PMK Internal Conflict: அன்புமணிக்கு ஆதரவாக போஸ்ட்! திலகபாமாவை கடுமையாக விமர்சித்த வடிவேல் இராவணன்!

PMK Crisis Deepens: அன்புமணி ராமதாஸ் செயல் தலைவராக தரம் தாழ்த்தப்பட்டதைத் தொடர்ந்து, பொருளாளர் திலகபாமா ராமதாஸை விமர்சித்தார். இதற்குப் பதிலடியாக, பொதுச் செயலாளர் வடிவேல் இராவணன் திலகபாமாவை கடுமையாக விமர்சித்து கட்சியில் இருந்து வெளியேறும்படி கூறியுள்ளார். இந்த சம்பவங்கள் பாமகவின் எதிர்காலத்திற்கு பெரும் அச்சுறுத்தலாக உள்ளது.

PMK Internal Conflict: அன்புமணிக்கு ஆதரவாக போஸ்ட்! திலகபாமாவை கடுமையாக விமர்சித்த வடிவேல் இராவணன்!

பாமக பொருளாளர் திலகபாமா - பாமக பொதுச்செயலாளர் வடிவேல் இராவணன்

Published: 

14 Apr 2025 21:20 PM

சென்னை, ஏப்ரல் 14: கடந்த சில நாட்களாக பாட்டாளி மக்கள் கட்சி விவகாரம் தலைத்தூக்கி வருகிறது. கடந்த இரு தினங்களுக்கு முன்பு பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் ராமதாஸ் தனது மகன் அன்புமணியை (Anbumani Ramadoss) அக்கட்சியின் தலைவர் பதவியிலிருந்து செயல் தலைவராக தரம் இறக்கப்பட்டார். அதேநேரத்தில், கட்சியின் நிறுவனர் என்ற முறையில் ராமதாஸ் தனக்கு வழங்கப்பட்ட அதிகாரங்களின் கீழ், அவர் தன்னை தலைவராக அறிவித்தார். மேலும், கட்சியின் நீண்டகாலமாக உள்ள ஜிகே மணி கௌரவ தலைவராக தொடர்வார் என்றும் தெரிவிக்கப்பட்டது. இந்தநிலையில், அன்பு மணி ராமதாஸ் பதவி இறக்கம் குறித்து அக்கட்சிக்குள் இருக்கும் பல்வேறு நிர்வாகிகள் ஆதரவும், எதிர்ப்பும் தெரிவித்து வருகின்றனர். அந்தவகையில், பாமகவின் பொருளாளர் திலகபாமா (Thilagabama) தனது முகநூல் பக்கத்தில் ராமதாஸை விமர்சித்தார்.

அன்புமணிக்கு ஆதரவு தெரிவித்த திலகபாமா:

அன்புமணிக்கு ஆதரவாகவும், ராமதாஸை விமர்சித்தும் பாமக பொருளாளர் திலகபாமா வெளியிட்ட பதிவில், “பாட்டாளி மக்கள் கட்சியில் ஜனநாயகம் கொலை செய்யப்பட்டுள்ளது. இதுவரை மருத்துவர் அய்யா எடுத்த எல்லா முடிவுகளும் சரியானதாகவே இருந்தது. மருத்துவர் அய்யா அன்பை ருசித்தவள் நான். ஆனால், அன்பு மணியை நீக்கிய முடிவு தவறு. அன்புதானே எல்லாம்” என்று குறிப்பிட்டிருந்தார்.

வடிவேல் இராவணன் கடுமையான விமர்சனம்:

தொடர்ந்து, பாமக நிறுவனர் ராமதாஸை விமர்சித்த அக்கட்சியின் பொருளாளர் திலகபாமாவை கட்சியில் இருந்து வெளியேற வேண்டும் என பாமக பொதுச்செயலாளர் வடிவேல் இராவணன் கடுமையாக அறிக்கை மூலம் விமர்சித்துள்ளார். அவை முக்கிய பாயிண்ட்ஸ்களாக பின்வருமாறு..

பாமக பொருளாளர் திலகபாமா கட்சிக்கு நேற்று வந்தவர். பா.ம.க.வின் கொள்கை கோட்பாடுகள் பற்றி அவருக்கு ஒன்றும் தெரியாது. பாமக தொடங்கி கடந்த 35 ஆண்டுகளாக மேற்கொள்ளப்பட்ட ஆர்ப்பாட்டங்கள், போராட்டங்கள், பொதுக்கூட்டங்கள், மாநாடு என எதிலும் திலகபாமா கலந்து கொண்டது கிடையாது.

அரசியல் என்றால் என்னவென்றே தெரியாத அரைவேக்காடு திலகபாமா. பாட்டாளிகளின் உயிரியக்கமான பா.ம.க.வை அழிப்பதற்காக வெளியில் இருந்து பாமக கட்சிக்குள் புகுந்த நோய்க்கிருமி. திலகபாமா பாட்டாளி மக்களின் தோழர் அல்ல.

ராமதாஸை ஜனநாயகப் படுகொலை செய்தவர் என்று வஞ்சகத்தோடு பேசிய திலகபாமாவை வன்மையாகக் கண்டிக்கிறேன். கடந்த 35 ஆண்டுகளுக்கும் மேலாக அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறேன். படிப்படியாக முன்னேறி 15 ஆண்டுகளுக்கும் மேலாக பொதுச் செயலாளர் பொறுப்பில் இருந்து வருகிறேன்.

நன்றியுணர்ச்சி இன்றி பாமக நிறுவனர் ராமதாஸை வசை பாடி இருக்கும் திலகபாமா உடனடியாக கட்சியிலிருந்து வெளியேறி விடுவதுதான் அவருக்கு நல்லது.

தைலாபுரத்திலிருந்து எப்போது தைலம் வரும் என்று முன்னாள் திமுக தலைவர் கலைஞர் காத்திருந்தநிலையில், நேற்று முளைத்த காளான்கள் அவரை வசை பாடுவதுதான் பேரவலம்.

என்று கடுமையாக விமர்சித்திருந்தார்.