உடைந்த அதிமுக கூட்டணி.. டாடா காட்டிய எஸ்டிபிஐ கட்சி.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு!
AIADMK Alliance SDPI Party: அதிமுகவுடனான கூட்டணியில் இருந்து எஸ்டிபிஐ கட்சி விலகுவதாக அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறது. அதிமுக கூட்டணியில் இருந்த ஒரே ஒரு இஸ்லாமிய கட்சி விலகியுள்ளது. பாஜக கூட்டணி அமைத்த காரணத்தால் விலகியதாக அக்கட்சி பொதுச் செயலாளர் அபூபக்கர் சித்திக் கூறியுள்ளார்.

எஸ்டிபிஐ கட்சி
சென்னை, ஏப்ரல் 19: அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் (அதிமுக) கட்சியுடனான (AIADMK BJP Alliance) கூட்டணியில் இருந்து விலகுவதாக இந்திய சமூக ஜனநாயக கட்சி (SDPI Party) கட்சி அறிவித்துள்ளது. பாஜகவுடன் கூட்டணி வைத்த எந்த அரசியல் கட்சியுடனும் கூட்டணி கிடையாது என திட்டவட்டமாக கூறியுள்ளதாக தெரிகிறது. இதுதொடர்பாக 2025 ஏப்ரல் 19ஆம் தேதி நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில் எஸ்டிபிஐ கட்சி பொதுச் செயலாளர் அபூபக்கர் சித்திக் அறிவித்துள்ளார்.
உடைந்த அதிமுக கூட்டணி
அதிமுக பாஜக கூட்டணி அமைத்ததால், எஸ்டிபிஐ கட்சி கூட்டணியில் இருந்து வெளியேறியுள்ளது. அதிமுக கூட்டணியில் இருந்த ஒரே ஒரு இஸ்லாமிய கட்சி எஸ்டிபிஐ தான். இந்த நிலையில், இந்த கட்சி கூட்டணியில் இருந்து விலகியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
2026ஆம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. இதனால், அனைத்து கட்சிகளும் தீவிரமாக பணியாற்றி வருகின்றனர். ஆளும் திமுக கூட்டணி ஆட்சியை தக்க வைக்க முனைப்பு காட்டி வருகிறது. அதே நேரத்தில், திமுகவை அகற்றி ஆட்சி கட்டிலில் அமர அதிமுக கூட்டணி வியூகம் அமைத்து வருகிறது.
இதில், 2 வருடங்களுக்கு பிறகு மீண்டும் அதிமுக பாஜகவுடன் கூட்டணி அமைத்துள்ளது. எனவே, 2026 சட்டப்பேரவை தேர்தலில் அதிமுக பாஜக இணைந்து போட்டியிடுவது முடிவாகி உள்ளது. கடந்த வாரம் சென்னை வந்த அமித் ஷா கூட்டணியை உறுதிப்படுத்தி அறிவிப்பை வெளியிட்டார்.
அதிமுக கூட்டணியில் இருந்து விலகிய எஸ்டிபிஐ கட்சி
தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி அதிமுக தலைமையில் தேர்தலை சந்திக்கும் என்றும் தமிழகத்தில் 2026 தேர்தலுக்கு பின்னர் தேசிய ஜனநாயக கூட்டணி அரசு அமையும் என்றும் கூறினார். இது அதிமுகவில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதனால், அதிமுகவிலேயே மூத்த தலைவர்கள் அதிருப்தியில் உள்ளதாக தெரிகிறது. மேலும், அதிமுக கூட்டணி கட்சிகளும் அதிருபதியில் உள்ளதாக தெரிகிறது. இந்த நிலையில், அதிமுக கூட்டணியில் இருந்த இந்திய சமூக ஜனநாயக கட்சி விலகுவதாக அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
பாஜகவுடன் கூட்டணி வைத்த எந்த அரசியல் கட்சியுடனும் கூட்டணி கிடையாது என்று அக்கட்சி பொதுச் செயலாளர் அபூபக்கர் சித்தி கூறியுள்ளார். 2025 ஏப்ரல் 18ஆம் தேதியான நேற்று நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியுள்ளார். இதுகுறித்து செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய எஸ்டிபிஐ பொதுச் செயலாளர் அபூபக்கர் சித்திக், “தேவை என்றால் யார் காலிலும் விழுவார்கள்.
காரணம் என்ன?
தேவையில்லை என்றால் யாரை வேண்டுமானாலும் எதிர்பார்கள் அது பாஜகவின் நிலைபாடு. அவர்களோடு கூட்டணி வைத்த கட்சிகள் எல்லாம் அழிந்துவிட்டன. இப்போது தமிழகத்தில் ஒரு கட்சி அழியப்போவது உறுதி” என்று கூறியதாக தெரிகிறது. கடந்த 2024 லோக்சபா தேர்தல் எஸ்டிபிஐ கட்சி அதிமுக கூட்டணியில் இருந்தது. அதிமுக கூட்டணியில் உள்ள ஒரே இஸ்லாமிய கட்சி எஸ்டிபிஐ கட்சி ஒன்று தான்.
அதிமுக கூட்டணியில் இருந்து எஸ்டிபிஐ விலகியது, அதிமுகவுக்கு பின்னடைவாக பார்க்கப்படுகிறது. ஏனென்றால், கடந்த 2021 சட்டப்பேரவையில் தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி அமைத்ததால் சிறுபான்மையினரின் வாக்குகள் அதிமுகவுக்கு பெரிய அளவில் செல்லவில்லை என்று அரசியல் வல்லுநர்கள் கூறுகின்றனர்.
எனவே, தற்போது, முஸ்லீம் கட்சியான எஸ்டிபிஐ விலகியது அதிமுக பாஜக கூட்டணிக்கு பின்னடைவாக இருக்கும் என கருதப்படுகிறது. மேலும், எஸ்டிபிஐ கட்சி திமுகவில் இணையும் என்று கூறப்படுகிறது. இதன் மூலம் சிறுபான்மையினர் வாக்குகள் திமுக பக்கம் சாயும் என எதிர்பார்க்கப்படுகிறது.