நெல்லையில் அதிர்ச்சி.. நாங்குநேரி மாணவர் சின்னதுரை மீது மீண்டும் தாக்குதல்.. நடந்தது என்ன?
திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரில் 2 ஆண்டுகளுக்கு முன்பு சாதிய தாக்குதலுக்கு ஆளான மாணவர் சின்னதுரை மீது மீண்டும் தாக்குதல் நடத்தப்பட்டு இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இருப்பினும், இது சாதி ரீதியான தாக்குதல் இல்லை என்று காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சின்னதுரைக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

திருநெல்வேலி, ஏப்ரல் 17: திருநெல்வேலியில் சாதி தொடர்பான பிரச்னையில் தாக்குதலுக்கு ஆளான மாணவர் சின்னதுரை (Nanguneri Student) மீது மீண்டும் 4 பேர் கொண்ட கும்பல் தாக்குதல் நடத்தி உள்ளது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. லேசான காயங்களுடன் திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். திருநெல்வேலி மாவட்டம் நான்குநேரி பகுதியைச் சேர்ந்தவர் சின்னதுரை (18). இவரை இன்ஸ்டாகிராமம் மூலம் ஒரு கும்பல் தொடர்பு கொண்டு வரவழைத்துள்ளது.
நாங்குநேரி மாணவர் சின்னதுரை மீது மீண்டும் தாக்குதல்
அதாவது, சில நாட்களாக அந்த கும்பல் இன்ஸ்டாகிராமி நட்பு கொண்டு பழகி வந்தனர். இதனால், அந்த கும்பலுடன் இன்ஸ்டாகிராம் மூலம் நட்புடன் பேசி வந்த சின்னதரை, அவர்களது அழைப்பின் பேரில் ரெட்டியார்பேட்டி மலைப்பகுதிக்கு சென்றிருக்கிறார். அப்போது, அங்கு நான்கு பேர் கொண்ட கும்பல், அவரது செல்போனை பறித்துள்ளனர்.
மேலும், சின்னதுரை கடுமையாக தாக்கிவிட்டு அங்கிருந்து சென்றுள்ளனர். இதில், உடல் முழுவதும் சின்னதுரைக்கு காயம் ஏற்பட்டு இருக்கிறது. இதனை அடுத்து, அவ்வழியாக சென்றவர்கள் மூலம் இதுகுறித்து தாய்க்கு தகவல் தெரிவித்தார். அதைத் தொடர்ந்து, அவர் நெல்லை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவரது உடல்நிலை சீராக இருப்பதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர். அரசு மருத்துவமனைக்கு வெளியே பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்த தாக்குதல் சம்பவம் குறித்து திருநெல்வேலி நகராட்சி துணை ஆணையர் சாந்தாராம் மற்றும் உதவி ஆணையர் சுரேஷ் ஆகியோர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், 4 பேர் கொண்ட கும்பலை தனிப்படை அமைத்து தேடி வருகின்றனர். இதுகுறித்து திருநெல்வேலி நகர காவல் ஆணையர் சந்தோஷ் கூறுகையில், ” தாக்குதல் நடத்தியவர்கள் சிறுவனை இன்ஸ்டாகிராம் செயலி மூலம் திருமண பத்திரிகை அழைப்பிதழ் கொடுக்க அழைத்துள்ளனர்.
நடந்தது என்ன?
அப்போது, அந்த கும்பல் சின்னதுரையின் செல்போனை பறிக்க முயன்று, அவரை தாக்கி உள்ளனர்” என்று கூறினார். முன்னதாக, 2023ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் பட்டியிலன சமூகத்தை சேர்ந்த சின்னதுரை, நன்றாக படித்து வந்தார். பள்ளி ஆசிரியர்கள் சின்னதுரை போன்று படிக்க வேண்டும் என்று சக மாணவர்களுக்கு அறிவுறுத்தி இருக்கிறார்.
இதனால், சின்னதுரை மீது சக மாணவர்கள் அதிருப்தியில் இருந்துள்ளதாக தெரிகிறது. இதனால், அந்த மாணவர்கள் சின்னதுரையின் வீடு புகுந்து அரிவாளால் அவரை சரமாரியாக வெட்டியுள்ளனர். அலறல் சத்தும் அக்கம் பக்கத்தில் இருப்பவர்கள் அவரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். மருத்துவர்களின் சிகிச்சையால், சின்னதுரை உயிர் காப்பாற்றப்பட்டது.
சாதி ரீதியான தாக்குதல் தமிழகத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. கொடூரமான தாக்குதலிலிருந்து மீண்ட பிறகு, சின்னதுரை தனது 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் 78 சதவீத மதிப்பெண் பெற்று, தனியார் கல்லூரியில் சேர்ந்தார். இவரது உயர்கல்வி செலவை அரசே ஏற்றுள்ளது.
பள்ளி மாணவர்களிடையே சாதி மற்றும் சமூக அடிப்படையிலான வன்முறையைத் தவிர்ப்பதற்கான வழிகாட்டுதல்களை உருவாக்க ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி கே. சந்துரு தலைமையில் ஒரு நபர் குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழு 2024 ஆண்டு அறிக்கை சமர்பித்தது.
அதில், கல்வி நிறுவனங்கள் மட்டுமில்லாமல், சமூகத்திலேயே சாதிய வேறுபாடுகள் இருப்பதாக கூறினர். பள்ளிகளில் உள்ள பிரச்னையை நிவர்த்தி செய்வது போதாது என்றும் நிரந்தரவு தீர்வு இருந்தால் இந்த பிரச்னையை சரி செய்ய முடியும் எனவும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.