Summer Train Schedule: திருச்சி – தாம்பரம் இடையே சிறப்பு ரயில்! கூட்ட நெரிசலை தடுக்க தெற்கு ரயில்வே பக்கா பிளான்..!

Tiruchchirappalli Tambaram Special Train: தெற்கு ரயில்வே கோடை விடுமுறை காலத்தில் அதிகரிக்கும் பயணிகளின் நெரிசலைக் கருத்தில் கொண்டு, திருச்சிராப்பள்ளிக்கும் தாம்பரத்திற்கும் இடையே இரண்டு சிறப்பு ரயில்களை இயக்க உள்ளது. ஏப்ரல் 29 முதல் ஜூன் 29 வரை வாரத்தில் 5 நாட்கள் இயங்கும் இந்த ரயில்களுக்கான முன்பதிவு ஏப்ரல் 22 முதல் தொடங்கியுள்ளது. ராமேஸ்வரம் செல்லும் ரயில்களிலும் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

Summer Train Schedule: திருச்சி - தாம்பரம் இடையே சிறப்பு ரயில்! கூட்ட நெரிசலை தடுக்க தெற்கு ரயில்வே பக்கா பிளான்..!

திருச்சி - தாம்பரம் இடையே சிறப்பு ரயில்

Published: 

22 Apr 2025 17:37 PM

சென்னை, ஏப்ரல் 22: கோடை கால விடுமுறையில் பயணிகள் தங்கள் சொந்த ஊருக்கு பயணம் செல்ல அதிகளவில் திட்டமிடுவதால், இத்தகைய கூட்டநெரிசலை குறைக்க இரண்டு சிறப்பு ரயில்கள் (Special Trains) இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது. அதன்படி, ரயில் எண் 06190 திருச்சிராப்பள்ளி – தாம்பரம் விரைவு ரயில் (Tiruchchirappalli – Tambaram) 2025 ஏப்ரல் 29ம் தேதி முதல் 2025 ஜூன் 29 வரை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்த ரயிலானது வாரத்திற்கு ஏழு நாட்கள் இல்லாமல் 5 நாட்கள் மட்டுமே இயங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், பக்தர்களின் நலனுக்காக ராமேஸ்வரம் வரை செல்லும் ரயில்களுக்கு சிறப்பு ஏற்பாடுகளையும் தெற்கு ரயில்வே செய்துள்ளது.

எந்தெந்த கிழமைகளில் இயக்க திட்டம்..?

ரயில் எண் 06190 திருச்சிராப்பள்ளி – தாம்பரம் விரைவு ரயிலானது வாரத்திற்கு செவ்வாய், புதன், வெள்ளி, சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் திருச்சிராப்பள்ளியில் இருந்து அதிகாலை 5.35 மணிக்கு புறப்பட்டு, அதே நாளில் மதியம் 12.30 மணிக்கு தாம்பரம் சென்றடையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து, ரயில் எண் 06191 தாம்பரம் – திருச்சிராப்பள்ளி விரைவு சிறப்பு ரயில் 2025 ஏப்ரல் 29 முதல் 2025 ஜூன் 29 வரை செவ்வாய், புதன், வெள்ளி, சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் தாம்பரத்தில் இருந்து பிற்பகல் 3.45 மணிக்கு கிளம்பி, அதே நாளில் இரவு 10.40 மணிக்கு திருச்சிராப்பள்ளியை சென்றடையும். இதில், 2 ஏசி சிட்டிங் பெட்டிகள், 10 ஸ்லீப்பர் வகுப்பு சிட்டிங் (இருக்கை) பெட்டிகள், 6 பொது 2ம் வகுப்பு பெட்டிகள், 2 இரண்டாம் வகுப்பு பெட்டிகள் ஆகியவற்றைக் கொண்ட ரயில்களுக்கான முன்பதிவு ஏப்ரல் 22 ஆம் தேதி பிற்பகல் 2.15 மணிக்குத் தொடங்கும் என்று தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பக்தர்களின் நலன்:

சென்னையில் இருந்து ராமேஸ்வரத்திற்கு இயக்கப்படும் 2 விரைவு ரயில்கள் வைத்தீஸ்வரன் கோயில் நிலையத்தில் பாதயாத்திரை முடித்து திரும்பும் பக்தர்களின் நலனுக்காக ஒரு நிமிடம் தற்காலிகமாக நின்று செல்லும்.

2025 ஏப்ரல் 22ம் தேதியான இன்று மாலை 6.10 மணிக்கு தாம்பரத்தில் இருந்து புறப்படும் ரயில் எண் 16103 தாம்பரம் – ராமேஸ்வரம் எக்ஸ்பிரஸ் ரயில் வைத்தீஸ்வரன் கோயிலில் ஒரு நிமிட தற்காலிக நிறுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ரயில் 2025 ஏப்ரல் 22ம் தேதி இன்று இரவு 9.57 மணி முதல் வைத்தீஸ்வரன் கோயிலில் நிற்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல், 2025 ஏப்ரல் 22ம் தேதி இரவு 7.15 மணிக்கு சென்னை எழும்பூரில் இருந்து புறப்படும் ரயில் எண் 16751 சென்னை எழும்பூர் – ராமேஸ்வரம் எக்ஸ்பிரஸ் ஏப்ரல் 22ம் தேதி இரவு 11.45 மணி முதல் வைத்தீஸ்வரன் கோயிலில் ஒரு நிமிட தற்காலிக நிறுத்தம் அனுமதிக்கப்படும் என்று தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.