சாதி பெயர்களை எடுங்க.. மீறினால் கல்வி நிறுவனங்களில் அங்கீகாரம் ரத்து.. ஐகோர்ட் அதிரடி!
Madras High Court: கல்வி நிறுவனங்களில் உள்ள சாதி பெயர்களைநீக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இல்லையென்றால், தமிழ்நாடு சங்கங்கள் பதிவுச் சட்டம், 1975 இன் படி, சம்பந்தப்பட்ட கல்வி நிறுவனத்தின் உரிமம் ரத்து செய்யப்படும் என்று உயர் நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது.

சென்னை, ஏப்ரல் 17: கல்வி நிறுவனங்களில் உள்ள சாதி பெயர்களை 4 வாரங்களுக்குள் நீக்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இல்லையென்றால், சம்பந்தப்பட்ட கல்வி நிறுவனத்தின் உரிமம் ரத்து செய்யப்படும் என்றும் உயர் நீதிமன்றம் எச்சரித்துள்ளது. தென்னிந்திய செங்குந்த மகாஜன சங்கத்தை நிறுவிக்க சிறப்பு அதிகாரிகளை நியமித்ததை எதிர்த்து, சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை உயர் நீதிமன்றம் பரத சக்கரவர்த்தி விசாரித்து வந்த வந்த நிலையில், 2025 ஏப்லல் 16ஆம் தேதி தீர்ப்பு வழங்கினார்.
கல்வி நிறுவனங்களில் சாதி பெயர்
அதில், 2025-26 கல்வியாண்டு முதல் தமிழ்நாட்டில் உள்ள கல்வி நிறுவனங்களில் சாதி பெயர் இருக்கக் கூடாது என்றும் சாதிப் பெயர்களைக் கொண்ட அனைத்து கல்வி நிறுவனங்கள் அதன் பெயரை 4 வாரங்களுக்குள் நீக்க வேண்டும்.
இல்லையென்றால் சம்பந்தப்பட்ட கல்வி நிறுவனத்தின் உரிமம் ரத்து செய்யப்படும் என நீதிபதி பரத சக்கரவர்த்தி உத்தரவிட்டார். மேலும், நீதிபதி கூறுகையில், “சாதியின் பெயரால், பெற்றோர்கள் தங்கள் மகள் அல்லது மகனை வேறு சாதியினரை மணந்தால் கொல்கிறார்கள்.
பள்ளிக் குழந்தைகள் மணிக்கட்டு பட்டைகள் அணிந்து, கத்தியை மறைத்து வைத்துக்கொண்டு மற்ற சாதி மாணவர்களைத் தாக்குகிறார்கள். சாதி அமைப்பு ஒரு மதத்திற்கு மட்டும் மட்டுப்படுத்தப்படவில்லை. இன்றுவரை நிலவும் சாதி அமைப்புக்கும் மதத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை” கூறினார்.
மேலும் தனது உத்தரவில், சாதி பெயரில் செயல்படும் சங்ககளின் பட்டியலை வரையுமாறு அனைத்து சங்கப் பதிவாளருக்கும் அறிவுறுத்துமாறு பதிவுத் துறை ஆய்வாளருக்கு நீதிபதி உத்தரவிட்டார்.
சென்னை ஐகோர்ட் அதிரடி உத்தரவு
எந்தவொரு சங்கமும் உத்தரவுகளைப் பின்பற்றவில்லை என்றால், அவர்களின் செயல்பாட்டை சட்டவிரோதமாகக் கருதி, தமிழ்நாடு சங்கங்கள் பதிவுச் சட்டம், 1975 இன் படி, பதிவை ரத்து செய்ய வேண்டும். மேலும் அவர்களின் சொத்துக்கள் சட்டத்திற்குத் தெரிந்த முறையில் கையாளப்பட வேண்டும்
இந்த சங்கங்கள் ஏதேனும் உதவி பெறும் அல்லது தனியார் பள்ளிகள், கல்லூரிகள் அல்லது பிற கல்வி நிறுவனங்களை நடத்தினால், வளாகத்திலோ அல்லது அவர்களின் பதிவுகளிலோ சாதிப் பெயர் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ எந்த வகையிலும் சித்தரிக்கப்படாமல் இருப்பதை அரசு உறுதி செய்ய வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் கூறியுள்ளது.
சாதி அடிப்படையிலான கட்டுப்பாடுகள் இல்லாமல் அனைவருக்கும் உறுப்பினர் சேர்க்கையைத் திறக்கவும் அறிவுறுத்தல்களுடன் அவர்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டார். பதிவுத் துறைத் தலைவர், மூன்று மாதங்களுக்குள் அறிவிப்புகளை வெளியிடும் பணியைத் தொடங்கவும், அதன் பிறகு ஆறு மாதங்களுக்குள் முழு செயல்முறையையும் முடிக்கவும் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி பரத சக்கரவர்த்தி உத்தரவிட்டார்.