இவருடன் மட்டும் தான் கூட்டணி.. சீமான் கைகாட்டும் தலைவர் யார் தெரியுமா?
Seeman Allegation: அனைத்து மதத்தினரும் இந்து சமய அறநிலையத் துறையின் ஆய்வு குழுவில் இருக்க வேண்டும் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கோரினார். திராவிட முன்னேற்ற கழகம் மற்றும் அதிமுக ஒன்றே எனக் கூறினார். தேர்தலில், டிரம்புடன் மட்டும் கூட்டணி வாய்ப்பு என நகைச்சுவையுடன் தெரிவித்துள்ளார்.

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்
சென்னை ஏப்ரல் 13: நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்(Naam Tamilar Katchi Chief Coordinator Seeman) வக்ஃப் வாரிய முறைகேடுகளுக்கு சட்டப்படி நடவடிக்கை வேண்டும் எனவும் வக்ஃப் வாரிய விவகாரத்தை பாஜக இந்து வாக்குகளை குவிக்க பயன்படுத்துவதாக குற்றம் சாட்டினார். இந்து அறநிலையத் துறையை ஆய்வு செய்யும் குழுவில் மற்ற மதத்தினரும் இருக்க வேண்டும் எனக் கோரினார். மத அடிப்படையில் வேறுபாடு காட்டக் கூடாது என வலியுறுத்தினார். திராவிட அதிகாரம் கொடுமையானது என்றும், திராவிட முன்னேற்ற கழகம் – அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் ஒரே வகை எனவும் விமர்சித்தார். தேர்தலில் டிரம்ப் தவிர யாருடனும் கூட்டணி இல்லை என நகைச்சுவையுடன் கூறினார்.
வக்ஃப் வாரியத்தில் முறைகேடுகள் நடந்தால், சட்டப்படி நடவடிக்கை எடுப்பதில் யாருக்கும் ஆட்சேபனை இல்லை என்று சீமான் குறிப்பிட்டார். அதே நேரத்தில், இந்து சமய அறநிலையத் துறையின் சொத்துக்கள் முறையாக பாதுகாக்கப்படுகிறதா என்பதை ஆய்வு செய்ய ஒரு குழு அமைக்கப்பட்டால், அதில் இஸ்லாமியர்கள் மற்றும் கிறிஸ்தவர்களும் உறுப்பினர்களாக இருக்க வேண்டும் என்பதுதான் நாம் தமிழர் கட்சியின் கோரிக்கை என்றும் அவர் திட்டவட்டமாக தெரிவித்தார். அப்படி ஒரு குழு அமைக்கப்பட்டால், இந்த போராட்டத்தை வாபஸ் பெற்றுக்கொள்வதாகவும் சீமான் கூறினார்.
மதரீதியான பாகுபாடு கூடாது- சீமான்
ஒரு குறிப்பிட்ட மதத்தை தழுவிய காரணத்திற்காக அவர்களை குறி வைப்பது சரியானது அல்ல என்று சீமான் வலியுறுத்தினார். திருப்பதி தேவஸ்தானம், ஐயப்பன் கோவில் மற்றும் தமிழ்நாடு இந்து சமய அறநிலையத் துறை நிர்வாகத்திலும் இஸ்லாமியர்களை நிர்வாகிகளாக சேர்க்க வேண்டும் என்றும் அவர் கோரிக்கை வைத்தார்.
திராவிடர்களின் அதிகாரம் கொடுமையானது – சீமான் விமர்சனம்
அதிகாரம் மிகவும் வலிமையானது என்று அம்பேத்கர் கூறியதை சுட்டிக்காட்டிய சீமான், திராவிடர்களின் அதிகாரம் அதைவிட கொடுமையானது என்று விமர்சித்தார். வக்ஃப் வாரியத்திற்கு சொந்தமான இடத்தை எடுத்து துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் விளையாட்டு அரங்கம் கட்டியது எல்லோருக்கும் தெரியும் என்றும் அவர் குற்றம் சாட்டினார்.
அதிமுக, திமுக ஒரே மட்டைகள் – கூட்டணி குறித்த கருத்து
அதிமுக மற்றும் திமுக ஆகிய இரண்டு கட்சிகளும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள் தான் என்று சீமான் கடுமையாக விமர்சித்தார். அதிமுக – பாஜக கூட்டணி குறித்து செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு பதிலளிக்க மறுத்த அவர், எல்லாவற்றிற்கும் கருத்து சொல்லிக் கொண்டிருக்க முடியாது என்றார். தேர்தலில் 40 முனை போட்டி இருந்தாலும், அவரது முனை தான் கூர்மையான முனை என்றும் அவர் நம்பிக்கையுடன் கூறினார்.
தேர்தல் கூட்டணி – டிரம்ப் உடன் மட்டும் வாய்ப்பு!
தேர்தலில் நாம் தமிழர் கட்சி கூட்டணியா அல்லது தனித்துப் போட்டியா என்ற கேள்விக்கு பதிலளித்த சீமான், செய்தியாளர் ஒரு கட்சி ஆரம்பித்தால் கூட்டணி வைக்க தயார் என்றும், ஒரே ஒரு கட்சியுடன் தான் கூட்டணி வைக்க வாய்ப்பு இருக்கிறது என்றும், அது அமெரிக்க முன்னாள் அதிபர் டிரம்ப் உடன் தான் என்றும் நகைச்சுவையாக கூறினார். அமைச்சர் பதவியில் இருந்து பொன்முடியை நீக்க வேண்டும் என்று சொல்வது தனது வேலை இல்லை என்றும் அவர் தெரிவித்தார்.