மிரட்டல் அரசியல் பாஜகவின் டிஎன்ஏவில் தான் உள்ளது.. ஆளுநர் ரவிக்கு அமைச்சர் கோவி.செழியன் பதில்!
Minister Govi Sezhiyan replied to Governor RN Ravi | ஆளுநர் ஆர்.என்.ரவி நடத்தும் பல்கலைக்கழக துணைவேந்தர்கள் மாநாட்டில், துணைவேந்தர்கள் பங்கேற்காத நிலையில், திமுக அரசு மீது ஆளுநர் சரமாரி குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். அந்த குற்றச்சாட்டுகளுக்கு அமைச்சர் கோவி.செழியன் பதில் அளித்துள்ளார்.

ஆளுநர் ஆர்.என்.ரவி மற்றும் அமைச்சர் கோவி செழியன்
சென்னை, ஏப்ரல் 25 : மிரட்டல் அரசியல் எல்லாம் பாரதிய ஜனதா கட்சியின் (BJP – Bharatiya Janata Party) டிஎன்ஏவில் தான் ஊறிக் கிடக்கிறது. துணிந்து மாநில உரிமைகளுக்காக எதிர்த்து நிற்பதுதான் எங்கள் டி.என்.ஏவில் உள்ளது என்று ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு அமைச்சர் கோவி.செழியன் பதில் அளித்துள்ளார். பல்கலைக்கழக துணைவேந்தர்களை திராவிட முன்னேற்ற கழக (DMK – Dravida Munnetra Kazhagam) அரசு காவல்துறையினரை வைத்து மிரட்டியதாக தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி பரபரப்பு குற்றச்சாட்டுக்களை முன்வைத்த நிலையில், அதற்கு பதில் அளிக்கும் விதமாக அமைச்சர் வெளியிட்ட அறிக்கையில் இவ்வாறு கூறியுள்ளார்.
திமுக அரசு மீது பரபரப்பு குற்றச்சாட்டுக்களை முன்வைத்த ஆளுநர் ஆர்.என்.ரவி
தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி நடத்தும் துணைவேந்தர்கள் மாநாட்டில் அரசு பல்கலைக்கழகங்களை சேர்ந்த துணைவேந்தர்கள் பங்கேற்காமல் புறக்கணித்துள்ளனர். இது குறித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டால் ஆளுநர் ரவி, முதலமைச்சர் ஸ்டாலின் காவல்துறையை பயன்படுத்தி இன்று (ஏப்ரல் 25, 2025) முன்கூட்டியே திட்டமிடப்பட்ட மாநாட்டில் மாநில பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர்கள் பங்கேற்காமல் தடுத்தது அவசரகால நாட்களை நினைவு ஊட்டுகிறது என்று கூறியிருந்தார். மேலும் உயர்கல்வி அமைச்சர் துணைவேந்தர்களுக்கு மாநாட்டில் பங்கேற்க வேண்டாம் என்று தொலைபேசியில் மிரட்டல் விடுத்தது பயனளிக்காத நிலையில் முதல்வர் ஸ்டாலின் காவல்துறையை பயன்படுத்தினார் என்றும் அவர் தனது பதிவில் சரமாரி குற்றசாட்டுகளை முன்வைத்திருந்தார்.
ஆளுநர் ஆர்.என்.ரவி எக்ஸ் பதிவு
“The way Hon’ble CM Thiru. Stalin used police to deter the Vice-Chancellors of state universities from participating in the prescheduled conference today is reminiscent of the Emergency days. When telephonic threats from Minister Higher Education to the VCs not to participate in…
— RAJ BHAVAN, TAMIL NADU (@rajbhavan_tn) April 25, 2025
ஆர்.என்.ரவி குற்றச்சாட்டுக்கு அமைச்சர் கோவி செழியன் பதில்
ஆளுநர் ஆர்.என்.ரவியின் இந்த குற்றச்சாட்டுக்கள் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், அது குறித்து உயர்கல்வி துறை அமைச்சர் கோவி. செழியன் பதில் அளித்துள்ளார். இது குறித்து கூறியுள்ள அவர், மிரட்டல் அரசியல் எல்லாம் பாஜகவின் டிஎன்ஏவில் தான் ஊறிக் கிடக்கிறது. துணிந்து மாநில உரிமைக்காக எதிர்த்து நிற்பது தான் எங்களுடைய டிஎன்ஏவில் இருக்கிறது என்று கூறியுள்ளார். மோடி பதவியேற்ற பிறகு பிடிக்காத மாநில அரசுகளுக்கு ஆளுநர்களை வைத்து கொடைச்சல் கொடுக்கப்படுகிறது. தமிழ்நாடு அரசோடு மல்லு கட்ட வேண்டும் என்ற ஆத்திரத்தில் ஆர்.என்.ரவி துணைவேந்தர் மாநாட்டை கூட்டி இருக்கிறார் என்று அவர் கூறியுள்ளார்.
மேலும், உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு பிறகு சட்டத்திற்கு புறம்பாக துணைவேந்தர்கள் மாநாட்டை கூட்டியிருக்கிறார். மாநாட்டில் பங்கேற்பது சட்டத்திற்கு எதிராக அமையும் என கருதியே துணைவேந்தர்கள் மாநாட்டை புறக்கணித்துள்ளனர். இதற்கு அரசு எப்படி பொறுப்பேற்க முடியும் என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.