Seeman: பிரதமர் மோடி தமிழுக்கு கொடுக்கும் முக்கியத்துவம்.. மாணவர்கள் முன் புகழ்ந்து பேசிய சீமான்
Seeman Praises PM Modi: பெற்றெடுத்த தாயை பட்டினி போட்டு, நீ எத்தனை அன்னதானம் போட்டாலும் பலன் இல்லை என்று சொல்வார்கள். அதுபோல், தாய்மொழி தெரியாமல் நீ எவ்வளவு மொழிகளை கற்றாலும் அறிவில்லாதவன்தான். தாய்மொழியை தெளிவுற கற்றால், பிற மொழிகளை எளிதாக கற்கலாம் என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசியுள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடி - நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான்
சென்னை, ஏப்ரல் 7: பிரதமர் நரேந்திர மோடி (PM Modi) தனது வெளிநாட்டு பயணங்களில் தமிழின் பெருமையை தொடர்ந்து உயர்த்தி பிடிக்கிறார் என்றும், பல நாடுகளை சேர்ந்த மக்கள் தமிழ் மொழியை கற்க பேரார்வம் என பிரதமர் மோடி கூறுவதாகவும் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் (Naam Tamilar Katchi Leader Seeman) பேசியுள்ளார். சென்னை அடுத்த பொத்தேரி பகுதியில் அமைந்துள்ள எஸ்.ஆர்.எம் பல்கலைக்கழகத்தில் தமிழ் பேராயம் சார்பில் ‘சொல் தமிழா சொல்’ நிகழ்ச்சியின் இறுதிச் சுற்று மற்றும் பரிசளிப்பு விழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் மற்றும் தமிழ்நாடு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் எதிரெதிர் கருத்துகளை உடைய அண்ணாமலையும், சீமானும் ஒரே மேடையில் இருந்தது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும், இது 2026 சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்த அப்டேட்டாக இருக்கலாம் என்றும் கூறப்பட்டது.
பிரதமர் மோடியை புகழ்ந்த சீமான்:
இதற்கு அச்சாரம் போடும் வகையில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் மேடையிலேயே பிரதமர் மோடி குறித்து பெருமையாக பேசியுள்ளார். அதில், “பாரதியை விடவா தமிழில் ஒரு புலவர் இருக்கிறார். பல மொழிகளை கற்றாலும் தாம் அறிந்த மொழிகளில் தமிழ் மொழி போல் இனிது வேறு எதுவும் இல்லை என்று பாரதியார் தெரிவித்தார். ஆங்கிலம் கற்றால்தான் அறிவு என்று பலரும் நினைக்கிறார்கள். ஆனால், இயேசு கிறிஸ்து பிறந்த 500 ஆண்டுகளுக்கு பிறகே ஆங்கில மொழி உருவானது. அதேநேரத்தில், இயேசு கிறிஸ்து பிறப்பதற்கு முன்பே 500 ஆண்டுகளுக்கு முன்பு தமிழில் தொல்காப்பியம் என்ற நூல் உருவாகவில்லை, இருந்தது.
ஒன்றாக அண்ணாமலை – சீமான்:
Anna & Seeman on one event Whats NEXT.? pic.twitter.com/PpYiD2K0bM
— Trichy Balu (@balasubu_sekar) April 7, 2025
ஆங்கிலத்தில் என்ன சிறப்பு உள்ளது…? தமிழ் மொழியில் இருந்துதான் 500க்கும் மேற்பட்ட வார்த்தைகள் ஆங்கிலத்திற்கு கொடுக்கப்பட்டது. உலகத்தில் ஒவ்வொருவரும் அவர்களது தாய்மொழியில் பேசுகிறார்கள், தமிழர்கள் நாங்கள் அந்த மொழிகளின் தாய் மொழியான தமிழ் மொழியில் பேசிக்கொண்டிருக்கிறோம். உலகின் முதன் மொழியான தமிழ் மொழி எங்கள் நாட்டில் இருக்கிறது என பிரதமர் மோடி உலகமெங்கும் பயணம் செய்து குறிப்பிட்டு வருகிறார். இந்திய மொழிகளின் தொன்மையை தமிழில் இருந்து அறியலாம். பல நாடுகளை சேர்ந்த மக்கள் தமிழ் மொழியை கற்க பேரார்வம் கொண்டு வருகிறார்கள் என பிரதமர் மோடி கூறுகிறார். பெற்றெடுத்த தாயை பட்டினி போட்டு, நீ எத்தனை அன்னதானம் போட்டாலும் பலன் இல்லை என்று சொல்வார்கள். அதுபோல், தாய்மொழி தெரியாமல் நீ எவ்வளவு மொழிகளை கற்றாலும் அறிவில்லாதவன்தான். தாய்மொழியை தெளிவுற கற்றால், பிற மொழிகளை எளிதாக கற்கலாம்” என சீமான் பேசினார்.