“என் உயிர் நண்பர் விஜயகாந்த்” பிரேமலதா பகிர்ந்த வீடியோ… உருக்கமாக பதிவிட்ட பிரதமர் மோடி!
PM Modi On vijayakanth: மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த் குறித்து பிரதமர் மோடி தனது எக்ஸ் தளத்தில் உருக்கமாக பதிவிட்டுள்ளார். அதாவது, எனது இனிய நண்பர் கேப்டன் விஜயகாந்த் அற்புதமானவர் என்றும் சமூக நன்மைக்காக அவர் செய்த பணிகளுக்காக பல தலைமுறைகளைச் சேர்ந்த மக்கள் அவரை நினைவு கூர்கிறார்கள் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

சென்னை, ஏப்ரல் 15: பிரதமர் மோடி மற்றும் மறைந்த தேசிய முற்போக்கு திராவிட கழக தலைவர் விஜயகாந்த் (vijayakanth) இடையேயான உறவு குறித்து பிரமலதா விஜயகாந்த் வீடியோ வெளியட்டிருந்தார். இந்த நிலையில், இதற்கு பிரதமர் மோடி (PM Modi) விஜயகாந்த் பற்றி உருக்கமாக தனது எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ளார். அதில், “எனது இனிய நண்பர் கேப்டன் விஜயகாந்த் அற்புதமானவர். நானும், அவரும் பல ஆண்டுகளாக நெருக்கமாக கலந்துரையாடியதுடன், இணைந்து பணியாற்றியும் இருக்கிறோம். சமூக நன்மைக்காக அவர் செய்த பணிகளுக்காக பல தலைமுறைகளைச் சேர்ந்த மக்கள் அவரை நினைவு கூர்கிறார்கள்” என்று குறிப்பிட்டிருந்தார்.
“என் உயிர் நண்பர் விஜயகாந்த்”
2026ஆம் ஆண்டு தமிழகத்தில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலுக்கு சரியாக இன்னும் 12 மாதங்களே இருக்கும் நிலையில், அனைத்து கட்சிகளை தீவிரமாக தேர்தல் பணியாற்றி வருகின்றன. குறிப்பாக, கூட்டணி குறித்து சலசலப்பு இருந்து வருகிறது.
திமுக கூட்டணி வலுவாக இருக்கும் நிலையில், கடந்த வாரம் தான் அமித் ஷாவை சந்தித்து அதிமுக தனது கூட்டணியை உறுதி செய்தது. அதாவது, வரும் 2026 சட்டப்பேரவை தேர்தலில் அதிமுக பாஜக கூட்டணி அமைத்து போட்டியிடுகிறது. அதே நேரத்தில் அதிமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் தேமுதிகவின் நிலை என்ன என்பது தெரியவில்லை.
இவர்கள் அதே கூட்டணியில் தொடர்வார்களா அல்லது வேறு கூட்டணி பக்கம் சாய்வார்களா என்பது தெரியவில்லை. கடந்த 2019 தேர்தலில் அதிமுக பாஜக கூட்டணியில் தேமுதி இருந்தது. 2021 சட்டப்பேரவை தேர்தலில் தேமுதிக, டிடிவி தினகரனின் அமமுக உடன் கூட்டணி அமைத்து போட்டியிட்டது. 2024 லோக்சபா தேர்தலில் அதிமுக கூட்டணியில் இணைந்து போட்டியிட்டது.
பிரதமர் மோடி நெகிழ்ச்சி
எனது இனிய நண்பர் கேப்டன் விஜயகாந்த் அற்புதமானவர்!
நானும், அவரும் பல ஆண்டுகளாக நெருக்கமாக கலந்துரையாடியதுடன், இணைந்து பணியாற்றியும் இருக்கிறோம்.
சமூக நன்மைக்காக அவர் செய்த பணிகளுக்காக பல தலைமுறைகளைச் சேர்ந்த மக்கள் அவரை நினைவு கூர்கிறார்கள்.@PremallathaDmdk https://t.co/fw2SDG7eB9
— Narendra Modi (@narendramodi) April 14, 2025
இந்த நிலையில், தற்போது கூட்டணி பேச்சுகள் அடிபட்டு வருகிறது. அதிமுக பாஜக கூட்டணி உறுதியான நிலையில், பாமக மற்றும் தேமுதிகவை தங்கள் பக்கம் இழுக்க பாஜக முயன்று வருகிறது. இப்படியான சூழலில், தேமுதிக தலைவர் பிரேமலதா விஜயகாந்த், பிரதமர் மோடி, விஜயகாந்த் இடையிலான உறவு குறித்து 2025 ஏப்ரல் 14ஆம் தேதி வீடியோ ஒன்றை பதிவிட்டிருக்கிறார்.
அதில், “பிரதமர் மோடி அவர்களுக்கும் விஜயகாந்துக்கும் இடையில் இருந்த உறவு, அரசியலை தாண்டிய ஒன்று. தமிழகத்தின் சிங்கம் என்று பிரதமர் மோடி அவர்கள் அழைப்பார். விஜயகாந்தின் பிறந்தநாளுக்கு வாழ்த்து தெரிவிப்பதையும், உடல்நிலை சரியில்லாத போதெல்லாம் அவரது உடல்நலம் குறித்து விசாரிப்பதையும் அவர் வழக்கமாகக் கொண்டிருந்தார்.
அவர்களின் பிணைப்பு உண்மையான பாசம் மற்றும் பரஸ்பர மரியாதையின் அடிப்படையில் கட்டமைக்கப்பட்டது. அது அரசியலுக்கு அப்பாற்பட்ட நட்பு. பின்னர் என்னுடன் பேசிய பிரதமர், ஏதேனும் தேவை ஏற்பட்டால் தனது உதவியை வழங்குவதாக எனக்கு உறுதியளித்தார். உங்களுக்கு உதவி தேவைப்பட்டால் நீங்கள் என்னிடம் கேட்கலாம். நான் உங்கள் சகோதரர் போன்றவன் என்று கூறுவார். அந்த வார்த்தைகளை என் வாழ்நாளில் என்னால் மறக்க முடியாது” என்று தெரிவித்திருந்தார். இவரது வீடியோவிற்கு பிரதமர் மோடி தனது எக்ஸ் தளத்தில் பிரேமலதாவை டேக் செய்து உருக்கமாக பதிவிட்டிருக்கிறார்.