலான மீன்பிடி வலைகள், GPS, வயர்லெஸ் கருவி மற்றும் 500 லிட்டர் டீசல் கொள்ளையடிக்கப்பட்டது. மீனவர்கள் கத்தி மிரட்டலால் திகைத்து, குறைந்த டீசலால் கரை திரும்ப முடியாமல் தவித்தனர். பின்னர் பிற படகுகளில் இருந்து எரிபொருள் பெற்று சிரமத்துடன் கரை திரும்பினர். தொடர்ச்சியான தாக்குதலால் மீனவர்கள் வாழ்வாதாரம் (Fishermen’s livelihood) பாதிக்கப்பட்டுள்ளதாக வேதனை தெரிவித்தனர். தமிழக, மத்திய அரசுகள் நடவடிக்கை எடுத்து பாதுகாப்பு வழங்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மீன்பிடிக்கச் சென்ற மீனவர்கள் மீது பயங்கர தாக்குதல்

வேளாங்கண்ணி அடுத்த செருதூர் மீனவ கிராமத்தைச் சேர்ந்த சுரேஷ் என்பவருக்கு சொந்தமான பைபர் படகில் கோவிந்தசாமி, ரமேஷ், வெற்றி, ரவி ஆகிய நான்கு மீனவர்கள் கடந்த 2025 ஏப்ரல் 15-ம் தேதி கடலுக்கு மீன் பிடிக்கச் சென்றனர். அவர்கள் கோடியக்கரைக்கு வடக்கே சுமார் 16 நாட்டிக்கல் மைல் தொலைவில் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது, அங்கு படகில் வந்த இலங்கை கடற்கொள்ளையர்கள் மீனவர்களை கத்தி முனையில் மிரட்டியுள்ளனர். எதிர்பாராத இந்த தாக்குதலால் மீனவர்கள் செய்வதறியாது திகைத்துள்ளனர்.

கொள்ளையடிக்கப்பட்ட பொருட்களின் விவரம்

இலங்கை கடற்கொள்ளையர்கள் மீனவர்களிடமிருந்து சுமார் ரூ.3 லட்சம் மதிப்பிலான மீன்பிடி வலைகள், ஜி.பி.எஸ் எனப்படும் செயற்கைக்கோள் வழிகாட்டி கருவி, வயர்லெஸ் எனப்படும் கம்பியில்லா தகவல் தொடர்பு கருவி மற்றும் படகில் இருந்த சுமார் 500 லிட்டர் டீசல் ஆகியவற்றை கொள்ளையடித்துச் சென்று விட்டனர். இந்த விலை உயர்ந்த பொருட்களை இழந்ததால் மீனவர்கள் பெரும் நஷ்டத்திற்கு உள்ளாகியுள்ளனர்.

கரை திரும்ப முடியாமல் தவித்த பரிதாப நிலை

குறைந்த அளவு டீசலுடன் கரை திரும்ப முடியாமல் தவித்த மீனவர்கள், பின்னர் சக மீனவர்களிடம் எரிபொருள் உதவி பெற்று மிகுந்த சிரமத்திற்கு இடையே கரை திரும்பினர். தங்களது வாழ்வாதாரமான மீன்பிடிப் பொருட்கள் மற்றும் டீசல் கொள்ளையடிக்கப்பட்டதால் மீண்டும் தொழில் செய்ய முடியாத சூழ்நிலையில் இருப்பதாக மீனவர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.

பாதுகாப்பு கோரும் மீனவர்கள்

மாதத்தில் இரண்டு மூன்று முறை இலங்கை கடற்கொள்ளையர்களால் தாங்கள் பாதிக்கப்படுவதாகவும், கடலில் அச்சமின்றி மீன் பிடிக்கவும், சுதந்திரமாக தொழில் செய்யவும் தமிழக அரசு மற்றும் மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பாதிக்கப்பட்ட மீனவர்கள் கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்துள்ளனர். இந்த தொடர்ச்சியான தாக்குதல் சம்பவங்கள் நாகப்பட்டினம் மாவட்ட மீனவர்களிடையே பெரும் அச்சத்தையும், கவலையையும் ஏற்படுத்தியுள்ளது.