கொடைக்கானலில் இனி போக்குவரத்து நெரிசல் குறையுமா? வந்தது புதிய வசதி..

Traffic congestion in Kodaikanal: கொடைக்கானலில் போக்குவரத்து நெரிசலை குறைக்க புதிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. 60 இடங்களில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன, மேலும் நான்கு புதிய தற்காலிக வாகன நிறுத்தங்கள் அமைக்கப்பட்டுள்ளன. சுற்றுலா வாகனங்களுக்கு கட்டணம் வசூலித்து, டிஜிட்டல் முறையில் வசூலிக்கும் நடவடிக்கைகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

கொடைக்கானலில் இனி போக்குவரத்து நெரிசல் குறையுமா? வந்தது புதிய வசதி..

கொடைக்கானலில் போக்குவரத்து நெரிசல்

Published: 

19 Apr 2025 07:23 AM

கொடைக்கானல் ஏப்ரல் 19: கொடைக்கானலில் (Kodaikanal) கோடை சீசன் முன்னிட்டு, 60 இடங்களில் ரூ.50 லட்சம் செலவில் நவீன சிசிடிவி கேமராக்கள் (Modern CCTV cameras) பொருத்தப்பட்டுள்ளன. இதன் மூலம், ஏரியில் தண்ணீர் எடுப்பவர்கள், குப்பைகள் வீசுவோரை கண்காணித்து நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது. மேலும், வாகன நிறுத்தங்கள் சரியான இடங்களில் அமையவும், போக்குவரத்து நெரிசலை குறைக்கவும் நகராட்சி புதிய வாகன நிறுத்தங்களை அமைத்துள்ளது. 4 இடங்களில் இரண்டு மணிநேரத்திற்கு வாகனங்களுக்கு கட்டணம் நிர்ணயிக்கப்பட்டு, டிஜிட்டல் முறையில் வசூலிக்கப்படும். இந்த கட்டணங்கள் பேருந்து, வேன், காருக்கு வரையறுக்கப்பட்டுள்ளன. சுற்றுலா பயணிகளுக்கு தேவையான வசதிகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

போக்குவரத்து நெரிசலைக் குறைக்க நகராட்சி நடவடிக்கை

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் கோடை சீசன் பரபரப்பாக நடந்து வரும் நிலையில், சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பையும் போக்குவரத்து நெரிசலைக் குறைப்பதற்கும் நகராட்சி பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

60 இடங்களில் ரூ.50 லட்சம் செலவில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தம்

குறிப்பாக, நட்சத்திர ஏரி பகுதிக்கு வரும் மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தவும், சாலைகளில் ஏற்படும் போக்குவரத்து நெரிசல்களை சரிசெய்யவும், ஏரியில் குப்பைகள் மற்றும் மதுபாட்டில்கள் வீசுவதை தடுக்கவும், சட்டவிரோத நடவடிக்கைகளை கண்காணிக்கவும் 60 இடங்களில் ரூ.50 லட்சம் செலவில் நவீன கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. இந்த பணிகள் இன்னும் சில நாட்களில் முழுமையாக முடிக்கப்படும் என நகராட்சி ஆணையாளர் சத்தியநாதன் தெரிவித்துள்ளார்.

நகராட்சி அலுவலகத்தில் நேரடியாக பார்வையிடும் வசதி

அத்துடன், ஏரியைச் சுற்றி அமைந்துள்ள 5 கிலோமீட்டர் நடைபாதைகளையும் நகராட்சி படகு இல்லங்களையும் தொடர்ந்து கண்காணிக்க இந்த சிசிடிவி அமைப்புகள் பயன்படும். இந்த வீடியோக்கள் நகராட்சி அலுவலகத்தில் நேரடியாக பார்வையிடும் வசதியுடன் ஒளித்திரையில் காட்டப்படும். காவல் துறையும் இந்த பதிவு செய்யப்பட்ட காட்சிகளைப் பயன்படுத்தி சட்டப்படி நடவடிக்கைகள் எடுக்க முடியும்.

நான்கு புதிய தற்காலிக வாகன நிறுத்தங்கள் உருவாக்கம்

மேலும், ஆண்டுதோறும் கோடை காலங்களில் அதிகரிக்கும் சுற்றுலா வாகனங்களால் ஏற்படும் போக்குவரத்து நெரிசலைத் தவிர்க்கவும், சுற்றுலா வாகனங்களுக்கு முறையான இடங்களில் நிறுத்த வசதிகளை ஏற்படுத்தவும் நகராட்சி நான்கு புதிய தற்காலிக வாகன நிறுத்தங்களை உருவாக்கியுள்ளது. அவை பேருந்து நிலையம் அருகில், அப்சர்வேட்டரி பகுதி – ரோஜா பூங்கா அருகில், வட்டக்கானல் பகுதி மற்றும் போக்குவரத்து கழகம் சொந்தமான இடங்களில் அமைக்கப்பட்டுள்ளன.

சுற்றுலா வாகனங்களுக்கு கட்டணம் வசூலிப்பு

இந்நிறுத்தங்களில் சுற்றுலா வாகனங்களுக்கு கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இரண்டு மணிநேரத்திற்கு பேருந்துக்கு ரூ.200, வேனுக்கு ரூ.100, காருக்கு ரூ.70 மற்றும் டூவீலருக்கு ரூ.30 என கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இரண்டு மணி நேரத்தைத் தாண்டி வாகனங்கள் நிறுத்தப்பட்டால் கூடுதல் கட்டணமும் வசூலிக்கப்படும்.

இவ்வசதிகளை பயன்படுத்த சுற்றுலா பயணிகள் ஊக்கப்படுத்தப்படுவார்கள் என்றும், டிஜிட்டல் முறையில் கட்டண வசூலிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும், அனைத்து நிறுத்த இடங்களிலும் அடிப்படை வசதிகள்செய்யப்பட்டுள்ளதாகவும் நகராட்சி ஆணையாளர் தெரிவித்துள்ளார்.