என்டிஏ குடும்பத்தில் அதிமுக.. மீண்டும் எம்.ஜி.ஆர், ஜெயலலிதா ஆட்சி.. பிரதமர் மோடி போட்ட ட்வீட்!
AIADMK BJP Alliance : அதிமுக பாஜக கூட்டணி குறித்து பிரதமர் மோடி தனது எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ளார். தேசிய ஜனநாயகக் கூட்டணி என்ற குடும்பத்தில் அஇஅதிமுக இணைந்திருப்பது மகிழ்ச்சி என்றும் ஊழல் மலிந்த, பிரிவினைவாத திமுகவை விரைவாக வீழ்த்துவது முக்கியமானது. அதனை நமது கூட்டணி செய்து முடிக்கும் என்றும் பிரதமர் மோடி குறிப்பிட்டிருக்கிறார்.

அதிமுக - பாஜக கூட்டணி
சென்னை, ஏப்ரல் 12: தமிழகத்தில் அதிமுக – பாஜக கூட்டணி (AIADMK BJP Alliance) அமைந்துள்ளதை அடுத்து, பிரதமர் மோடி (PM Modi) அது குறித்து தனது எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ளார். தேசிய ஜனநாயகக் கூட்டணி என்ற குடும்பத்தில் அஇஅதிமுக இணைந்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது என்று பிரதமர் மோடி குறிப்பிட்டிருக்கிறார். தமிழகத்தில் 2026ஆம் ஆண்டு சட்டப்பேரவை (2026 Tamil Nadu Assembly Election) தேர்தல் நடக்கும் நிலையில், கடந்த சில மாதங்களாகவே அரசியல் சூழல் பரபரப்பாக காணப்படுகிறது. குறிப்பாக, அதிமுக – பாஜக கூட்டணி குறித்து சலசலப்பு இருந்து வந்தது.
என்டிஏ குடும்பத்தில் அதிமுக
இதனை மத்திய உள்துறை அமித் ஷா சென்னை வந்து கச்சிதமாக முடித்து வைத்தார். அதாவது, 2021ஆம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலுக்கு பிறகு பாஜகவுடன் கூட்டணி கிடையாது என்று எடப்பாடி பழனிசாமி சொல்லிக் கொண்டு வந்தார்.
அதன்படி, 2024 லோக்சபா தேர்தலில் அதிமுக பாஜகவுடன் கூட்டணி அமைக்கவில்லை. அதன்பிறகு கூட்டணியே இல்லை என்று சொல்லிக் கொண்டு வந்த எடப்படி பழனிசாமி, தற்போதைய அரசியல் சூழலை கருத்தில் கொண்டு மீண்டும் பாஜகவுடன் கைகோர்த்துள்ளார்.
குறிப்பாக, பாஜக மாநில தலைவரை மாற்றிய பிறகே, அதிமுக பாஜகவுடன் கைகோர்க்க முடிவு எடுத்தது. இதனால், தற்போது இணக்கமான சூழல் அமைந்ததாக தெரிகிறது. அதாவது, 2025 ஏப்ரல் 11ஆம் தேதி சென்னை வந்த அமித் ஷா, 2026 சட்டப்பேரவையில் அதிமுக பாஜக கூட்டணி அமைத்து போட்டியிடும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.
மேலும், பாஜக மாநில தலைவராக நயினோர் நாகேந்திரன் போட்டியின்றி தேர்வாகி இருக்கிறார். 2021 தேர்தலுக்கு மீண்டும் அதிமுக பாஜக கூட்டணி அமைத்தது இருகட்சியினரியை மகிழ்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த நிலையில், இதுகுறித்து பிரதமர் மோடி தனது எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ளார்.
பிரதமர் மோடி போட்ட ட்வீட்
Stronger together, united towards Tamil Nadu’s progress!
Glad that AIADMK joins the NDA family. Together, with our other NDA partners, we will take Tamil Nadu to new heights of progress and serve the state diligently. We will ensure a government that fulfils the vision of the…
— Narendra Modi (@narendramodi) April 11, 2025
அதாவது, ”வலுவாக இணைவோம், தமிழ்நாட்டின் முன்னேற்றத்திற்காக ஒன்றுபடுவோம். தேசிய ஜனநாயகக் கூட்டணி என்ற குடும்பத்தில் அஇஅதிமுக இணைந்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. தேசிய ஜனநாயகக் கூட்டணியின் இதர கூட்டாளிகளுடன் ஒன்றிணைந்து, நாம் தமிழ்நாட்டை முன்னேற்றத்தின் புதிய உச்சங்களுக்குக் கொண்டுசெல்வோம்.
மாநிலத்திற்கு அயராது பாடுபடுவோம். மாமனிதர் எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா அவர்களின் தொலைநோக்குப் பார்வையை செயல்படுத்தும் ஓர் அரசை நாம் உறுதிசெய்வோம். தமிழ்நாட்டின் நலனுக்கும், முன்னேற்றத்திற்கும், தமிழ்க் கலாச்சாரத்தின் தனித்துவத்தைப் பாதுகாப்பதற்கும் ஊழல் மலிந்த, பிரிவினைவாத திமுகவை விரைவாக வீழ்த்துவது முக்கியமானது. அதனை நமது கூட்டணி செய்து முடிக்கும்” என்று குறிப்பிட்டிருக்கிறார்.