Tamil Nadu CM MK Stalin: நீதிக்கட்சியின் நீட்சிதான் இந்த திராவிட மாடல் ஆட்சி.. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்!

P.T. Rajan's Biography: தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பி.டி.ராஜனின் வாழ்க்கை வரலாற்று நூலை வெளியிட்டார். இந்நிகழ்வில், நீதிக்கட்சியின் தொடர்ச்சியாக திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியை அவர் வலியுறுத்தினார். பேரறிஞர் அண்ணா மற்றும் கலைஞர் ஆகியோர் பி.டி.ராஜனைப் போற்றியதையும், தி.மு.க.வின் வெற்றி நீதிக்கட்சியின் வெற்றியாக அவர் கருதியதையும் ஸ்டாலின் சுட்டிக்காட்டினார். நீதிக்கட்சியின் ideology திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஆட்சியில் தொடர்கிறது என்பதை அவர் தெளிவுபடுத்தினார்.

Tamil Nadu CM MK Stalin: நீதிக்கட்சியின் நீட்சிதான் இந்த திராவிட மாடல் ஆட்சி.. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்!

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

Published: 

22 Apr 2025 21:59 PM

சென்னை, ஏப்ரல் 22: சென்னையில் நடைபெற்ற பி.டி.ராஜன் (P.T Rajan) வாழ்க்கை வரலாறு தொடர்பான நூல் வெளியிட்டு விழாவில் முதலமைசர் மு.க.ஸ்டாலின் புத்தகத்தை வெளியிட முன்னாள் நீதியரசர் சி.டி.செல்வம் பெற்றுக்கொண்டார். புத்தகத்தை வெளியிட்டபின் பேசிய முதலமைச்சர் ஸ்டாலின் (Tamil Nadu CM MK Stalin), ”1936-ல் ஒருங்கிணைந்த சென்னை மாகாணத்தின் முதல் அமைச்சராக இருந்த பி.டி.ராஜன் அவர்களின் வாழ்க்கை வரலாற்று நூலை, தமிழ்நாட்டின் முதலமைச்சர் என்ற தகுதியோடு, அந்த பெருமையோடு நான் வெளியிடுகிறேன்! நீதிக்கட்சிக்கு இறுதி என்பதே கிடையாது!” இன்னும் சொல்கிறேன்… “நீதிக்கட்சியின் நீட்சிதான் இந்த ஆட்சி” என்று தமிழ்நாடு சட்டமன்றத்திலேயே நான் சொல்லியிருக்கிறேன்” என்று பேசியுள்ளார். இந்தநிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசிய கருத்துகள் பின்வருமாறு..

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு:

