அதிமுக – பாஜக கூட்டணி.. அரசியல் கட்சி தலைவர்களின் ரியாக்‌ஷன்..!

AIADMK-BJP Tie-Up: அதிமுக-பாஜக கூட்டணியை அமித் ஷா அறிவித்ததைத் தொடர்ந்து, திமுக எம்பி கனிமொழி கடுமையாக விமர்சித்தார். இது தமிழ்நாட்டு மக்களுக்கு இபிஎஸ் செய்த துரோகம் என தெரிவித்தார். திருமாவளவன், இந்த கூட்டணி நெருக்கடியில் உருவானதென்று கூறினார். இதேபோல் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் விமர்சித்து வருகின்றனர்.

அதிமுக - பாஜக கூட்டணி.. அரசியல் கட்சி தலைவர்களின் ரியாக்‌ஷன்..!

அதிமுக - பாஜக கூட்டணி

Published: 

11 Apr 2025 21:16 PM

சென்னை ஏப்ரல் 11: சென்னை ஐடிசி கிராண்டு சோழா (Chennai ITC Grand Chola) ஹோட்டலில் 2025 ஏப்ரல் 11 ஆம் தேதி இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தமிழ்நாட்டில் அதிமுக தலைமையில் என்டிஏ கூட்டணி அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக அறிவித்தார். இந்த நிகழ்வில் அமித் ஷாவின் அருகில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி (AIADMK General Secretary Edappadi Palaniswami), பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, பாஜக மாநில தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள நயினார் நாகேந்திரன் உள்ளிட்டோர் மேடையில் முன்னிறுத்தப்பட்டிருந்தனர். இந்த கூட்டணியின் மூலம், 2026 ஆம் ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ளும் திட்டம் உருவாக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் அதிமுக-பாஜக கூட்டணியை கண்டித்து, திராவிட முன்னேற்ற கழக எம்பி கனிமொழி கடுமையாக விமர்சித்துள்ளார். எடப்பாடி பழனிசாமி செய்தது அதிமுகவுக்கும் தமிழ்நாடு மக்களுக்கும் துரோகமாகும் என அவர் குற்றம்சாட்டினார்.

வக்பு மசோதா ஆதரவாளர்களுடன் கூட்டணி வைத்தது சிறுபான்மையினருக்கு எதிரானது எனக் கூறினார். அண்ணா, ஜெயலலிதாவை இழிவுபடுத்தியவருடன் இபிஎஸ் விருந்து கொடுத்தது அவமானகரமானது என விமர்சித்தார். விடுதலை கட்சி தலைவர் திருமாவளவன் (Viduthai Party Leader Thirumavalavan), இந்த கூட்டணி அழுத்தம் மற்றும் நெருக்கடியில் இருந்து உருவானது என தெரிவித்தார்.

“இபிஎஸ் துரோகம் இழைத்துள்ளார்” – கனிமொழி விமர்சனம்

இந்த அறிவிப்புக்கு பின்னர், திமுக எம்பி கனிமொழி அதிமுக-பாஜக கூட்டணியை கடுமையாக விமர்சித்துள்ளார். இப்பாதையை தேர்வு செய்தது அதிமுகவுக்கும், தமிழ்நாடு மக்களுக்கும் இபிஎஸ் செய்துள்ள மிகப்பெரிய துரோகமாக இருக்கிறது என அவர் குற்றம்சாட்டினார். வக்பு மசோதாவை எதிர்த்து பேசிவிட்டு அதை நிறைவேற்றிய பாஜகவுடன் இபிஎஸ் கூட்டணி வைத்துள்ளார் என்பதைக் குறிப்பிட்டு, இது சிறுபான்மையினருக்கான எதிர்மறையான செயலாகும் என்றும் விமர்சித்தார்.

அண்ணா, ஜெயலலிதா போன்ற தலைவர்களை இழிவுபடுத்தியவருடன் இபிஎஸ் விருந்துக்கூர்ந்தது அவமானகரமானது என அவர் தெரிவித்துள்ளார். மேலும், அமித் ஷா கூட்டணி அறிவித்தபோது, அதிமுக தலைவர் எடப்பாடி பழனிசாமி பேச அனுமதிக்கப்படாதது மிகவும் ஆச்சரியமாக இருக்கின்றது எனவும் அவர் விமர்சித்தார்.

“அழுத்தம், நெருக்கடியில் இருந்து உருவான கூட்டணி” – திருமாவளவன்

விசிக தலைவர் திருமாவளவன், அதிமுக-பாஜக கூட்டணி குறித்து கருத்து தெரிவிக்கையில், இது ஏற்கனவே யூகிக்கப்பட்டதாயிருந்தாலும், இப்போது அது நிஜமாகி விட்டது என கூறினார். விஜய் உள்ளிட்ட புதிய அரசியல் அணிகளை அதிமுக சேர்க்கக் கூடாது என்பதில் பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் கவனமாக இருந்ததாகவும், இன்றைய கூட்டணி ஒரு அழுத்தம் மற்றும் நெருக்கடியின் விளைவாக ஏற்பட்டது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.