சென்னையில் ஏசி மின்சார ரயில் சேவையில் மாற்றம்.. பயணிகளே நோட் பண்ணுங்க!
Chennai AC EMU Train : சென்னையில் ஏசி மின்சார ரயில் சேவையின் நேரத்தை தெற்கு ரயில்வே மாற்றி அமைத்துள்ளது. பயணிகளின் கோரிக்கையை ஏற்று, ஏசி ரயில் சேவையை தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. புதிய நேர அட்டவணைப்படி, 2025 மே 2ஆம் தேதி முதல் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை ஏசி மின்சார ரயில்
சென்னை, ஏப்ரல் 30: சென்னையில் புறநகர் ஏசி மின்சார ரயில் (Chennai AC EMU Train) சேவையின் நேரத்தை தெற்கு ரயில்வே சென்னை கோட்டம் மாற்றி அமைத்து அறிவிப்பை வெளியிட்டுள்ளது. புதிய கால அட்டவணைப்படி, 2025 மே 2ஆம் தேதி முதல் ரயில்கள் இயக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை நகரத்தோடு, புறநகர் மக்களை இணைக்கும் போக்குவரத்து சேவையில் மின்சார ரயில் சேவை முக்கிய பங்காற்றுகிறது. போக்குவரத்து நெரிசலை குறைப்பதில் மின்சார ரயிலின் சேவை இன்றியமையாதது. அந்த வகையில், தெற்கு ரயில்வேயின் சென்னை கோட்டத்திற்கு கீழ் 600க்கும் மேற்பட்ட மின்சார ரயில் சேவைகள் இயக்கப்படுகிறது.
சென்னையில் ஏசி மின்சார ரயில் சேவையில் மாற்றம்
இதற்கிடையில், கோடை காலத்தில் மக்கள் சிரமம் அடைவதை தவிர்க்க, மின்சாரயில் ரயில்களில் ஏசி பெட்டிகளை இணைத்து இயக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்தனர். இந்த நிலையில், சென்னையில் முதல் ஏசி மின்சார ரயில் சேவை 2025 ஏப்ரல் 19ஆம் தேதி முதல் இயக்கப்பட்டு வருகிறது. ஞாயிற்று கிழமையை தவிர அனைத்து நாட்களிலும் ஏசி மின்சார ரயில் இயக்கப்பட்டு வருகிறது.
சென்னை கடற்கரை – செங்கல்பட்டு இடையே இருமார்க்கத்திலும் தலா இரண்டு சேவையும், சென்னை கடற்கரை – தாம்பரம் இடையே தலா ஒரு சேவையும் தற்போது இயக்கப்படுகிறது. இதற்கிடையில், எந்த நேரத்தில் ரயில்கள் இயக்கப்பட வேண்டும் என தெற்கு ரயில்வே பொது மக்களிடம் கருத்துகளை கேட்டது.
அதில் பெரும்பாலான மக்கள் வேலைக்காக கடற்கரை – செங்கல்பட்டு வழித்தடங்களில் நேரத்தை முன்கூட்டியே அதிகரிக்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டு இருந்தது. மேலும், மாலையிலும் கூடுதல் சேவை வழங்க வேண்டும் என விருப்பம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பயணிகளே நோட் பண்ணுங்க
இதனை கருத்தில் கொண்டு, ஏசி மின்சார ரயில் சேவை நேரத்தை தெற்கு ரயில்வே மாற்றி அமைத்துள்ளது. இந்த புதிய கால அட்டவணைப்படி 2025 மே 2ஆம் தேதி முதல் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, ஞாயிற்று கிழமை தவிர, மொத்தம் 8 சேவைகள் தினமும் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அதாவது, காலை 6.50 மணிக்கு தாம்பரத்தில் இருந்து புறப்படும் ரயில் செங்கல்பட்டுக்கு காலை 7.35 மணிக்கும் சென்றடைகிறது. இரண்டாவது ரயில், செங்கல்பட்டில் இருந்து காலை 7.50 மணிக்கு புறப்பட்டு, கடற்கரைக்கு 9.25 மணிக்கு சென்றடைகிறது.
மூன்றாவது ரயில் சென்னை கடற்கரையில் இருந்து 9.41 மணிக்கு புறப்பட்டு, தாம்பரத்திற்கு 10.36 மணிக்கு சென்றடைகிறது. நான்வது ரயில் தாம்பரத்தில் பகல் 1 மணிக்கு புறப்பட்டு, கடற்கரைக்கு 1.55 மணிக்கு சென்றடைகிறது. சென்னை கடற்கரையில் இருந்து 2.30 மணிக்கு புறப்படும் ரயில் செங்கல்பட்டு மாலை 4.00 மணிக்கு சென்றடைகிறது.
மேலும், செங்கல்பட்டில் இருந்து 4.30 மணிக்கு புறப்படும் ரயில், கடற்கரைக்கு 6.00 மணிக்கு சென்றடைகிறது. தொடர்ந்து, சென்னை கடற்கரையில் இருந்து 6.17 மணிக்கு புறப்படும் ரயில், செங்கல்பட்டுக்கு 7.50 மணிக்கு சென்றடைகிறது. செங்கல்பட்டில் இருந்து 8.10 மணிக்கு புறப்படுத் ரயில் தாம்பரத்திற்கு 8.50 மணிக்கு சென்றடைகிறது. இந்த அட்டவணைப்படி தான், மே 2ஆம் தேதி முதல் இயக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.