  1. திராவிட இயக்கத்தின் வேராக விளங்கும் முன்னோடிகளில் ஒருவரான திராவிட அறநெறியாளர் நீதிக்கட்சியின் தமிழவேள் பி.டி.ராஜன் அவர்கள் குறித்த “வாழ்வே வரலாறு” என்ற நூலை நீதிக்கட்சியின் வழித்தடத்தில் உருவான திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவராக இருந்து நான் வெளியிடுவதில் என்னுடைய வாழ்நாளில் கிடைத்திருக்கக்கூடிய பெருமையாக நான் கருதுகிறேன்!
  2. 1937 தேர்தலில் நீதிக்கட்சி தோற்கடிக்கப்பட்டபோது, “என்றாவது ஒரு நாள் இதற்கு பழிக்கு பழி வாங்குவோம்” என்று பி.டி.ராஜன் சொன்னார். முப்பது ஆண்டுகள் கழித்து, திராவிட முன்னேற்றக் கழகம் வரலாற்று வெற்றியை பெற்றபோது, ‘பழிக்கு பழி வாங்கப்பட்டது’ என்று சொன்னார்.
  3. தி.மு.க.வின் எழுச்சியை வெற்றியை நீதிக்கட்சியின் வெற்றியாக எண்ணி, ‘நீதிக்கட்சி மறுபடியும் வென்றது’ என்று அவர் சொல்லி மகிழ்ந்தார். அந்த மகிழ்ச்சியும், தி.மு.க.வின் சாதனைகளும், செயல்பாடுகளும்தான், 1971 தேர்தலில், தி.மு.க.வுக்குத் தான் மக்கள் வாக்களிக்க வேண்டும்; பெரும்பான்மை பலத்தோடு கழக ஆட்சிதான் அமையவேண்டும்” என்று அறிக்கை வெளியிடுவதற்கு காரணமாக இருந்தது!
  4. அழுத்தமான திராவிட இயக்கத் தலைவராக இருந்தவர் தான் பி.டி.ராஜன் அவர்கள். எந்தளவுக்கு பேரறிஞர் அண்ணா அவர்களும், தலைவர் கலைஞர் அவர்களும், பி.டி.ராஜன் அவர்களைப் போற்றினார்கள் என்றால், 1967-இல் தி.மு.க. ஆட்சி அமைந்தபோது, கழக அமைச்சர்களுக்கு எல்லாம் நீதிக்கட்சியின் சார்பில் ராயப்பேட்டை பகுதியில் இருக்கக்கூடிய உட்லண்ட்ஸ் உணவகத்தில் பி.டி.ராஜன் அவர்கள் ஒரு விருந்து வைத்தார். அப்போது உரையாற்றிய பேரறிஞர் அண்ணா அவர்கள் சொன்னார், “தந்தை பெரியாரின் சமூக சீர்திருத்தக் கருத்துகளை நிறைவேற்றுவேன்” என்று குறிப்பிட்டுவிட்டு, “தமிழவேள் பி.டி.ராஜன் போன்ற பெருந்தலைவர்களின் ஆலோசனைகளின் அடிப்படையில், எனது ஆட்சி நடைபெறும்’ என்று உறுதியளித்தார்.
  5. பி.டி.ராஜன் அவர்களது அரிய ஆலோசனைகளை நிறைவேற்றி வைக்கும் செயல் வடிவமாகத்தான் திராவிட முன்னேற்றக் கழக ஆட்சி திகழ்கிறது” என்று தலைவர் கலைஞர் சொன்னார். அந்த வழித்தடத்தில்தான் நாமும் இன்றைக்கு பயணித்துக் கொண்டு இருக்கிறோம்!
  6. 1973-ஆம் ஆண்டு மதுரையில் நடந்த பி.டி.ராஜன் அவர்களுடைய 82-ஆவது பிறந்தநாள் விழாவில், அன்றைக்கு முதலமைச்சராக இருந்த தலைவர் கலைஞர் அவர்கள் அமைச்சர் பெருமக்களாக இருந்த நாவலர், பேராசிரியர் என்.வி.நடராசன் என்று பலரும் கலந்துகொண்டார்கள். அந்த உணர்வு சிறிதும் குறையாமல், இன்றைக்கு 133-ஆவது ஆண்டு விழாவில், நம்முடைய திராவிட மாடல் அமைச்சரவை கலந்து கொண்டு இருக்கிறது.
  7. விழாவின் அழைப்பிதழில், நீதிக்கட்சியின் இறுதித் தலைவர் என்று போட்டிருக்கிறீர்கள்… நன்றாக ஞாபகம் வைத்துக்கொள்ளுங்கள்… “நீதிக்கட்சிக்கு இறுதி என்பதே கிடையாது!” இன்னும் சொல்கிறேன்… “நீதிக்கட்சியின் நீட்சிதான் இந்த ஆட்சி” என்று தமிழ்நாடு சட்டமன்றத்திலேயே நான் சொல்லியிருக்கிறேன்.
  8. 1967-இல் நாம் ஆட்சிக்கு வந்தபோது, ‘திராவிட முன்னேற்றக் கழகம் முதன்முதலாக ஆட்சிக்கு வந்தது’ என்று சில ஊடகங்களில் எழுதினார்கள்… அப்போது பேரறிஞர் அண்ணாதான் சொன்னார்… “அரசியல் தேர்ச்சியுடன் நாடாண்ட நீதிக்கட்சியின் பாரம்பரியத்தில் வளர்ந்த கட்சிதான் திராவிட முன்னேற்றக் கழகம்” என்று சொன்னார்.
  9. நீதிக்கட்சியின் செயலாளர்களில் ஒருவராக இருந்த முத்தமிழ்க் காவலர் கி.ஆ.பெ.விசுவநாதம் அவர்கள் என்ன சொன்னார் என்றால், “நீதிக்கட்சி, இன்றைய திராவிட முன்னேற்றக் கழகத்துக்கு, பாட்டன் முறை. பெரியார் அவர்கள் தொடங்கிய சுயமரியாதை இயக்கம், தந்தை முறையாகும்.” என்று குறிப்பிட்டார்.
  10. 1966-ஆம் ஆண்டு நீதிக்கட்சியின் பவளவிழா பொதுக்கூட்டத்தில், “இன்றைய தி.மு.க.வினர் நம்முடைய வாரிசுகள்தான்’ என்று பி.டி.ராஜன் அவர்களே குறிப்பிட்டார். எனவே, நான் அழுத்தந்திருத்தமாக சொல்கிறேன்… திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஆட்சி என்பது நீதிக்கட்சியின் தொடர்ச்சியான ஆட்சிதான்!