”கூட்டணி பத்தி நீங்க பேசாதீங்க” பாஜக நிர்வாகிகளுக்கு ஆர்டர் போட்ட நயினார்!
அதிமுக பாஜக கூட்டணி குறித்து தொண்டர்கள் எந்த கருத்தும் சொல்லக் கூடாது என்றும் கூட்டணி விவகாரங்களை எல்லாம் தலைமை பார்த்துக் கொள்ளும் என்றும் தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார். செங்கல்பட்டு மாவட்டத்தில் நடந்த பாஜக நிகழ்ச்சியில் நிர்வாகிகளிடம் நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார்.

நயினார் நாகேந்திரன்
சென்னை, ஏப்ரல் 18: அண்ணா திராவிட முன்னேற்ற கழக (அதிமுக) பாரதிய ஜனதா கட்சி கூட்டணி (பாஜக) குறித்து தொண்டர்கள் எந்த கருத்தும் சொல்லக் கூடாது என்றும் கூட்டணி (AIADMK BJP Alliance) விவகாரங்களை எல்லாம் தலைமை பார்த்துக் கொள்ளும் என்றும் தமிழக பாரதி ஜனதா கட்சி தலைவர் நயினார் நாகேந்திரன் (Nainar Nagendran) கூறியுள்ளார். செங்கல்பட்டு மாவட்டத்தில் நடந்த பாரதிய ஜனதா கட்சி நிகழ்ச்சியில் நிர்வாகிகளிடம் நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார். தமிழகத்தில் 2026ஆம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது.
”கூட்டணி பத்தி நீங்க பேசாதீங்க”
இதனால், அனைத்து தீவிரமாக வேலை பார்த்து வருகின்றனர். அதோடு, கூட்டணி பேச்சுகள் நடந்து வருகிறது. திமுக கூட்டணி வலுவாக இருக்கும் நிலையில், அதிமுக பலமான கூட்டணி அமைக்க தீவிரம் காட்டியது. இந்த நிலையில், சமீபத்தில் சென்னை வந்த மத்திய உள்துறை அமித் ஷா, பாஜக அதிமுக கூட்டணி குறித்து அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.
அதாவது, தமிழகத்தில் 2026 தேர்தலில் பாஜக அதிமுக கூட்டணி அமைத்து போட்டியிடும் என்றும் 2026 சட்டப்பேரவை தேர்தலில் வெற்றி பெற்றால் கூட்டணி ஆட்சி நடைபெறும் என்றும் அமித் ஷா கூறினார்.
இதற்கிடையில், கூட்டணி குறித்து பேசிய அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, பாஜகவுடன் கூட்டணி தான்.. கூட்டணி ஆட்சி கிடையாது. டெல்லிக்கு பிரதமர் மோடி. தமிழகத்திற்கு எடப்பாடி பழனிசாமி என்று அமித் ஷாவை சொன்னார்” என்று கூறினார்.
அதேபோல, அதிமுக மூத்த தலைவர்களின் ஒருவரான தம்பிதுரையும், 2026 சட்டப்பேரவை தேர்தலில் வெற்றி பெற்றால் அதிமுக தனித்துதான் ஆட்சி அமைக்கும் என்று திட்டவட்டமாக கூறினார். பெரும்பான்மை கிடைக்காவிட்டால், தனித்து தான் ஆட்சி இருக்கும் என கூறினார்.
பாஜக நிர்வாகிகளுக்கு ஆர்டர் போட்ட நயினார்
இதுபோன்ற அதிமுக மூத்த தலைவர்கள் பலரும் பாஜகவுடன் கூட்டணி மட்டும் தான் என்றும் கூட்டணி ஆட்சி கிடையாது என்றும் மாறி மாறி கூறி வருகின்றனர். இது அதிமுக பாஜக கூட்டணி இடையே குழப்பத்தை ஏற்படுத்தியது. இதற்கு பாஜக நிர்வாகளும் மாறி மாறி கருத்து கூறி வருகின்றனர். இதனால் இருகட்சியிடையே சலசலப்பை ஏற்படுத்தி வருகிறது.
இந்த நிலையில், பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கட்சி நிர்வாகிகளுக்கு முக்கிய உத்தரவை பிறப்பித்துள்ளார். செங்கல்பட்டு மாவட்டத்தில் பாஜக நிகழ்ச்சி ஒன்று நடந்தது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நயினார் நாகேந்திரன் கட்சி நிர்வாகிகள் உத்தரவிட்டுள்ளது.
அதாவது, “உங்களிடம் (பாஜக நிர்வாகிகள்) ஒன்று கேட்டுக் கொள்கிறேன். அதிமுக பாஜக கூட்டணி தொண்டர்கள் எந்த கருத்து சொல்லக் கூடாது. கூட்டணி விவகாரங்களை எல்லாம் தலைமை பார்த்துக் கொள்ளும். கூட்டணி குறித்து நாம் பேச வேண்டிய அவசியம் இல்லை. கூட்டணி குறித்து அமித் ஷா, எடப்பாடி பழனிசாமி பேசிக் கொள்வார்கள். இதில் நீங்கள் எந்த கருத்தும் சொல்ல வேண்டாம்” என்று கூறியுள்ளார்.