பயணிகளே..! புறநகர் ஏசி ரயில் எப்போதெல்லாம் இயக்க வேண்டும்..? கருத்துக்கள் வரவேற்பு
AC Suburban Electric Train: தமிழகத்தின் முதல் ஏசி புறநகர் மின்சார ரயில் சேவை சென்னை-செங்கல்பட்டு இடையே தொடங்கியது. ரயிலில் ஏசி வசதி, தானியங்கி கதவுகள் உள்ளிட்ட நவீன அம்சங்கள் உள்ளன. பயணிகளின் கருத்துக்களை வாட்ஸ்அப்பில் (6374713251) மற்றும் கூகுள் படிவத்தின் மூலம் சேகரிக்கப்படுகின்றன.

தமிழகத்தின் முதல் ஏசி புறநகர் மின்சார ரயில்
சென்னை ஏப்ரல் 21: தமிழகத்தின் முதல் ஏசி புறநகர் மின்சார ரயில் சேவை (Tamil Nadu’s first AC suburban electric train) சென்னை-செங்கல்பட்டு (Chennai- Chengalpattu) இடையே தொடங்கியது. பயணிகளின் தேவையை அடிப்படையாகக் கொண்டு, ரயிலின் இயக்க நேரங்களை சிறப்பாக நிர்ணயிக்க தெற்கு ரெயில்வே (Southern Railway), வாட்ஸ்அப்பின் மூலம் (6374713251) கருத்துகள் சேகரிக்கிறது. குரல் செய்திகள் ஏற்கப்படாது என்றும், கூகுள் படிவத்தின் மூலமும் பரிந்துரைகள் தெரிவிக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ரயிலில் ஏசி வசதி, தானியங்கி கதவுகள் உள்ளிட்ட நவீன அம்சங்கள் உள்ளன. இந்த ரயில் 110 கி.மீ வேகத்தில் 12 இடங்களில் நின்று செல்லும்.
முதல் ஏசி புறநகர் மின்சார ரயில் சேவை இயக்கம்
தமிழகத்தின் முதல் ஏசி புறநகர் மின்சார ரயில் சேவை சென்னை கடற்கரை மற்றும் செங்கல்பட்டு இடையே இயக்கப்பட்டு வருகிறது. இதன் இயக்க நேரங்களை பயணிகளின் தேவைகளுக்கு ஏற்ப மாற்றுவதற்காக தெற்கு ரெயில்வே பொதுமக்களிடமிருந்து கருத்துகளை கேட்டு வருகிறது. பயணிகள் தங்கள் பரிந்துரைகளை வாட்ஸ்அப்பில் மட்டும் தெரிவிக்கலாம் என்றும், குரல் செய்திகள் மற்றும் அழைப்புகள் ஏற்கப்படமாட்டாது என்றும் தெற்கு ரெயில்வே தெரிவித்துள்ளது. பரிந்துரைகள் பெற 6374713251 என்ற வாட்ஸ்அப் எண் வழங்கப்பட்டுள்ளது.
எப்போதெல்லாம் ஏசி ரயில் இயக்கப்பட்ட வேண்டும்?
மேலும், விருப்பமுள்ளவர்கள் கூகுள் படிவத்தின் மூலமாகவும் தங்கள் கருத்துகளை பதிவு செய்யலாம். ஏற்கனவே பயணிகள் நீண்டநாள் கோரிக்கையாக ஏசி வசதியுடன் கூடிய ரயில் சேவை தொடங்க வேண்டுமென கேட்டிருந்தனர். இதனை ஏற்று ரயில்வே புதிய ஏசி ரயிலை தயாரித்து, கடந்த மார்ச் மாதம் சோதனை ஓட்டம் நடத்தியது. சிறிய தொழில்நுட்ப கோளாறுகள் சரிசெய்யப்பட்டு தற்போது சேவை தொடங்கப்பட்டுள்ளது. இந்த ரயில் 12 பெட்டிகள் கொண்டதாக இருக்கிறது. இதன் அதிகபட்ச வேகம் 110 கி.மீ. ஆகும். இதில் 1,116 பேர் அமர்ந்து மற்றும் 3,798 பேர் நின்று பயணிக்கக்கூடிய வசதி உள்ளது.
எந்தெந்த நேரங்களில் ஏசி ரயில் இயக்கம்?
ஏசி வசதி, தானியங்கி கதவுகள், அடுத்த நிலையம் அறிவிக்கும் அமைப்புகள் உள்ளிட்ட பல நவீன அம்சங்கள் இதில் இணைக்கப்பட்டுள்ளன. புதிய சேவையின் கீழ், தாம்பரம் நிலையத்தில் இருந்து அதிகாலை 5.45 மணிக்கு புறப்படும் ரயில், காலை 6.45 மணிக்கு சென்னை கடற்கரையை வந்தடையும். பின்னர் கடற்கரை நிலையத்திலிருந்து காலை 7.00 மணிக்கு புறப்பட்டு செங்கல்பட்டுக்கு காலை 8.45 மணிக்கு சென்றடையும். பிற்பகல் 3.45 மற்றும் இரவு 7.35 மணியளவில் கடற்கரையிலிருந்து புறப்படும் ரயில்கள் மாலை 5.25 மணிக்குள் செங்கல்பட்டுக்கு சென்றடைகின்றன. அதேபோல் செங்கல்பட்டிலிருந்து காலை 9.00 மற்றும் மாலை 5.45 மணிக்கு புறப்படும் ரயில்கள் இரவு 7.15 மணிக்கு கடற்கரையை அடைகின்றன. வழக்கமான ரயில்கள் போல், இந்த ஏசி ரயிலும் கடற்கரை – தாம்பரம் இடையே உள்ள 12 இடங்களில் நிறுத்தம் தருகிறது.
12 ரயில் நிலையங்களில் நின்று செல்லும் ரயில்
இதில் கோட்டை, பூங்கா, எழும்பூர், மாம்பலம், பரங்கிமலை, தாம்பரம், கூடுவாஞ்சேரி, சிங்கப்பெருமாள் கோவில் உள்ளிட்ட நிலையங்கள் அடங்கும். இந்த ரயில் சேவை ஞாயிற்றுக்கிழமைகள் தவிர, திங்கள் முதல் சனிக்கிழமை வரை மட்டுமே இயக்கப்படும். கட்டண விவரங்களின்படி, சென்னை கடற்கரை முதல் செங்கல்பட்டு வரை ₹105 ஆகவும், தாம்பரம் – செங்கல்பட்டு ₹85, தாம்பரம் – எழும்பூர் ₹60, செங்கல்பட்டு – எழும்பூர் ₹85 எனவும் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பயணிகள் இந்த புதிய சேவையை பெரிதும் வரவேற்று மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.