‘சீமான் அண்ணனுக்கும் எனக்கும் வித்தியாசமில்லை’ – அண்ணாமலை புகழாரம்!
Annamalai Praises Seeman: சென்னையில் உள்ள ஒரு தனியார் கல்லூரி நிகழ்ச்சியில், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மற்றும் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை ஆகியோர் கலந்துகொண்டனர். இந்த நிகழ்வில் பேசிய பாரதிய ஜனதா கட்சியின் தமிழ்நாடு தலைவர் அண்ணாமலை, சீமான் அண்ணனை ஒரு கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் என சொல்வதை விட, போர்களத்தில் நிற்க கூடிய தளபதியாகத் தான் பார்க்கிறேன் என்றார்.

சீமான் - அண்ணாமலை
தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும் நேரத்தில் கடந்த சில நாட்களாக நடக்கும் அரசியல் நிகழ்வுகள் சமூகத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தி வருகின்றன. கடந்த ஏப்ரல் 5, 2025 அன்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் (Seeman), மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை (Nirmala Sitharaman) சந்தித்து பேசியதாக தகவல்கள் வெளியான நிலையில் இதனை சீமான் மறுத்தார். அப்படி உண்மையில் சந்தித்திருந்தால் தைரியமாக வெளியில் சொல்வேன் என்று விளக்கமளித்தார். இந்த நிலையில் சென்னையில் உள்ள ஒரு தனியார் கல்லூரி நிகழ்ச்சியில், நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மற்றும் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை(Annamalai) ஆகியோர் கலந்துகொண்டனர். இந்த நிகழ்வு அரசியல் அரங்கில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
இந்த நிகழ்வில் பேசிய பாரதிய ஜனதா கட்சியின் தமிழ்நாடு தலைவர் அண்ணாமலை, சீமான் அண்ணனை ஒரு கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் என சொல்வதை விட, போர்களத்தில் நிற்க கூடிய தளபதியாகத் தான் பார்க்கிறேன். எனக்கும் சீமான் அண்ணனுக்கும் பெரிய வித்தியாசமில்லை. நான் தேசியத்தில் தமிழை பார்க்கிறேன். அண்ணன் தமிழில் தேசியத்தை பார்க்கிறார் என்று சீமானை புகழ்ந்து பேசினார்.
அண்ணாமலைக்கு சீமான் புகழாரம்
பின்னர் பேசிய நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், உலகின் எம்மொழியும் கற்போம் நாங்கள் வாழ, எம்மொழி தமிழ் கற்போம் எங்கள் இனம் வாழ. உலகம் முழுவதும் செல்லும் பிரதமர் நரேந்திர மோடி ஒவ்வொரு முறையும், உலகின் முதல் மொழியான தமிழ் மொழி எங்கள் இந்தியாவில் இருப்பது பெருமை என கூறுகிறார். தமிழின் பெருமையை உயர்த்தி பிடிக்கிறார். தமிழ்நாட்டில் பாஜக என்ற ஒரு கட்சி இருக்கிறது. அது வளர்கிறது என்று தனது செயல்பாடுகளால் நிகழ்த்திகக் காட்டியவர் அண்ணாமலை. என புகழ்ந்து பேசினார்.
பாஜகவுடன் கூட்டணி?
இதனையடுத்து சமூக வலைதளங்களில், வரும் சட்டமன்ற தேர்தலில் இரு கட்சிகளும் கூட்டணி அமைக்கவிருப்பதற்கான முன்னோட்டம் என பல தரப்பினரும் தங்களது யூகங்களை பதிவிட்டு வருகின்றனர். சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு தமிழ்நாட்டில் வலுவான கூட்டணியை ஏற்படுத்த பாஜக முயற்சித்து வருவதாக கூறப்படுகிறது. அதன் ஒரு பகுதியாக அதிமுகவுடன் கூட்டணி அமைப்பதற்காக அந்த கட்சியின் தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடந்துவருவதாக பல்வேறு தகவல்கள் தெரிவிக்கின்றன. சமீபத்தில் டெல்லி சென்ற அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி, உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்து பேசியது பெரும் விவாதத்தை ஏற்படுத்தியது.
அதன் பிறகு விமான நிலையத்தில் எடப்பாடி பழனிசாமி பத்திரியாளர்களை சந்தித்தார். அப்போது அமித்ஷாவுடன் கூட்டணி குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதா? என பத்திரிகையாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அவர், தேர்தலுக்கு இன்னும் ஓராண்டுக்கு மேல் இருக்கிறது. தேர்தல் நெருங்கும்போது தான் கூட்டணி குறித்து முடிவெடுக்க முடியும் என்றார். மேலும் கொள்கை வேறு கூட்டணி வேறு. எங்கள் கூட்டணி என்பது சூழ்நிலைக்கு ஏற்ப மாறும். ஆனால் எங்கள் கொள்கை நிலையனது என்றும் பேசினார்.