Seeman: பாஜகவுடன் கூட்டணியா..? இன்னும் 4 மாதத்தில் தெரியும்! சீமான் அதிரடி..!

Seeman Denies BJP Alliance: 2026 சட்டமன்ற தேர்தலுக்கு முன்னதாக நாம் தமிழர் கட்சி, தேசிய ஜனநாயக கூட்டணியில் இணையபோவதற்கான சாத்தியக்கூறுகள் என்று கூறப்பட்டு வந்தது. இந்தநிலையில், பாஜகவுடன் கூட்டணியா என்பது குறித்து நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் விளக்கம் அளித்துள்ளார்.

Seeman: பாஜகவுடன் கூட்டணியா..? இன்னும் 4 மாதத்தில் தெரியும்! சீமான் அதிரடி..!

நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான்

Published: 

08 Apr 2025 07:27 AM

சென்னை, ஏப்ரல் 8: தமிழ்நாடு பாஜக மாநில தலைவர் அண்ணாமலையும் (Tamil Nadu BJP Leader Annamalai), நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் (Naam Tamilar Katchi Chief Seeman) ஆகியோர் 2025 ஏப்ரல் 7ம் தேதியான நேற்று சென்னையில் நடந்த ஒரு நிகழ்ச்சியின் மேடையில் ஒன்றாக அமர்ந்திருந்தனர். ஒருவருக்கொருவர் சித்தாந்தங்கள் அளவில் விமர்சிக்கும் ஒரு தலைவர்களும் ஒரே மேடையில் அமர்ந்து மாறி மாறி புகழ்ந்து கொண்ட நிகழ்வு அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. தொடர்ந்து, 2026 சட்டமன்ற தேர்தலுக்கு முன்னதாக நாம் தமிழர் கட்சி, தேசிய ஜனநாயக கூட்டணியில் இணையபோவதற்கான சாத்தியக்கூறுகள் என்று கூறப்பட்டு வந்தது. இந்தநிலையில், பாஜகவுடன் கூட்டணியா என்பது குறித்து நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் விளக்கம் அளித்துள்ளார்.

பாஜகவுடன் கூட்டணியா..? சீமான் விளக்கம்:

2026 சட்டமன்ற தேர்தலில் பாஜகவுடன் கூட்டணியா..? பாஜகவின் பி டீம்தான் நாம் தமிழர் கட்சியா..? என்று செய்தியாளர்கள் சீமானிடம் கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்த சீமான், ” நான் யாரை சந்தித்தாலும் சரி, சந்திக்கவில்லை என்றாலும் சரி என்னை பாஜகவின் பி டீம் என்று சொல்வார்கள். நான் ஏன் பி டீம், ஏனென்றால் பாஜகவின் ஏ டீமாக திமுக இருக்கிறது. சும்மா ஏதாவது சொல்லி கொண்டு இருக்கிறார்கள். இதெல்லாம், ஒரு சிறு பிள்ளை விளையாட்டு. கோட்பாட்டளவில் நான் பாஜகவுடன் ரொம்ப தூரத்தில் உள்ளேன். இதை சும்மா போட்டு குழப்பிட்டு இருக்கக்கூடாது.” என்று தெரிவித்தார்.

உங்களை பாஜக கூட்டணி வைக்க முயற்சிக்கிறது என்ற செய்தியாளரின் கேள்விக்கு பதிலளித்த சீமான், “இன்னும் தேர்தல் அறிவிப்பிற்கு 4 மாதங்கள் உள்ளது. என்ன நடக்கிறது என்று தெரிந்துவிடும் அல்லவா! வருகின்ற 2026 சட்டமன்ற தேர்தலில் நான் தனித்து நிற்பேன், தனித்துவத்துடன் இருப்பேன்” என்று தெரிவித்தார்.

சீமானை புகழ்ந்த அண்ணாமலை:

சீமானுடன் ஒரே மேடையில் அமர்ந்திருந்த பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தனது உரையின் போது, ” ​​சீமான் அண்ணான் போர்க்களத்தில் ஒரு தளபதி. அவரது அரசியல் கொள்கைகளில் அவரது அசைக்க முடியாத அர்ப்பணிப்பை கொண்டுள்ளார். சீமான் அண்ணனின் உறுதிப்பாடு மறுக்க முடியாதது. எனக்கும் சீமான் அண்ணனுக்கும் பெரிய வித்தியாசம் இல்லை. நான் தேசியவாதத்தில் தமிழைப் பார்க்கிறேன். சீமான் தமிழில் தேசியவாதத்தைப் பார்க்கிறார்” என்று தெரிவித்தார்.

முன்னதாக சீமான் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை சென்னையில் ரகசியமாக சந்தித்ததாக சமூக வலைதளங்களில் செய்திகள் வெளியானது. இதுகுறித்து விளக்கமளித்த சீமான், “ நான் கிண்டியில் உள்ள ஒரு தனியார் ஹோட்டலில் ஒரு திருமண வரவேற்புக்காக சென்றிருந்தேன். அப்போது, அந்த ஹோட்டலில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அங்கு இருந்தார் என்பது கூட எனக்கு தெரியாது. நான் நிச்சயமாக அவரை சந்திக்கவில்லை. ரகசியமாக பேசுவதற்கு எந்த காரணமும் இல்லை” என்று கூறினார்.