“சட்டவிரோதம்.. உங்ககிட்ட நேர்மை இல்ல” ஆளுநர் ரவிக்கு கடிவாளம் போட்ட உச்ச நீதிமன்றம்!
Supreme Court On Governor RN Ravi : தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட 10 மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்க ஆளுநர் ஆர்.என்.ரவி காலம் தாழ்த்தியது தொடர்பாக தமிழக அரசு தொடர்ந்த வழக்கில் உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. 10 முக்கிய மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காமல் நிறுத்தி வைத்திருப்பது சட்டவிரோதமானது என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது.

உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு தொடர்ந்த வழக்கில் ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிராக தீர்ப்பு வழங்கியுள்ளது. 10 முக்கிய மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காமல் நிறுத்தி வைத்திருப்பது சட்டவிரோதமானது என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. மேலும், ஆளுநர் ரவியின் செயல்பாடுகள் நேர்மையாக இல்லை எனறும் மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்க ஆளுநருக்கு ஒரு மாதம் காலக்கெடு அளிக்கப்படும் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது. தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்காததை எதிர்த்து தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.
“சட்டவிரோதம்.. உங்ககிட்ட நேர்மை இல்ல”
இந்த வழக்கை உச்ச நீதிமன்ற நீதிபதிகள் பர்திவாலா, ஆர்.மகாதேவன் ஆகியோர் அடங்கிய அமர்வு இந்த வழக்கை விசாரித்து வந்த நிலையில், 2025 ஏப்ரல் 8ஆம் தேதி தீர்ப்பு வழங்கப்பட்டது. அந்த தீர்ப்பில், ”சட்டப்பேரவையில் நிறைவேற்றி அனுப்பி 10 மசோதாக்களை குடியரசு தலைவருக்கு அனுப்பிய சட்டவிரோதமானது.
ரவியின் நடவடிக்கைகள் நல்லெண்ணத்துடன் இல்லை. அரசியலமைப்பு கொள்கைகளுக்கு எதிரானது. பல ஆண்டுகளாக மசோதாக்களை நிறைவேற்றாமல் குடியரசு தலைவருக்கு அனுப்பும் நடவடிக்கை சட்டப்படி தவறானது.
10 மசோதாக்களுக்காக ஆளுநர் எடுத்த அனைத்து நடவடிக்கைகளும் ரத்து செய்யப்படுகின்றன. இந்த மசோதாக்கள் ஆளுநரிடம் மீண்டும் சமர்ப்பிக்கப்பட்ட தேதியிலிருந்து அங்கீகரிக்கப்பட்டதாகக் கருதப்படும்” என்று கூறப்பட்டுள்ளது. மேலும், “அரசியலமைப்புச் சட்டத்தின்படி, மாநிலத்தின் நலனையும், விருப்பத்தையும் கவனித்துக் கொள்ளும் பொறுப்பை ஆளுநர் ஏற்றுக்கொள்கிறார்.
அவரது பதவிப் பிரமாணத்தில் மக்களின் நல்வாழ்வைப் பற்றி குறிப்பிட்ட குறிப்பு இருப்பதற்கு ஒரு காரணம் இருக்கிறது. மாநில சட்டமன்றத்திற்கு தடைகளை ஏற்படுத்தாமல் ஆளுநர்கள் விழிப்புடன் இருக்க வேண்டும். ஆளுநர் மாநிலத்தின் அரசியலமைப்புத் தலைவராகச் செயல்படுகிறார்.
ஆளுநர் ரவிக்கு கடிவாளம் போட்ட உச்ச நீதிமன்றம்
அரசியலமைப்பு அதிகாரத்தைப் பயன்படுத்துவது அரசியலமைப்பால் நிர்ணயிக்கப்பட்ட வரம்புகளுக்குள் செய்யப்பட வேண்டும். ஆளுநர் ஒரு மசோதா மீதான நடவடிக்கையை காலவரையின்றி தாமதப்படுத்த முடியாது.ஒப்புதல் அளிக்காவிட்டால் அதை சட்டமன்றத்திற்குத் திருப்பி அனுப்ப வேண்டும்” என்று உச்ச நீதிமன்ற நீதிபதிகள் கூறியுள்ளனர்.
மேலும், அந்த தீர்ப்பில், ”மசோதாக்களுக்கு குடியரசு தலைவர் ஒப்புதல் வழங்குவது சட்டவரம்பிற்கு உட்பட்டது இல்லை என்றாலும், ஆளுநரின் செயல்கள் சட்டத்திற்கு உட்பட்டு வராது என கூற முடியாது. அரசியலமைப்பு பதவியில் உள்ளவர்கள் அரசியலமைப்பின்படி மட்டுமே நடந்து கொள்ள வேண்டும். குறுகிய கால நோக்கங்களுக்காக நடந்து கொள்ளக் கூடாது.
அப்படி செய்யாவிட்டால், அவர்கள் அரசியலமைப்பை மாற்ற முயற்சிக்கிறார்கள் என்று அர்த்தம்” என்று கூறப்பட்டுள்ளது. உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் நன்றி தெரிவித்துள்ளார். மேலும், வரலாற்று சிறப்பு மிக்க தீர்ப்பு. இது தமிழ்நாட்டிற்கு மட்டுமல்ல. அனைத்து மாநிலங்களுக்கும் கிடைத்த மிகப்பெரிய வெற்றி. மாநில சுயாட்சி மற்றும் கூட்டாட்சி அரசியலுக்காக திமுக தொடர்ந்து போராடி வெல்லும்” என்று கூறினார்.