MDMK Internal Rift: மனதளவில் பாதிப்பு! என்னால் களங்கம் வேண்டாம்.. தழுதழுத்து பேசிய துரை வைகோ!
Durai Vaiko Resignation: மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் (மதிமுக) முதன்மைச் செயலாளர் துரை வைகோ பதவி விலகியுள்ளார். இது கட்சிக்குள் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தேர்தல் நெருங்கி வரும் நிலையில், இந்தப் பதவி விலகல் திமுக கூட்டணிக்குள் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. துரை வைகோ, தனது முடிவுக்கு உட்கட்சி பிரச்னைகளையும், தனது மன அழுத்தத்தையும் காரணம் காட்டியுள்ளார். அவரது பதவி விலகல் கட்சியின் எதிர்காலத்திற்கு என்ன தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது இன்னும் தெளிவாகவில்லை.

சென்னை, ஏப்ரல் 19: திராவிட முன்னேற்ற கழகத்தின் கூட்டணியில் அங்கம் வகிக்கும் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்திலும் (Marumalarchi Dravida Munnetra Kazhagam) உட்கட்சி பூசல் நிலவி வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பாக பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவராக பதவி வகித்த அன்புமணி ராமதாஸ், அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸால் நீக்கப்பட்டார். அதனை தொடர்ந்து, தற்போது, மதிமுக முதன்மை செயலாளர் பொறுப்பு வகித்து வந்த துரை வைகோ (Durai Vaiko) பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்தார். இது மதிமுக கட்சியினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இன்னும் சட்டமன்ற தேர்தல் நடைபெற ஓராண்டுக்கு குறைவாகவே உள்ள நிலையில், துரை வைகோ முக்கிய பதவியில் இருந்து விலகியது கூட்டணி கட்சிக்குள் சலசலப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
மனதளவில் பாதிப்பு:
இதுகுறித்து செய்தியாளர்களை சந்தித்து துரை வைகோ பேசியதாவது, “ நான் இதுவரை கடந்த 4 வருடமாக நேரடி அரசியல் வந்ததற்கு பிறகு, செய்தியாளர்கள் எந்த கேள்விகளை எழுப்பினாலும் அதற்கு பதில் சொல்வேன். ஆனால், இது உட்கட்சி விவகாரம், இதை இயக்க தலைவர்கள் மற்றும் நிர்வாகிகள் எடுக்கக்கூடிய முடிவு. நான் என்ன காரணத்திற்காக விலகினேன் என்பதை எனது அறிக்கையில் தெளிவாக குறிப்பிட்டுள்ளேன். இதுகுறித்து கட்சி தொண்டர்கள் முதற்கொண்டு என்ன நினைக்கிறார்கள் என்பதை மாவட்ட செயலாளர்கள் நாளை தெரிவிப்பார்கள். அவர்கள் எடுக்கும் முடிவே இறுதி முடிவு.
என்னை பொறுத்தவரை இப்படிப்பட்ட சூழ்நிலையில் என்னால் தொடர முடியாது. இயக்கம் என்றால் ஒரு சில கட்டுப்பாடுகள் இருக்க வேண்டும். விலகுவது என்பது என்னுடைய முடிவு, கட்சியுடைய முடிவு அல்ல. இந்த பதவியில் இருப்பதால்தான் இதுமாதிரியான பிரச்சனைகள் வருகிறது. என்னால் கட்சி தலைமைக்கு பிரச்சனைகள் வரக்கூடாது என்று பார்க்கிறேன். ஒரு தனிப்பட்டவருடைய நிலைமையால் கட்சி தலைமைக்கு களங்கம் வந்துவிடக்கூடாது. மதிமுகவில் ஒரு தொண்டனாகவும், நாடாளுமன்ற உறுப்பினராகவும் தொடர்ந்து செயல்படுவேன்.
7 ஆண்டுகளுக்கு முன்பு என்னை கட்சிக்கு அழைக்கும்போது நான் முதலில் விருப்பம் இல்லையென்றே தெரிவித்தேன். நிர்பந்தம் காரணமாகவே கட்சிக்குள் வந்தேன். அதிக ஜனநாயகம் சில நேரங்களில் பிரச்சனைகளை உண்டாக்கிவிடுகிறது. முதன்மை செயலாளராக நான் பல முக்கிய முடிவுகள் எடுக்கும்போது சில சிக்கல்கள் ஏற்படுகிறது. கட்சிக்குள் சிலர் சிதைக்க முற்படும்போது, மதிமுகவின் அடுத்தக்கட்ட பயணம் மிகவும் கஷ்டமாக உள்ளது. என்னை பொறுத்தவரை மனதளவில் மிகவும் கஷ்டப்பட்டுள்ளேன். என்னால் கட்சிக்கோ, தலைமைக்கோ எந்த களங்கமும் ஏற்படக் கூடாது என நினைக்கிறேன்” என்று தெரிவித்தார்.
முன்னதாக, இதுகுறித்து மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளர் வைகோ பேசுகையில், “ துரை வைகோ மதிமுகவின் முக்கிய பதவியில் இருந்து விலகியதை டிவி பார்த்துதான் அறிந்து கொண்டேன். மதிமுக கட்சி பொறுப்பில் இருந்து விலகும் துரை வைகோவின் முடிவு அதிர்ச்சியை தந்துள்ளது.” என்று கூறினார்.